Published:Updated:

பங்கு விற்பனைக்கான வருமான வரி... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் !

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களில் பெரும்பாலானோர், பங்குகளை வாங்குகிறார்கள்; குறிப்பிட்ட விலை அல்லது குறிப்பிட்ட சதவிகித லாபம் வந்தவுடன் விற்றுவிடுகிறார்கள். சிலர், வாங்கிய பங்கின் விலை தடாலடியாக இறங்கினால், விற்றுவிட்டு வெளியேறி விடுகிறார்கள். இது தவிர, அவர்கள் பெரிதாக எதையும் கவனிப்ப தில்லை. சற்றுக் கவனித்துச் செயல்படும்பட்சத்தில் குறிப்பாக, வருமான வரி விஷயத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் லாபத்தை அதிகரித்து, இழப்பைக் குறைக்க முடியும். இதற்குப் பங்கு முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது, இழப்பை எப்படி லாபத்தில் ஈடுகட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

பங்கு முதலீடு

முதலில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு பற்றி பார்ப்போம்.

குறுகிய கால மூலதன ஆதாய வரி

பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி 12 மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான காலத்தில் விற்றால் கிடைப்பது குறுகிய கால மூலதன ஆதாயம் / இழப்பு (Short Term Capital Gain / Loss) ஆகும். லாபம் இருக்கும்பட்சத்தில், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20% & 30%, புதிய வரி முறையில் 5%, 15%, 20%, 25% & 30%) இருந்தாலும், மூலதன ஆதாயத்துக்கு 15% வரி கட்ட வேண்டும். ஒருவர் வருமான வரி வரம்புக்குள் வரவில்லை எனில், வரி கட்ட வேண்டியதில்லை.

இதுவே இழப்பு ஏற்பட்டுள்ளது எனில், அந்த இழப்பை அடுத்து வரும் எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று லாபத்தில் ஈடுகட்ட முடியும். இந்த இழப்பை அடுத்துவரும் ஆண்டின் குறுகிய கால மூலதன ஆதாயம் அல்லது நீண்ட கால ஆதாயத்தில் கழித்துக்கொள்ளலாம்.

பங்கு விற்பனைக்கான வருமான வரி... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் !

நீண்ட கால மூலதன ஆதாய வரி

பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி 12 மாதங்களுக்குப்பிறகு விற்றால், கிடைப்பது நீண்ட கால மூலதன ஆதாயம்/ இழப்பு (Long Term Capital Gain/Loss) ஆகும். லாபம் இருக்கும்பட்சத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் இல்லாமல், 10% வரியைக் கட்ட வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வரவில்லை எனில், வரி கட்ட வேண்டியதில்லை.

இதுவே, இழப்பு எனில், அடுத்து வரும் எட்டு ஆண்டு களுக்கு அதை கணக்கில் காட்டி, லாபத்தில் ஈடுகட்ட முடியும். இந்த இழப்பை அடுத்தடுத்தஆண்டுகளில் வரும் நீண்ட கால ஆதாயத்தில் கழித்துக் கொள்ளலாம்.

பட்டியலிடப்படாத பங்குகள்...

பங்குச் சந்தையில் பட்டிய லிடப்படாத பங்குகளை வாங்கி இரண்டு ஆண்டு களுக்குள் விற்றால், கிடைக்கும் லாபத்துக்குக் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

குறுகிய கால மூலதன இழப்பு இருந்தால், அதைக் குறுகிய கால மூலதன ஆதாயம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டிக்கொள்ள லாம். இதுவே, இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கும் பட்சத்தில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு, 10% வரி அல்லது பணவீக்க சரிகட்டலுக்குப் (Indexation) பிறகு, 20% வரி கட்ட வேண்டும்.

பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் நீண்ட கால மூலதன இழப்பு இருந்தால், அதை நீண்ட கால மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம். பட்டியலிடாத பங்குகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயத்தில் பணவீக்க விகித சரிகட்டல் அனுமதிக் கப்படுவதால், பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் போல் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட வில்லை.

பட்டியலிடப்படாத பங்குகளின் மூலமான குறுகிய கால மூலதன ஆதாய இழப்பு மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய இழப்பை அடுத்த எட்டு ஆண்டு களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

பங்கு வர்த்தகம்

பங்குகளை வாங்கி அன்றே விற்கும் தின வர்த்தகத்தில் (Intraday Trading) ஈடுபடும்பட்சத்தில், அதன்மூலம் கிடைக்கும் லாபம் ஊக வணிக வருமானம் (Speculative Business Income) எனப்படும். இதற்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். இதுவே இழப்பு எனில், அதை அடுத்துவரும் நான்கு ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று ஈடுகட்ட முடியும்; அதுவும் ஊக வணிக வருமானத்தில்தான் ஈடுகட்ட முடியும்.

டெரிவேட்டிவ் வர்த்தகம்

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்கிற டெரி வேட்டிவ் வர்த்தகத்தில் (F&O Trading) ஈடுபட்டு லாபம் ஈட்டினால், அதற்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

இந்தப் பிரிவின் மூலம் கிடைக்கும் லாபம், ஊக வணிகம் அல்லாத வருமானம் (Non-Speculative Income) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இழப்பு இருந்தால், அதை அடுத்துவரும் எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று ஈடுகட்ட முடியும்; ஊக வணிகம் சாராத வருமானத்தில் ஈடுகட்ட முடியும்.

டிவிடெண்ட் வருமானம்

பங்கு முதலீடு மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

குறுகிய கால மூலதன இழப்பு மற்றும் நீண்ட கால மூலதன இழப்பு ஆகியவற்றை அடுத்துவரும் ஆண்டு களுக்கு எடுத்துச் செல்ல சரியான நேரத்தில், கெடு தேதிக்கு முன்னர் வரி கணக்குத் தாக்கல் செய்திருப்பது கட்டாயமாகும்!

வருமான வரியைக் குறைக்க..!

பங்கு முதலீட்டில் நீண்ட கால ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை என்பதால், அதற்கு ஏற்ப பங்குகளை விற்று லாபம் பார்ப்பதோடு, வருமான வரியையும் மிச்சப்படுத்த முடியும். தேவைப்பட்டால் அந்தப் பங்குகளை மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். இதில், பங்குத் தரகு கட்டணம் மற்றும் பங்கு விலை மாற்றத்தில் ஓரிரு சதவிகிதம் இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மொத்தமாகப் பங்குகளை விற்று லாபம் பார்க்கும்போது, ரூ.1 லட்சத்துக்கு மேற்படும் லாபத்துக்கு வரி கட்ட வேண்டிவரும். அப்போது, கூடுதலாக வரி கட்ட வேண்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்படி வருமான வரியை மிச்சப்படுத்த ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு பங்குகளை விற்பனை செய்வது லாபகரமாக இருக்கும்.