Published:Updated:

வரி Vs வரிப் பிடித்தம்... வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் லாபம்..!

வரிக் கணக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
வரிக் கணக்கு

வரிக் கணக்கு

நடப்பு நிதியாண்டுக்கான (2021-22) வரிக் கணக்கை சரிசெய்வதற்கான தருணமிது. அதற்குமுன் வட்டி வருமானத்துக்கு வருமான வரி பற்றி சில டிப்ஸ் இனி...

பொதுவாக, நம்முடைய வருமானத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதாவது, சம்பளம், கமிஷன், ஃபீஸ், தரகு, பென்ஷன், அன்யூட்டி, சுயதொழில் மற்றும் வணிகம் மூலமான வருமானம், சம்பளதாரர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் வீட்டு வசதி மற்றும் வாகன வசதி முதலானவற்றுக் கான பணமதிப்பு ஆகியவை முதன்மை வருமானம் ஆகும்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், சேமிப்புக் கணக்கு முதலானவை மூலம் கிடைக்கும் வட்டி, வீட்டுச் சொத்து மூலம் வரும் வாடகை, டிவிடெண்ட் ஃபேமிலி பென்ஷன், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் முதலனாவை இதர வருமானங்கள் ஆகும். முதன்மை வருமானமாக இருந்தாலும் சரி, இதர வருமான மாக இருந்தாலும் சரி, அனைத்து வகை வருமானத்துக்கும் வருமான வரி உண்டு. கிராஜுவிட்டி, பி.எஃப், இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை, எல்.டி.சி, பென்ஷன் கம்யூடேசன் ஓய்வுக்கால விடுப்பு சம்பளம், வேலை இழப்பு ஈட்டுத் தொகை, மத்திய, மாநில அரசுகளின் சில டெபாசிட் திட்டத் தொகை போன்ற வற்றுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. வரி விலக்கு பெற்ற இனங்கள் வருமான வரிக் கணக்கில் சேராது.

வரி Vs  வரிப் பிடித்தம்... வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் லாபம்..!

மூன்று வகை வரி வசூல்

சம்பளம், டிவிடெண்ட், லாட்டரி பரிசுத் தொகை முதலானவற்றை வழங்குவோர் அதற்குரிய வரியைப் பிடித்தம் செய்துகொண்டு, நிகரத் தொகையை மட்டுமே பயனாளிக்குத் தருவார்கள். இப்படி வரியை வசூல் செய்து விட்டு, மீதமுள்ள பணத்தைத் தரும் முறையை வரிப்பிடித்தம் (Tax Deduction at Source -TDS) எனப்படுகிறது. சுயதொழில் செய்வோர், சிறுவணிகர்கள் முதலானோர் தமது வருமானத்தைத் தாமே கணக்கிட்டு முன்கூட்டி செலுத்தும் வரி (Advance Tax) மற்றும் சுய மதிப்பீட்டு வரி (Self Assessment Tax) செலுத்துவது இது மற்றொரு வகை.

மூன்றாவது வகையான, வரி வசூல் முறையை ‘சலுகையுடன் கூடிய வரிப்பிடித்தம் (Concessional Tax Deduction at Source) எனலாம். இதன் கீழான வருமான வகைகளுக்கு வரி உண்டு. என்றாலும் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரிப்பிடித்தம் (TDS) இருக்காது. வரம்புக்கு மேற்பட்டால் மட்டுமே வரிப் பிடித்தம் செய்யப்படும் ‘வட்டி வருமானம்’ இந்தப் பிரிவைச் சேர்ந்ததுதான். அது எப்படி என்று பார்க்கலாம்.

ரூ.40,000 வட்டி வருமானத்துக்கு வரி இல்லை...

வருமான வரிப்பிரிவு 197A என்கிற பிரிவின்படி, 60 வயதுக்கு உட்பட்ட வரிதாரர் ஒருவருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் முதலான வற்றின் மீதான வட்டி 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இருக்குமே யானால், வங்கி, அஞ்சலகம், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை வரிப் பிடித்தம் செய்யாமலே வட்டியை வழங்கிவிடும். ரூ.40,000-க்கு மேற்பட்ட வட்டிக்கு மட்டுமே வரிப் பிடித் தம் செய்துகொண்டு நிகரத் தொகை வழங்கும்.

இதனால் 60 வயதுக்கு உட்பட்ட வரிதாரருக்கு 40,000 ரூபாய் வரையான வட்டிக்கு வரி கிடையாது என்று அர்த்தமல்ல. வரி உண்டு. எப்படி எனில், இதர வரிக்கழிவுகள் போக, இவரது நிகர வருமானம் ரூ.5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். வட்டி வருமானம் ரூ.40,000-யும் சேர்த்தால், வரிக்குரிய வருமானம் ரூ.5,40,000. இந்த 5,40,000 ரூபாயில் சேமிப்புக் கணக்கின் மீதான வட்டிக்கு மட்டும்தான் பிரிவு 80TTA-யின் படி, ரூ.10,000 வரிக் கழிவு பெற முடியும். எனவே, மீதமுள்ள 5,30,000 ரூபாய் வரிக்குரிய வருமானம் என்றாகிறது. இந்தத் தொகைக்கு 18,500 ரூபாய் வரி கட்ட வேண்டி இருக்கும். மாறாக, வட்டி வருமானத் தையும் சேர்த்து இவரது வரிக்குட் பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்குமானால், இவர் வரி கட்டத் தேவையில்லை. இதுதான் பிரிவு 197A-யின் படியான நிலைப்பாடு.

இந்தப் பிரிவின்படி, மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய் வரையான வட்டிக்கு வரிப் பிடித்தம் இருக்காது. இவர்களது வட்டிக்கான சலுகையும் (பிரிவு 80TTBயின் படி) 50,000 ரூபாய்தான் வட்டியானது சேமிப்புக் கணக்கு ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு உரியதாக இருக்கலாம். சுருக்கமாக, சேமிப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாசிட், பிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றுக்கு ரூ.40,000 வரையிலான வட்டி வருமானத்துக்கு வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க 60 வயதுக்கு உட்பட்டவர் வங்கியில் 15G படிவத்தை சமர்ப்பிக்கத் தேவை யில்லை. இதே போல, ரூ.50,000 வரையிலான வட்டி வருமானத் துக்கு வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க மூத்த குடிமக்கள் 15H படிவத்தை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

வரி Vs  வரிப் பிடித்தம்... வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் லாபம்..!

படிவம் 15G-யை சமர்ப்பித்தால்...

பிரிவு197A-யின்படி, வேறெந்த வருமானமும் இல்லாமல், வட்டி வருமானம் மட்டுமே உள்ள 60 வயதுக்கு உட்பட்ட, வரிதாரர் ஒருவர் நிதியாண்டு தொடக்கத் திலேயே படிவம் 15G-யை சமர்ப்பித்துவிட்டால், இவரது வட்டி வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருந்தாலும் வங்கி முதலானவை வரிப்பிடித்தம் செய்யாது.

படிவம் 15H-யை சமர்ப்பித்தால்...

மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தைப் பொறுத்தவரை, மேலும் ஒரு சிறப்புச் சலுகையையும் வருமான வரிச் சட்டம் வழங்குகிறது. அதாவது, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் படிவம் 15H-ன் இரண்டு பிரதிகளை வட்டி வழங்க வேண்டிய வங்கி முதலானவற்றில் சமர்ப்பித்துவிட்டால் , இவர்களது வட்டி வருமானம் வரி வரம்பைத் தாண்டினாலும் வரிப் பிடித்தம் செய்யப்படாமலே வட்டி மொத்தமும் வழங்கப் பட்டுவிடும்.

இவ்வாறு வரம்பு தாண்டிய வட்டி வருமானத்துக்கு கூட, வரிப் பிடித்தம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான நிபந்தனை ஒன்றும் உண்டு. அது, மூத்த குடியினருக்கு வழங்க வேண்டிய, வரி வரம்பு தாண்டிய வட்டி வருமானத்துக்கு விதிமுறைப்படி வரியைக் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கிடப்பட்ட வரியிலிருந்து பிரிவு 87A-யின்படியான வரித் தள்ளுபடி (Tax rebate) தொகையைக் கழித்துவிட்டால் இவரது வரி ‘0’ ஆக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

மூத்த குடியினருக்கான உதாரணம் பின்வருமாறு... 70 வயதான ஒரு மூத்த குடிமகனின் வட்டி வருமானம் ரூ.5 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உரிய வரி வரம்பு ரூ.3 லட்சம் மட்டும்தான். அதாவது, முதல் மூன்று லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது. வட்டி வருமானம் ரூ.5 லட்சத்தில் ரூ.3 லட்சம் கழித்தது போக, நிகர வட்டி வருமானம் ரூ.2 லட்சம். இதற்கான 5% வரி 10,000 ரூபாய். இந்த 10,000 ரூபாய் பிரிவு 87A-யின்படி, வரித் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். எனவே, நிகர வரி ‘0’ ஆகிவிடும். இதுதான் வருமான வரிப்பிரிவு 197A மூத்த குடிமக்களின் வட்டி வருமானத்துக்கு வழங்கும் சிறப்புச் சலுகை. மூத்த குடிமக்களுக்கு இப்படி வழங்கப்படும் சலுகையானது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. என்.ஆர்.ஐ-களுக்கு கிடையாது.

வட்டிக்கு வரிப்பிடித்தம் பற்றிய இந்த விதிகளை 60 வயதுக்கு உட்பட்டவர்களும், மூத்த குடிமக்களும் தெரிந்துகொண்டால், வருமானவரித் துறையினரின் நோட்டீஸைத் தவிர்க்கலாம். வரிப் பிடித்தத்தில் இருந்து தப்பிக்கவும் செய்யலாம்.