நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

முடிவுக்கு வந்த லிபார்... நமக்கு என்ன பாதிப்பு..?

நிதிச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிச் சந்தை

நிதிச் சந்தை

பன்னாட்டு நிதிச் சந்தையில் டெபாசிட்டு களைப் பெறவும் கடன்களை வழங்கவும் உலகின் பெரும்பாலான வங்கிகளால் பயன்படுத்தப்படும் வட்டி விகிதம் ‘லிபார்’ (London Interbank Offered Rate, சுருக்கமாக LIBOR) ஆகும். சர்வதேச நிதிச் சந்தையில் சுமார் 400 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான (இந்திய ஜி.டி.பி-யைப் போல நூறு மடங்குக்கும் மேல்) டெபாசிட்டுகள்/கடன்கள் ‘லிபார்’ விகிதத் துடன் இணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சந்தை நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா விலும்கூட பெரும்பாலான அந்நியச் செலாவணிக் கடன் களின் வட்டித் தொகையும் ‘லிபார்’ அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.

முடிவுக்கு வந்த லிபார்... நமக்கு என்ன பாதிப்பு..?

ஆனால், இந்த ‘லிபார்’ வட்டி விகிதத்தை 01.01.2022 முதல் இந்திய வங்கிகள் பயன்படுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி தற்போது அறிவுறுத்தியுள்ளது. மேலும், ‘லிபார்’ வட்டி விகிதத்துக்கு மாற்றாக இதர பெஞ்ச்மார்க் வட்டி விகிதங் களைப் பயன்படுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பெஞ்ச் மார்க் அந்நிய செலாவணி வட்டி விகிதமான மைபார் (Mumbai Interbank Forward Offer Rate, சுருக்கமாக, MIFOR) விகிதத்தை அதிகமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, இந்திய நிறுவனங்கள் புதிய வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் அந்நியச் செலாவணிக் கடன்களுக்கான வட்டி விகிதங்களின் உச்சவரம்பை 0.5% - 1.0% வரை உயர்த்தியுள்ளது.

அது சரி, ‘லிபார்’ வட்டி விகிதத்தை இப்போது ஏன் மாற்றப் படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் அதுபற்றிக் கொஞ்சம் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

‘லிபார்’ என்றால் என்ன..?

பிரிட்டனில் வங்கிகளுக்கு இடையேயான கடன்களுக்கான வட்டி விகிதமே (London Based Interbank Rate) ‘லிபார்’ என்று அழைக்கப்படுகிறது. லண்டன் நிதிச் சந்தையில் நடைபெறும் தினசரி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக் கப்படும் இந்த ‘லிபார்’ வட்டி விகிதத்தை லண்டன் நிதிச் சந்தையில் பங்குபெறும் 16 பெரும் பன்னாட்டு வங்கிகள் கூட்டாக நிர்ணயிக்கின்றன.

நிதிச் சந்தைகளின் தினசரி செயல்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் கணக்கிடப் படும் இந்த ‘லிபார்’ வட்டி விகிதம், ஒரு மாதம், 2 மாதம் என மாதங்கள் கணக்கிலும், ஒன்று இரண்டு என ஆண்டுகள் கணக்கிலும் நிர்ணயிக்கப் படுகின்றன. ‘லிபார்’ வட்டி விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் (டெபாசிட் தொகை மற்றும் கடன்களின் மீதான) வட்டி விகிதங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தியமைக்கப்படுகின்றன.

முடிவுக்கு வந்த லிபார்... நமக்கு என்ன பாதிப்பு..?

உலகை உலுக்கிய ‘லிபார்’ ஊழல்...

டாயிச் பேங்க், சிட்டி பேங்க், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட் லாண்ட், பர்க்லேஸ் பேங்க் போன்ற பன்னாட்டு வங்கிகள், ‘லிபார்’ வட்டி விகிதத்தைக் கூட்டாக நிர்ணயம் செய்யும் விவகாரத்தில் பெரும் முறை கேட்டில் ஈடுபட்டு வந்ததாக 2012-13-ல் தகவல் வெளியானது. இதைக் கண்டு உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகள் அதிர்ச்சியில் உறைந்துபோயின.

நிதிச் சந்தையில் தமது தனிப்பட்ட லாப நோக்கத் துக்காக, குறிப்பிட்ட சில வங்கிகள் ‘லிபார்’ விகிதங் களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ மாற்றி அமைத்த தகவல், ‘லிபார்’ வட்டி விகிதப் பயன்பாட்டின் மீதான பல்லாண்டு நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது.

ஏற்கெனவே கூறியது போல, பல ட்ரில்லியன் மதிப்பிலான கடன்களும் டெபாசிட்டுகளும் ‘லிபார்’ வட்டி விகிதத்தைச் சார்ந்திருந்த நிலையில், மிகப் பெரும் பண இழப்பு நேரிட்டிருந்தாலும் அந்த இழப்பு மிகப் பரவலாகப் பகிரப்பட்டிருந்ததால் தனிப்பட்ட முறையிலான இழப்பு குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. மேலும், புரிந்துகொள்ள சிக்கலான விஷயமாக இது இருப்பதால், பொது ஊடகங்களிலும் அதிகம் கவனம் பெறவில்லை.

களை இழந்த ‘லிபார்’ மார்க்கெட்...

‘லிபார்’ விவகாரம் வெளிவந்த பின்னர், அதை நிர்ணயம் செய்யும் பொறுப்பு பிரிட்டிஷ் வங்கிகள் சங்கத்திடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் ‘லிபார்’ வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் பொறுப்பை அமெரிக்காவைச் சார்ந்த இண்டர்கான்டிநென்டல் எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றப்பட்டத்துடன் ‘ஐஸ்லிபார்’ (Intercontinental Exchange London Interbank Offered Rate) என்ற புதிய பெயரும் வழங்கப்பட்டது.

மேலும், ‘லிபார்’ வட்டி விகிதத்தை 2021-ம் ஆண்டு வரை மட்டுமே தொடர அனுமதிக்க முடியும் என்று பிரிட்டிஷ் அரசின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துவிட்டது. அமெரிக்க மத்திய வங்கியும் ‘லிபாரு’க்கு மாற்றாக ‘சோஃபர்’ (Secured Overnight Financing Rate, சுருக்கமாக SOFR) என்ற புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதமானது அரசுக் கடன் பத்திரங்களின் வர்த்தகத்தின் அடிப்படையில் அமைவதால் அதிக அளவில் துல்லியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘லிபார்’ மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கள்...

இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆகியவை ஏற்கெனவே மாற்று வட்டி விகிதங்களின் அடிப்படையில் அந்நியச் செலாவணிப் பரிவர்த் தனைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. மற்ற இந்திய வங்கிகளும் புதிய வட்டி விகித முறைக்கு மாறுவதில் சிக்கல் இருக்காது என்பதே இப்போதைய நிலை.

‘லிபார்’ வட்டி விகிதம் முடிவுக்கு வருவது இந்திய நிதிச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், பல்லாண்டு காலம் சர்வதேச நிதிச் சந்தையில் முழு ஆதிக்கம் செலுத்திய ‘லிபார்’ வட்டி விகிதம் தனிப்பட்ட சிலரின் பேராசை யால் சட்டென முடிவுக்கு வந்திருப் பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். மாற்றம் ஒன்றுதானே என்றும் மாறாதது!