Published:Updated:

உங்கள் முதலீட்டுக்கான வரி விதிப்புகளைக் கவனியுங்கள்..!  முதலீட்டுக்கு முந்தைய முக்கிய விஷயங்கள்...

வரிக் கணக்கீடு
பிரீமியம் ஸ்டோரி
News
வரிக் கணக்கீடு

P R O F I T T A X

நா.சரவணகுமார், ஆலோசகர், Richinvestingideas.com

நம்மில் பலரும் முதலீடு செய்வதில் காட்டும் ஆர்வத்தை, அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டுவதில் காட்டுவதில்லை. இதனால், பலருக்கும் வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்துகொண்டிருக்கிறது. ஒருவர் நிதிச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் ஈட்டும் லாபத்துக்கு கட்டாயம் வருமான வரி கட்டியாக வேண்டும்.

நா.சரவணகுமார், 
ஆலோசகர், 
Richinvestingideas.
com
நா.சரவணகுமார், ஆலோசகர், Richinvestingideas. com

பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் குறுகியகாலத்தில் நீங்கள் ஈட்டும் லாபத்துக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி உண்டு. நீண்டகாலத்தில் ஈட்டும் வருவாய்க்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி உண்டு.

முதலீட்டு வகை மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வரி விதிப்பு மாறுபடும். பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களுக்கு குறுகியகால மூலதன ஆதாய வரி 15% ஆகும். அதாவது, நீங்கள் வாங்கிய பங்குகளை அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை ஒரு வருடத்துக்குள் விற்றால் (வாங்கிய நாளிலிருந்து), அதற்கான ஆதாயம், குறுகியகால மூலதன ஆதாயமாகக் கணக்கிடப்பட்டு 15% வரி விதிக்கப்படும். ஒரு வருடத்துக்குப் பின் விற்கப்படும் முதலீட்டுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி உண்டு. 

வரிக் கணக்கு
வரிக் கணக்கு

ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் ஈட்டிய நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும்போது, அதற்கான வரி எதுவும் இல்லை. ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தொகைக்கு மட்டும் (எவ்வளவு தொகையாக இருந்தாலும்) 10% வரி விதிக்கப்படும்.

உதாரணத்துக்கு, ஒருவருக்கு நீண்டகால மூலதன ஆதாயம் ரூ.3 லட்சம் கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.  

பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகள் மற்றும் வீடு, மனைகளுக்கு (அசையா சொத்துகள்) நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்கத்தை சரிகட்டிய பிறகு (Indexation benefit) 20% விதிக்கப்படும். இங்கே நீண்டகாலம் என்பது இரண்டு வருடங்களுக்கு மேலான விற்பனையைக் குறிக்கும். இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தை, இந்தச் சொத்துப் பிரிவுகளுக்கு குறுகியகால மூலதன ஆதாயத்துக்கு ஒருவர், அவரின் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப (Marginal Tax rate) வரி கட்ட வேண்டும்.

கடன் பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் போன்ற முதலீடுகளை விற்பனை செய்யும்போது, நீண்டகால மூலதன ஆதாய வரியாக 20% (பணவீக்கத்தை சரிகட்டிய) கட்ட வேண்டும். குறுகிய கால மூலதன ஆதாய வரியாக ஒருவரது வருமான வரி வரம்பு அடிப்படையில் செலுத்த வேண்டும். இங்கே குறுகிய காலம் என்பது ஒரு வருடத்துக்கும் குறைவாகும். நீண்டகாலம் என்பது மூன்று வருடங்களுக்கும் மேலான முதலீட்டு விற்பனை ஆகும்.

அரசு வெளியிடும் தங்கப் பத்திரத் திட்டத்தில் (Sovereign Gold Bond - SGB) முதிர்வுக் காலம் முடியும் வரை முதலீட்டை வெளியே எடுக்காமல் இருக்கும் நிலையில், மூலதன ஆதாய வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. பொதுவாக, சேமிப்பைப் பொறுத்தவரை, டி.டி.எஸ் (TDS) பிடித்தம் என்பது நடைமுறையில் உள்ளது. நாம் வருமான வரி வரம்பில் இல்லாமல் இருந்தால், அதற்கான படிவத்தை அளித்து, பிடித்த தொகையைத் திரும்ப பெறலாம். இதுவே டி.டி.எஸ் பிடித்தம் போக நாம்தான் மேலும் வரி செலுத்த வேண்டுமென்றால், வரி தாக்கல் செய்யும்போது அதற்கான செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஆனால், முதலீட்டில் பெரும்பாலும் டி.டி.எஸ் பிடித்தம் என்றில்லை. நாம்தான், முதலீட்டு மூலமான லாபம் அல்லது நஷ்டத்தைக் கணக்கிட்டு, வருமான வரித் தாக்கல் செய்யும் போது சொல்ல வேண்டும். வருமான வரி வரம்பில் உள்ளவர்கள், கீழே உள்ள அட்டவணையில் சொல்லப்பட்ட விவரங்களைப் பார்த்து, தாங்கள் எந்தப் பிரிவில் உள்ளோம் என்பதைக் கருத்தில்கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்துக்கு வரி செலுத்தலாம்.

வரி விதிப்பு
வரி விதிப்பு

முதலீட்டில் மற்றொரு பலன் என்னவென்றால், நீங்கள் அடைந்த நஷ்டத்தையும், உங்களது லாபத்தில் கழித்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த முறை நீங்கள் குறுகியகால அல்லது நீண்டகாலத்தில் அடைந்த ஆதாயம் / இழப்பைப் பொறுத்து மாறுபடும்.

படிவம் 26As-ல் நிதிச் சந்தையில் நீங்கள் ஈட்டிய லாபம் மற்றும் நஷ்டம் சார்ந்த தரவுகளும் தானியங்கியாகச் சேர்க்கப் படுகிறது. உங்களுக்குக் கிடைத்திருக்கும் மூலதன ஆதாயம், முதலீடு மூலம் கிடைத்த லாபத்துக்குப் பிடிக்கப்பட்ட டி.டி.எஸ் ஆகிய விவரங்கள் அந்தப் படிவத்தில் இருக்கும். எனவே, முதலீடு செய்வதில் நம்முடைய ஈடுபாடு இருப்பது போல, வரி விதிப்புகளையும் நாம் அறிந்து கொள்வது நல்லது.

சரியான முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதும், பின்னாளில் ஏற்படக்கூடிய நிதி சிக்கலைக் குறைக்கும். நீங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும் மூலதன ஆதாயத்தை வரிக் கணக்கு தாக்கலில் காட்டி அதற்கு வரி கட்ட வில்லை எனில், வருமான வரித்துறை யிலிருந்து நோட்டீஸ் வரும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பிட்ஸ்

குறிப்பிட்ட சில பிராண்டுகளின் கார்களை ரூ.34,000 அளவுக்கு விலையை உயர்த்தி இருக்கிறது மாருதி நிறுவனம். ஜனவரி 18-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது!

பிட்ஸ்

டந்த டிசம்பரில் போன்பே மூலம் ரூ.1,82,126 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கூகுள் பே ரூ.1,76,199 கோடி பணம் பரிமாற்றம் ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்!