Published:Updated:

வலுக்கும் கருத்து வேறுபாடு... முடிவுக்கு வருகிறதா ஜி.எஸ்.டி வரிமுறை..? இனி என்ன ஆகும்?

GST

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

கடந்த 28.05.2021 அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களின் மீதான வரிகளைத் தள்ளுபடி செய்யும் விவகாரம் தொடர்பாக, கடும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி-யின் பயன்பாடு மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய்ப் பங்கீடு ஆகியவை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக மாறியுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததுடன் வரி வசூலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட போது மாநிலங்களின் வரி வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்வது தொடர்பாகப் பெருவாரியான சர்ச்சைகள் எழுந்து, இறுதியில் ஒருவிதமாக மத்திய, மாநில அரசு களுக்கிடையே உடன்பாடு எட்டப் பட்டது. ஆனால், இந்த முறையோ மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கடும் மோதல் உருவாகியுள்ளதுடன், மாநிலங்களின் அதிகாரப் பரவல் குறித்தும் ஜி.எஸ்.டி வரிமுறையின் எதிர்காலம் குறித்தும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

வலுக்கும் கருத்து வேறுபாடு...
முடிவுக்கு வருகிறதா ஜி.எஸ்.டி வரிமுறை..? இனி என்ன ஆகும்?

ஜி.எஸ்.டி அறிமுகத்தின் பின்னணி...

இந்திய அரசியலமைப்புச் சட்டம், நமது இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றே வர்ணிக்கிறது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தனித்தனியே வரிவிதிப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரடி வருவாய் வசூல் அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மறைமுக வசூல் அதிகாரங்கள் மத்திய, மாநில அரசு களுக்குமிடையே பகிர்ந்தும் வழங்கப் பட்டுள்ளன. தேசத்தின் பாதுகாப்பு, பன்னாட்டு உறவு மற்றும் வணிகம் போன்ற ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவாகவுள்ள விவகாரங்கள் ஒன்றிய அரசின் வரையறையிலும் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் சார்ந்த விவகாரங்கள் மாநில அரசின் பொறுப்பிலும் இருந்தன.

ஆனால், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் வரிப் பங்கீடு ஒரு பிரச்னையாக உருவாகவில்லை. காலப்போக்கில், மத்தியில் ஒரு கட்சியும் மாநிலங்களில் வேறு கட்சிகளும் ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, இது ஒரு பிரச்னை யாக உருவானது. உலகமயமாக்கல் தொடங்கிய 1990-களில் மாநிலங்களின் கரங்கள் வலுப்பெறத் தொடங்கின.

மேலும், வெவ்வேறு மாநிலங்களில் வரி வசூல் முறையும் வரி விகிதங்களும் வேறுவேறு மாதிரியாக இருந்தது, தொழில் துறையினருக்கும் சாதாராண பயனாளிகளுக்கும் பெரும் சிரமமாக இருந்ததால், ஒற்றைச் சாளர வரிமுறை மற்றும் வரி விதிப்பு முறையில் எளிமையின் தேவை உணரப்பட்டது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை 2000-ம் ஆண்டில் முதன்முறையாக முன்மொழியப் பட்டன. ஜி.எஸ்.டி வரி அறிமுகத்தால் மாநிலத்தின் வரி வருவாய் குறையும் என்று அச்சமடைந்த தமிழ்நாடு போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறையை ஏற்றுக்கொள்வதில் ஆரம்பத்தில் தயக்கம் காட்டின. வரி விதிப்பில் மாநில அரசின் தனிப்பட்ட உரிமைகள் பறிபோவதுடன், ஜி.எஸ்.டி வரி விதிப்பு அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு, உற்பத்தி சார்ந்த வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் சொல்லின. பல ஆண்டு களுக்குப் பிறகும், இது குறித்து மாநிலங்களிடையே ஒருமித்தக் கருத்து உருவாகாத காரணத்தால், மத்திய அரசு ஒரு சமரசத்துக்கு முன்வந்தது. ஜி.எஸ்.டி அறிமுகமான பின் ஐந்து ஆண்டுகளுக்கு (2017-22) புதிய வரி விதிப்புமுறையால், வரி வசூலில் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களை மத்திய அரசு ஈடுகட்டும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த உறுதிமொழிக்கு சட்டரீதியான அங்கீகாரமும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் வாயிலாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1.07.2017 அன்று பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது வரலாறு.

நடந்தது என்ன..?

ஜி.எஸ்.டி வரிமுறையை நடைமுறைப்படுத்து வதில் ஏராளமான குளறுபடிகள் இருந்தாலும், பல துறைகளில் இரட்டை வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது ஜி.எஸ்.டி வரி விதிப்பு. இந்த வரிமுறை அறிமுகமானதால், இந்தியாவை ஒற்றைச் சந்தையாக மாற்றுவதில் ஓரளவுக்கு வெற்றி அடைந்துள்ளன. அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் குறிப்பாக, பெரு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி முறையால் நன்கு பலனடைந்தன.

அதே சமயம், ஜி.எஸ்.டி அறிமுகத்தின்போது, ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற கோஷம் பெரிதாக எழுந்தாலும், பல அடுக்குகளாகவே வரிகள் அமல்படுத்தப்பட்டன. அனைத்து சேவைகள் மற்றும் பொருள்களுக்கும் ஒரே வரி விகிதம் இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி வரிவிகிதம் 18 சதவிகிதத்தைவிட அதிகமாக இருக்காது என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஜி.எஸ்.டி வரியின் மீது செஸ் என்ற பெயரில் கூடுதலாக வரி வசூல் மேற்கொள்ளப்பட்டது.

வரி விகிதம் மிக அதிகமாக உள்ள அதே சமயத்தில், பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் உள்ள பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி வரன்முறைக்குள் கொண்டு வரப்படவில்லை. ஜி.எஸ்.டி வரிமுறையை நடைமுறைப்படுத்துவதும் பெரும் சவாலாக இருந்தது. ஜி.எஸ்.டி வரி முறைக்கு அவசியமான கட்டமைப்பை உருவாக்க இயலாத சாதாரண அமைப்புசாரா தொழில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஜி.எஸ்.டி ரீஃபண்ட் உரிய காலத்தில் செய்யப்படாததும் நிறுவனங்களுக்கு பணநெருக்கடியை ஏற்படுத்தியது.

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின், சாதாரண மக்களுக்கு பலன் தரும் வகையில் விலைவாசியில் வீழ்ச்சி ஏதும் ஏற்படவில்லை. பொருளாதார வளர்ச்சியும் சரிந்துகொண்டே வந்ததுடன் கடந்த நிதியாண்டில், கடந்த பல ஆண்டுகளில் காணாத உள்நாட்டு உற்பத்தி சரிவையும் இந்தியா சந்திக்க நேரிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு, ஒட்டு மொத்த வரி வசூல் பாதிக்கப் பட்ட நிலையில், மாநிலங்களுக்கு சட்டரீதியாக வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி ஈட்டுத் தொகையைத் தராமல் இழுத்தடித்ததும், மாநில அரசுகளைக் கடன் சந்தையிலிருந்து நேரடியாகக் கடன் பெற்றுக்கொள்ள அறிவு றுத்தியதும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

மத்திய அரசு காரணமா..?

மேலும், ஜி.எஸ்.டி வரி நடைமுறை மாநிலங்களின் அதிகாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளதுடன், மத்தியில் அதிகாரக் குவியலுக்கும் வித்திட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வரி வசூலில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்துள்ளன.

குறிப்பாக, ஜி.எஸ்.டி கவுன்சில் செயல்பாடுகள், பலவித சர்ச்சை களைக் கிளப்பி வருகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்வதால், ஜி.எஸ்.டி கவுன்சிலில் பல முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் பிரதிநிதி கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வரி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மாநில அரசுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றன.

தடுப்பூசி விவகாரம்...

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் மத்திய அரசின் ஆரம்பகட்ட நிலைப் பாடும் கொரோனா தடுப்புக்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி வரியைப் பொது மக்களின் நலன் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த தமிழ்நாடு போன்ற (ஜி.எஸ்.டி வரி வசூலில் பெரும் பங்கு வகிக்கும்) மாநிலங் களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தது மத்திய அரசு. இதனால், மருத்துவ ஜி.எஸ்.டி கட்டமைப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் எதிர்காலம் ஆகியவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

மக்களால் செலுத்தப்படும் வரிப் பணம் மத்திய அரசுக்கு சொந்தமானதா அல்லது மாநில அரசுக்குச் சொந்தமானதா என்பதைவிட மக்களின் வரிப் பணம் மக்களுக்கே சொந்தமானது என்றும் மக்களின் வரிப் பணம் உயிர் காக்கும் தடுப்பூசிக்காகப் பயன்படுத்தப் பட வேண்டும் என்றும் பரவலாக எழுந்த கருத்தைத் தொடர்ந்து, எல்லா வயதினருக்கும் தடுப்பூசியை வழங்க தற்போது மத்திய அரசு முன்வந்துள்ளது.

மறைமுக வரி விதிப்பைக் குறைப்பதும் நேரடி வரி விதிப்பை அதிகரிப்பதுமே ஒரு வளரும் சமுதாயத்துக்கான அடிப்படைத் தேவை ஆகும். மறைமுக வரியான ஜி.எஸ்.டி வரி வருவாய் மற்றும் பங்கீட்டு வழிமுறைகளில் தற்போதைய நடைமுறைக் குளறுபடிகளும், மத்திய அரசின் அதிகாரக் குவியல் முயற்சிகளும் தொடரும்பட்சத்தில், ஜி.எஸ்.டி-யின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் உள்ளது.

இந்த வரிமுறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டை முழுவதுமாக நீக்காவிட்டால், பாடுபட்டு கொண்டுவந்த ஜி.எஸ்.டி-யை இழக்க வேண்டியிருக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு