நடப்பு
Published:Updated:

பிபிஎஃப் முதிர்வு தொகை... திரும்பப் பெற கட்டணமா?

இரா. ரூபாவதி

மிகப் பாதுகாப்பான, வரிச் சலுகை யுடன் கூடிய முதலீடு என பலரும் முதலீடு செய்வது பிபிஎஃப் திட்டத்தில்தான். இதில் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் செய்யும் முதலீட்டை 15 ஆண்டு களுக்கு எடுக்க முடியாது என்பதால் நீண்ட காலத் தேவைகளை இதன்மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டுக்கு சுமார் 8.7 சதவிகித வட்டி கிடைக்கிறது. வட்டி விகிதம் ஆண்டுக் கூட்டு வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இத்தனை சிறப்பம்சங்கள் இதில் இருந்தாலும், பிபிஎஃப் கணக்கில் சேமித்த பணத்தைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் மக்கள். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, முதிர்வு பணத்தைத் திரும்பப் பெறும்போது சில வங்கிகள் தேவை யில்லாத கட்டணங்களை வசூலிக்கிறது. அதாவது, பிபிஎஃப் முதிர்வுதொகை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கும் வசதி உள்ளது. சில வங்கிகள் இப்படி செய்யாமல், முதிர்வு தொகை வரைவு காசோலை அல்லது பே - ஆர்டர் (PAY ORDER) மூலம் தந்து, அதற்கு குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டணமாகப்  பெறுகின்றன. சமீபத்தில் ஒரு பெண்மணி தனது பிபிஎஃப் முதிர்வு தொகையைப் பெற ரூ.25 ஆயிரத்தைக் கட்டணமாகக் கட்டியிருக்கிறார்.

பிபிஎஃப் முதிர்வு தொகை... திரும்பப் பெற கட்டணமா?

மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தத் திட்டம்  அஞ்சலகம், வங்கி என இரண்டு அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப் படுகிறது. எனவே, இந்தப் பிரச்னை பற்றி இந்த இரு அமைப்புகளைச் சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். முதலில் நாம் சந்தித்தது சென்னை தலைமை அஞ்சல் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர்.

“தபால் நிலையங்களின் கீழ் துவங்கப் படும் பிபிஎஃப் கணக்கு முதிர்வு அடையும்போது, முதிர்வு தொகையைப் பணமாக அல்லது காசோலையாகத் தந்துவிடுவோம். அதாவது, ரூ.20 ஆயிரம் வரையிலான   முதிர்வுதொகையைப் பணமாகவும், அதற்குமேல் உள்ள தொகையை காசோலையாகவும் வழங்குவோம்.  மேலும், அஞ்சலகத்தில் பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அதற்கான தீர்வு காண்போம். இதுவரை முதிர்வுதொகையைத் திரும்பப் பெறுவதில் இதுபோன்ற சிக்கல் வந்த தில்லை. ஆனால், முதிர்வுதொகையை முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கும் வசதி அஞ்சலகத்தில் இல்லை” என்றார்.

பிபிஎஃப் முதிர்வு தொகை... திரும்பப் பெற கட்டணமா?

அடுத்து, சென்னையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில் அரசின் நேரடித் திட்டங்களைக் கவனிக்கும் உதவி பொதுமேலாளர் டி.சேகரிடம் கேட்டோம்.

‘‘பிபிஎஃப் திட்டம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதால், அதில் எழும் சிக்கலை மத்திய அரசின் விதிமுறைகளின்படி செயல் படுத்துவோம். அதாவது, முதிர்வு தொகையை அதே வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். வேறு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் வரைவு காசோலை, பே-ஆர்டர், ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎஃப்டி முறையில் முதிர்வு தொகையை வழங்குவோம். இதற்கு பொதுவாக கட்டணம்  வசூலிப்ப தில்லை" என்றார்.

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர் ஏதாவது சட்டரீதியான பிரச்னையில் சிக்கி, யாருக்காவது பணம் தரவேண்டி இருந்தால், பிபிஎஃப் கணக்கை அதனுடன் பிணையாகச் சேர்க்க முடியாது. இந்தப் பணத்தை முதலீட்டாளர் அல்லது நாமினியாக இருப்பவர் மட்டும்தான் பெற முடியும். பிபிஎஃப் முதிர்வுதொகையை திரும்பப் பெற கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால், வங்கி ஆம்புட்ஸ் மேன்களிடம்
 

புகார் அளிக்கலாம். மேலும், பிபிஎஃப் தொடர்பான புகார்களை விசாரிக்க கணக்கு வைத்திருக்கும் அஞ்சலகம் மற்றும் வங்கி தவிர வேறு அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை.

படங்கள்: ப.சரவணகுமார்,
தே.தீட்ஷித்.