Published:Updated:

டிடிஎஸ்: சந்தேகங்கள்... தீர்வுகள்!

சி.சரவணன்

டிடிஎஸ்: சந்தேகங்கள்... தீர்வுகள்!

சி.சரவணன்

Published:Updated:

வருமான மூலத்தில் பிடிக்கப்படும் வரியான டிடிஎஸ் குறித்துப் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள். இந்தச் சந்தேகங்களுக்கு வருமான வரித் துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவியிடம் விளக்கம் கேட்டோம்.

?டிடிஎஸ், டிசிஎஸ் என்றால் என்ன? இதன் அவசியம் என்ன?

''ஒருவரின் செலவு மற்றொருவரின் வருமானம் ஆகும். அந்த வருமானத்துக்குண்டான வரி விடுபடாமல் இருப்பதற்காகவும், அனைத்து வரியும் சேர்த்து செலுத்தும் நபருக்கு உண்டாகும் மொத்த வரிச் சுமையைத் தவிர்க்க, அந்த நபருக்குச் செலுத்தும் தொகையில் இருந்து வரிப் பிடித்தம் செய்வது டிடிஎஸ் (Tax Deducted at Source) ஆகும். உதாரணமாக, ஊதியம், வாடகை, வட்டி, ஒப்பந்தத் தொகை போன்றவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோலவே, ஒரு சில பொருட்களை ஏலத்தின் மூலம் விற்கும்போதோ அல்லது குத்தகைக்கு விடும்போதோ அதற்குண்டான தொகையைப் பெறும்போது வரியையும் சேர்த்துப் பெறுவதே டிசிஎஸ் (Tax Collection at Source) ஆகும். உதாரணம், பீடி இலைகள், உற்பத்திக் கழிவுகள், காட்டில் விளையும் பொருட்கள், மதுபானம், வாகனம் நிறுத்தும் இடம் போன்றவை.

இவ்வாறு வரிப் பிடித்தம் செய்வதன் நோக்கம், வரி ஏய்ப்பைத் தடுப்பதே ஆகும். இதன்மூலம் பெறப்படும் வரி, நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மூலதனமாகப் பயன்படுத்தப்படுகிறது.''

டிடிஎஸ்: சந்தேகங்கள்... தீர்வுகள்!

?அதிகமாகப் பிடிக்கப்பட்ட டிடிஎஸ் தொகையை எப்படி திரும்பப் பெறுவது?

''அதிக தொகை பிடிக்கப்பட்ட நபர், தனது வருமான வரிக் கணக்கை உரிய படிவத்தில் தாக்கல்செய்து, கூடுதலாகப் பிடிக்கப்பட்ட வரித் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.''

?ஒருவரிடம் பிடிக்கப்பட்ட டிடிஎஸ் அவரின் கணக்கில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?

''ஆன்லைன் மூலமாக, 26 ஏஎஸ் என்ற படிவத்தில், பான் நம்பரை மையமாகவைத்து, தன்னிடம் பிடிக்கப்பட்டுள்ள மொத்த வரித் தொகையையும் அறிந்துகொள்ளலாம். வேறு ஒருவரின் கணக்கில் தவறுதலாக டிடிஎஸ் தொகை வரவுவைக்கப்பட்டு இருந்தால், வருமான வரித் துறையை அணுகி, அதற்குண்டான விவரங்களை நேரடியாகக் கேட்டு சரிசெய்து கொள்ளலாம்.''

?பிடிக்கப்பட்ட டிடிஎஸ் தொகையை, கணக்கில் செலுத்தாதவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது..?

''வருமான வரித் துறை ஆணையர் (டிடிஎஸ்), வருமான வரித் துறை, 121, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை  600 034 என்கிற முகவரிக்குப் புகார் மனு அனுப்பலாம்.''

?சொத்துப் பரிமாற்றத்தில், சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்குமேல் செல்லும்போது, 1% டிடிஎஸ் பிடித்துக் கட்டவேண்டும் என்பது அரசு விதி. இதுபற்றி விளக்கிச் சொல்ல முடியுமா..?  

''ஒருவர் விளைநிலம் அல்லாத அசையாச் சொத்து வாங்கும்போது, அந்தச் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 1% வரிப் பிடித்தம் செய்து 26 க்யூ.பி என்ற படிவத்தில், விற்பவரின் பான் நம்பரை குறிப்பிட்டு, இந்தத் தொகையை வங்கியில் செலுத்தவேண்டும். வரிப் பிடித்தம் செய்யும் நபர், தன்னுடைய சொந்த பான் நம்பரைக் குறிப்பிட்டால் போதுமானது. இந்தப் பரிவர்த்தனைக்கு டேன் (டாக்ஸ் அக்கவுன்ட் நம்பர்) அவசியமில்லை.

மனையாக வாங்கினால், மனையின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்குமேல் இருந்தால் 1% வரி பிடிக்கவேண்டும்.  அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியாக இருப்பின், நிலம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் மதிப்பும் சேர்ந்து ரூ.50 லட்சம் ரூபாயாகவோ அதற்கு மேலாகவோ இருந்தால் வரிப் பிடித்தம் செய்யவேண்டும்.

?டிடிஎஸ் விஷயத்தில் பொதுவாக நிகழும் தவறுகள் என்ன..?

''வரி பிடித்தம் செய்வதில்லை; பிடித்தம் செய்த வரியை உரிய நேரத்துக்குள் அரசுக் கணக்கில் செலுத்துவதில்லை; வரி பிடித்ததற்குண்டான உரிய படிவத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதில்லை; வரி பிடிக்கப்படுவோரின் பான் நம்பரை வரி பிடித்ததற்கான படிவத்தில் சரியாகக் குறிப்பிடுவதில்லை.

தவிர, வரி செலுத்துவதற்கு உரிய சலானை சரியாகப் பூர்த்திச் செய்வதில்லை; அதில் குறிப்பிட வேண்டிய ஆண்டு, தொகை, பிரிவு, டேன் ஆகியவற்றில் தவறுகள் நிகழ்கின்றன. வரி பிடித்ததற்குண்டான படிவத்தை (16/16ஏ) பதிவிறக்கம் செய்து வரி பிடிக்கப்படுவோருக்கு வழங்குவதில்லை.''

?வருமான வரி வரம்புக்குள் வராத நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானம், புத்தகச் சன்மானம் போன்றவற்றில் டிடிஎஸ் பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

''ஒருவருடைய மொத்த ஆண்டு வருமானம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் ஈட்டும் வட்டி வருமானத்தையும் சேர்த்து வருமான வரி வரம்புக்குக் கீழே இருப்பின், அவர்கள் 15ஜி / 15எச் என்ற படிவத்தை வங்கிகளிடம் சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். இதுதவிர, மற்ற வருமான வரி விலக்கலுக்கு, வருமான வரித் துறையை அணுகி, 197 என்ற சான்றிதழைப் பெறலாம். இதைப் பெறுவதற்கு, ஃபார்ம் 13 என்ற படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.''

?பான் கார்டு எண் கொடுக்கவில்லை என்றால் டிடிஎஸ் அதிகமாகப் பிடிப்பார்களா?

''ஆம். பான் கார்டு எண்ணை கொடுக்கவில்லை என்றால், 10% வரம்பில் வந்தாலும் 20% டிடிஎஸ் பிடித்தம் செய்தாகவேண்டும்.''

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism