நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா?

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா?

கேள்வி-பதில்

?நான் ரயில்வே ஊழியர். வருடத்துக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். டிடிஎஸ் பிடித்தம் செய்த படிவம் 16 இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஏதாவது பிரச்னை வருமா?

- பாபுஜி, மைசூர். சென்னை வருமான வரி அலுவலக அதிகாரிகள்.

''வருமான வரி வரம்புக்குமேல் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். உங்களின் வரிக்கு உட்பட்ட வருமானம் நிதியாண்டில் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், நீங்கள் இ-ஃபைலிங்தான் செய்ய வேண்டும். இ-ஃபைலிங் முறையில் முந்தைய ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமானத்துக்கு உரிய வரியைச் செலுத்தியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் வருமான வரிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. அதனால் வருமான வரித் துறையிலிருந்து, 'ஏன் வருமான வரி தாக்கல் செய்யவில்லை?’ என நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா?

?ஆர்பிட் கார்ப்பரேஷன் பங்குகளை ரூ.10 ஆயிரத்துக்கு வைத்துள்ளேன். சராசரியாக இந்தப் பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கினேன். தற்போது இந்தப் பங்கின் விலை 23 ரூபாயாக உள்ளது. இந்தப் பங்குகளை என்ன செய்வது?

- ஏ.அல்லிமுத்து, சேலம். வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

''ஆர்பிட் கார்ப்பரேஷன், ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமானம் மற்றும் கான்ட்ராக்ட் வேலைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் எந்தவிதமான புராஜெக்ட்டையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த நிறுவனத்துக்கு எந்தவிதமான லாபமும் இல்லை. இதனுடன் இந்த நிறுவனத்துக்கு ஒழுங்குமுறை அமைப்புகளுடன் பிரச்னைகளும் உள்ளன. இதனால் 2013-14ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு ரூ.83.5 கோடி இழப்பு. இதுமட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு சுமார் 50 கோடி ரூபாய் கடனும் உள்ளது. இப்போது புதிதாக 4 புராஜெக்ட்டுகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 2014-15ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபம் ஈட்டும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பங்கின் விலை தற்போது ரூ.22-28-க்குள் வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை 28 ரூபாயைத் தாண்டும்போது விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது சந்தை உள்ள நிலை மற்றும் சீரடையும் நிறுவனத்தின் நிர்வாகம் ஆகியவற்றைக் கணக்கில்கொள்ளும்போது இந்த நிறுவனம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பங்கை வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைக் கவனிப்பது அவசியம்.''

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா?

?என் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். நான் என் பெற்றோருடன் அங்கு சென்று ஆறு மாதம் தங்கத் திட்டமிட்டுள்ளேன். எங்களுடைய செலவுக்கு எவ்வளவு தொகையைக் கொண்டு செல்ல முடியும்? அதை இந்திய ரூபாயாகக் கொண்டு செல்ல முடியுமா?

- - குமரேசன், திருப்பூர். சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு வருடத்துக்கு குறிப்பிட்ட அளவு தொகையைத்தான் எடுத்துச் செல்ல முடியும். அதாவது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஒரு வருடத்துக்கு டிராவல் செலவுக்காக 2 ஆயிரம் டாலரையும், செலவுக்கு 10 ஆயிரம் டாலரையும் எடுத்துச் செல்லலாம். இது ஒரு நபருக்கான அளவு. இந்திய ரூபாய் என்றால் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்ல முடியும்.''

?நான் வரி சேமிப்புக்காக சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தேன். இதைத் திரும்ப எடுக்கும்போது உள்ள யூனிட்களின் 'லாக்-இன்’ காலத்தை எப்படி தெளிவாகத் தெரிந்துகொள்வது? மேலும், டிவிடெண்ட் ரீ-இன்வெஸ்ட்மென்ட் திட்டத்தின் மூலமாகக் கிடைக்கும் யூனிட்டுகளுக்கு 'லாக்-இன்’ பீரியடு உண்டா?

@- எல்.இளங்கோ, புதுச்சேரி. ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டர்.

''நீங்கள் முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்துதான் முதலீட்டை வெளியே எடுக்க முடியும். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துள் ளீர்கள் எனில், ஒவ்வொரு எஸ்ஐபி தேதியிலிருந்தும் மூன்று ஆண்டுகள் கழித்துதான் முதலீட்டை வெளியே எடுக்க முடியும். டிவிடெண்ட்

ரீ-இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் தந்திருந் தால், உங்கள் கணக்கில் யூனிட் வரவு வைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்துதான் யூனிட்களை விற்க முடியும்.''

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் பிரச்னை வருமா?

?கரூர் வைஸ்யா பேங்க் பங்கு ஒன்று ரூ.603.80 என்கிற விலையில் 17.09.2010 அன்று வாங்கினேன். அது எனது டீமேட் அக்கவுன்ட்டில் 19.09.2010 அன்றுதான் வரவு வைக்கப்பட்டது. வரவு வைத்த தினத்தன்று அந்தப் பங்கின் விலை 100 ரூபாய்க்குமேல் குறைந்துவிட்டது. அதுகுறித்து விசாரித்தால், 17.09.2010 அன்று 5 ஷேருக்கு 2 ஷேர் போனஸ் என்றும் அதனுடைய ரெக்கார்டு தேதி 18.09.2010 என அறிவித்திருப்பது தெரியவந்தது. அந்த போனஸ் ஷேர் இதுநாள் வரை என் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனக்கு போனஸ் பங்குகள் உண்டா, இல்லையா?

 - வடிவேலு, பொள்ளாச்சி. எஸ்.லட்சுமணராமன், முதலீட்டு ஆலோசகர், ஆர்எம்ஆர் ஷேர்ஸ்.

''கரூர் வைஸ்யா பேங்க், போனஸ் பங்குகளுக்கு ரெக்கார்டு தேதியாக 18.09.2010 அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ரெக்கார்டு டேட்டைவிட எக்ஸ்-டேட்தான் முக்கியமானது. அதாவது, நீங்கள் பங்கு வாங்கிய தேதியிலிருந்து இரண்டு நாட்கள் (டி 2) கழித்துதான், உங்கள் கணக்கில் பங்கு வரவு வைக்கப்படும். அதாவது, 19.09.2010 அன்று உங்கள் கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறது. 16.09.2010 இந்தப் பங்கின் எக்ஸ் போனஸ் தேதியாகும். அதாவது, இந்த எக்ஸ் போனஸ் தேதிக்கு முன்பாக 15.09.2010 அன்று அல்லது அதற்குமுன் பங்கு வாங்கியிருந்தால் உங்களுக்கு போனஸ் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் 17.09.2010 அன்றுதான் பங்குகளை வாங்கியுள்ளீர்கள். எனவே, உங்களுக்கு போனஸ் பங்குகள் கிடைக்காது.'