Published:Updated:

`விரைவிலேயே ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம்' - அருண் ஜெட்லி தகவல்!

`விரைவிலேயே ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம்' - அருண் ஜெட்லி தகவல்!
`விரைவிலேயே ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம்' - அருண் ஜெட்லி தகவல்!

ஜி.எஸ்.டி வரி விதிப்பு கட்டமைப்பை எளிமைப்படுத்தும் முயற்சியாக, விரைவில் ஒற்றை ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

`விரைவிலேயே ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம்' - அருண் ஜெட்லி தகவல்!

இது தொடர்பாக அவர், ' ஜி.எஸ்.டி-யின் 18 மாதங்கள்' ( Eighteen Months of the GST) என்ற தலைப்பில் தனது வலை தளத்தில் எழுதியிருப்பதாவது, ``2017 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த 'ஜி.எஸ்.டி' என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை, 5, 12, 18 மற்றும் 28 என 4 வரி விகிதங்களாக அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி  வரி விகிதங்களை 4 அடுக்குகளாக அமலுக்குக் கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணமே, எந்த ஒரு பொருளும் வாட் வரி முறையின்போது இருந்ததைவிட அதிகமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

வரும் நாள்களில், 18 மற்றும் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இணைக்கப்பட்டு, அதற்கு இடைப்பட்ட  ஒரு வரி விகிதம் அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் பல அடுக்காக இருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 28 சதவிகிதம் முழுமையாக ஒழிக்கப்படும். ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம் கொண்டு வரப்படும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜெட்லியின் இந்த அறிவிப்புகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி வல்லுநர்கள், "12 மற்றும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் இணைக்கப்பட்டு 15 சதவிதமாக, 2019 இடைக்கால பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில், " ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் ஏராளமான பொருள்களுக்கு அதிகமான வரி விதிப்பு இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை அரசு எதிர்கொண்டது.  தற்போது, 31 சதவிகித வரி விதிப்பின் கீழ் உள்ள பொருள்கள், 28 சதவிகித பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டன. வருவாய் அதிகரிப்பால் வரி விதிப்பு விகிதங்கள் மேலும் குறைக்கப்பட்டுவருகின்றன. புகையிலைப் பொருள்கள், ஆடம்பர வாகனங்கள், ஏசி, பெரிய அளவிலான டி.வி-கள் உள்ளிட்ட சில ஆடம்பரப் பொருள்களைத் தவிர்த்து, மீதமுள்ள 28 பொருள்களும் 28 சதவிகித வரி விதிப்பிலிருந்து 18 சதவிகிதம் மற்றும் 12 சதவிகித வரி விதிப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. 

`விரைவிலேயே ஒற்றை ஜி.எஸ்.டி வரி விகிதம்' - அருண் ஜெட்லி தகவல்!

எங்களின் அடுத்த இலக்கு, சிமென்ட்டை குறைந்த வரி விதிப்பின் கீழ் கொண்டுவருவதுதான். மற்ற கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் ஏற்கெனவே 28 சதவிகிதத்திலிருந்து 18 மற்றும் 12 சதவிகிதத்துக் கொண்டு வரப்பட்டுவிட்டன" என்று ஜெட்லி அதில் மேலும் எழுதியுள்ளார். 

இதனிடையே, கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு இப்போது 12 சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை 5 சதவிகிதமாகக் குறைப்பது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.