Published:Updated:

முன்தேதியிட்ட வருமான வரி... மத்திய அரசு திருத்தம் செய்தது ஏன்?

வருமான வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்தேதியிட்ட வருமான வரி விதிப்பு (Retrospective Tax) முறையில் மாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை, இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்திய வருமான வரி விதிப்பு சட்டம் (The Income Tax, 1961) மற்றும் இந்திய நிதிச் சட்டம் (The Finance Act, 2012) ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படுவதன் வாயிலாக வருமான வரித் துறை அதிகாரிகள் 2012-ம் ஆண்டுக்கு முற்பட்ட விவகாரங்களில் முன்தேதியிட்டு வரிகளை வசூல் செய்யும் முறை வாபஸ் செய்யப்படுகிறது.

கடந்த ஒன்பது வருடங்களாக சர்வதேச அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வந்த இந்த முன்தேதியிட்ட வரி விதிப்பு முறையில் தற்போது திருத்தம் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன..?

வருமான வரி சட்டத் திருத்தம் 2012..

2007-ம் ஆண்டில் வோடஃபோன் நிறுவனம், ஹட்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, ஹட்ச் நிறுவனத்தின் இந்திய உரிமைகளையும் வோடஃபோன் நிறுவனம் கைப்பற்றியது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக வோடஃபோன் நிறுவனம் அடைந்த மறைமுக லாபத்தின் மீதான வருமான வரியாக ரூ.7,990 கோடி தொகையைச் செலுத்த வேண்டும் என்று இந்திய வருமானவரித் துறை அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

‘அந்நிய மண்ணில் ஹட்ச் நிறுவன விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால், இந்திய அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை’ என்று இந்திய வருமான வரித் துறையின் நோட்டீஸை எதிர்த்து வோடஃபோன் தொடர்ந்த வழக்கு மும்பை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டாலும், 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வோடஃபோன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

2007-ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த வருமான வரி சட்டப் பிரிவுகளில் இருந்த சில ஓட்டைகளின் அடிப்படையிலேயே வோடஃபோன் நிறுவனம் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றதைக் கருத்தில் கொண்டு, அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி புதிய வருமான வரி சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தாலும் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், முன்தேதியிட்டு வரி விதிப்பு செய்யும் அதிகாரம் வருமான வரித் துறைக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வோடஃபோன் நிறுவன ஒப்பந்தத்தைக் குறிவைத்தே புதிய சட்டம் இயற்றப்பட்டிருந் தாலும், கெய்ர்ன் எனர்ஜி போன்ற மற்ற பல பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய வருமான வரித் துறையின் கிடுக்கிப்பிடியில் மாட்டிக் கொள்ளும் சிக்கல் எழுந்தது. எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பின.

2014-ம் ஆண்டு புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முன்தேதியிட்ட வரி விதிப்பு முறையை வாபஸ் பெற வேண்டும் என்று பெரு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை பலமாக எழுந்தாலும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடன்படவில்லை. மேலும், வோடஃபோன் நிறுவனத்தின் மீதான வரிவிதிப்பு நோட்டீஸ் நடவடிக்கையையும் வாபஸ் பெறவில்லை.

முன்தேதியிட்ட வருமான வரி... மத்திய அரசு திருத்தம் செய்தது ஏன்?

பன்னாட்டு நீதிமன்றங்களின் நிலைப்பாடு...

புதிய சட்டத் திருத்தங்களின் காரணமாக, இந்தியாவில் தமது வாதங்கள் எடுபடாது என்பதை உணர்ந்துகொண்ட வோடஃபோன் மற்றும் கெய்ர்ன்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு நீதிமன்றங்களில் இந்திய அரசின் மீது வழக்கு தொடர்ந்தன.

பல சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் தனது தீர்ப்பை வழங்கிய ஹாக் சர்வதேச நீதிமன்றம், இந்திய அரசாங்கம் கெய்ர்ன்ஸ் நிறுவனத்திடமிருந்து வசூல் செய்த வருமான வரியை (1.2 பில்லியன் டாலர்) திரும்ப வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. மேலும், வட்டி மற்றும் இதர இழப்புகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக 1.7 பில்லியன் டாலர் தொகையை இந்திய அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல் முறையீடு செய்த அதே நேரத்தில், ஹாக் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்திய வங்கிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் சர்வதேச சொத்துகளை முடக்க வேண்டும் என்று கெய்ர்ன்ஸ் நிறுவனம், உலகின் பல்வேறு நீதிமன்றங்களில் புதிய வழக்குகளைத் தொடுத்தது. கெய்ர்ன்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் அடிப்படையில் பாரிஸ் நீதிமன்றம் இந்திய அரசின் சில சொத்துகளை முடக்கியது.

சுமுக தீர்வை நோக்கி..?

சர்வதேச நீதிமன்றங்களின் தற்போதைய கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, முன்தேதியிட்ட வருமான வரி விதிப்பு சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய இந்தியா முன்வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, இந்தியா மீண்டுவரும் தற்போதைய சூழ்நிலையில், பன்னாட்டு முதலீடுகள் இந்தியப் பொருளாதார மீட்சியில் பெரும் பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இந்திய நிதியமைச்சர், முன்தேதியிட்டு செய்யப்படும் வருமான வரி விதிப்புக்கள் முதலீட்டு மனப்பாங்கை பாதிக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், 28.5.2012-க்கு முந்தைய மறைமுக வருமானத்தின் மீதான வரி விதிப்பு கோரிக்கைகள் திரும்பப் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வோடஃபோன் மற்றும் கெய்ர்ன்ஸ் நிறுவனங்களுடன் (நீதிமன்றங்களுக்கு வெளியே) பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்ப்பு எட்டப்படும் வாய்ப்புள்ளது.

இந்த நிறுவனங்களால் தொடுக்கப்பட்டுள்ள சர்வதேச வழக்குகள் வாபஸ் பெறப்படும் பட்சத்தில், இந்திய அரசால் ஏற்கெனவே மேற்கொள்ளப் பட்ட வரி வசூல் தொகை (வட்டித் தொகை இல்லாமல்) திரும்ப வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

சர்வதேச வழக்குகளை மேலும் திறம்படக் கையாண்டு இந்திய அரசின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்க வேண்டும் என்று ஒரு தரப்பில் கருதப்பட்டாலும், பன்னாட்டு நீதிமன்றங்களின் தற்போதைய கடுமையான நிலைப்பாட்டின் அடிப்படையிலும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான நடப்புப் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையில் அந்நிய முதலீட்டின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சரியானதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு