பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தவறிப்போன வரித்தாக்கல்.... வட்டி, கட்டணம், கூடுதல் வரி... கணக்கிடுவது எப்படி?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

சம்பளதாரர்கள், பென்ஷனர்கள், புரஃபஷனல்கள், தனிநபர் முதலானோர், கடந்த 2021-22 நிதியாண்டுக்கு வரித் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருந்த கடைசித் தேதி 31.07.2022 முடிந்துவிட்டது. இந்தக் கடைசி தேதிக்குள் வரித் தாக்கல் செய்யாமல் இருந்துவிட்டால், வருமான வரித் துறையின் நடவடிக்கை தொடர்ந்துவிடும். எனவே, தாமதக் கட்டணம் செலுத்தி 31.12.2022-க்குள் வரித்தாக்கல் செய்தால் பிரச்னை இல்லை.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

தாமதக் கட்டணம் கணக்கிடுவது எப்படி?

2021-22 நிதியாண்டில் ஒருவர் பெற்றிருந்த ஒட்டுமொத்த சம்பளம் அல்லது பென்ஷனில் சலுகைக்கு தகுதி உள்ள (வீட்டு வாடகை அலவன்ஸ் உள்ளிட்ட) அலவன்சுகள், ஸ்டாண்டர்ட் டிடேக்‌ஷன், தொழில் வரி, வீட்டுக் கடன் வட்டி ஆகியவற்றுடன் வருமான வரிப் பிரிவு 80C முதல் 80U வரையான அனைத்து வரிச் சலுகை களையும் கழித்த பிறகு வரக்கூடிய (வரிக்கு உரிய) வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அத்தகையோர் ரூ.5,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். வரிக்குரிய வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், ரூ.1,000 தாமதக் கட்டணத்துடன் 31.12.2022-க்குள் வரித் தாக்கல் செய்யலாம். ரூ.5,000 அல்லது ரூ.1,000 மட்டும் தாமதக் கட்டணம் செலுத்தி வரித்தாக்கல் செய்ய வேண்டுமெனில், வரிதாரர் (Assessee) செலுத்த வேண்டிய வருமான வரி முழுவதையும் 31.07.2022-க்குள் செலுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு வரியைச் செலுத்தாதவர்கள் அல்லது வரியின் ஒரு பகுதியை மட்டும் செலுத்திவிட்டு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் கட்ட வேண்டிய வரியைச் செலுத்த வேண்டும். வரியைச் செலுத்துவது மட்டுமன்றி, அந்த வரிக்கான வட்டியையும் செலுத்தி விட்டுத்தான் வரித்தாக்கல் செய்ய முடியும்.

வட்டிக்கான காலம்...

வரித்தாக்கலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் வரி முழுவதையும் செலுத்தியிருந்தால், வட்டி கட்ட வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, 2021-22 நிதியாண்டுக்கு அபராதம் இல்லாமல் வரித் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி 31.07.2022. எனவே, அந்தத் தேதிக்குள் வரியைச் செலுத்தியிருந்தால், வரிக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை. 31.07.2022-க்குப் பிறகு வரியை செலுத்தினால் 01.08.2022 முதல் வரித்தாக்கல் செய்யப்படும் தேதி வரையான காலத்துக்கு வட்டியைக் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

தவறிப்போன வரித்தாக்கல்.... வட்டி, கட்டணம், கூடுதல் வரி...
கணக்கிடுவது எப்படி?

வரி வரம்புக்குக் கீழே உள்ளவர்கள்...

சம்பளம், பென்ஷன், இதர வருமானம் ஆகிய வற்றின் கூட்டுத்தொகையில், வருமான வரிப் பிரிவு 80C முதல் 80U வரையான வரிச் சலுகை களைக் கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருந்தால் 60 வயதுக்கு உட்பட்டவர் வரித் தாக்கல் செய்வது கடமையல்ல. ரூ.3 லட்சத்துக்குள் இருந்தால், 60 வயது தாண்டிய, 80 வயதுக்கு உள்பட்ட மூத்த குடியினர் வரித் தாக்கல் செய்யக் கடமைப்பட்டவர்கள் அல்லர்.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந் தால், 80 வயது நிறைவு பெற்ற மிக மூத்த குடி யினரும் வரித்தாக்கல் செய்வது கடமையல்ல. எனவே, இந்த மூன்று பிரிவினருக்கும் தாமத வரித் தாக்கல் என்கிற பிரச்னை இல்லை.

ஆனால், 01.04.2021 முதல் 31.03.2022-க்கு உள்பட்ட நிதி ஆண்டில் அவர்களுடைய வருமானம், வரி வரம்புக்குள் இருந்தாலும், கீழ்க்கண்ட பணப் பரிவர்த்தனை ஏதேனும் ஒன்றை செய்திருந்தால் அவர்கள் வரித் தாக்கல் செய்வது அவசியம். அதாவது, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்கு களில், வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்திருந்தாலோ, மின்சாரக் கட்டணமாக ஒரு லட்சம் செலவு செய்திருந்தாலோ 31.07.2022-க் குள் வரித்தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய வில்லை எனில், ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானத்தில் இருப்ப வருக்கு ரூ.1,000 அபராதம் என்பது வருமான வரித் துறையின் விதி.

புதிய வரிமுறையைத் தேர்வு செய்தவர்கள்...

வருமான வரிப்பிரிவு 115 BAC–யின்படி வரிச் சலுகை இல்லாத புதிய வரிமுறையைத் தேர்வு செய்தவர்களுக்கும் அவர்களது வரிக்குரிய வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமெனில் தாமதக் கட்டணம் ரூ.5,000 செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத் துக்கும் உட்பட்ட வருமானம் உடையவர்களுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது, மூத்த குடிமகனுக்கான வரி வரம்பு வேறுபாடும் கிடையாது, வரிச் சலுகையும் கிடையாது என்ப தால், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள அனைவருமே வரித்தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்ய வில்லை எனில், தாமதக் கட்ட ணத்துடன் வரித்தாக்கல் செய்தாக வேண்டும்.

தவறிப்போன வரித்தாக்கல்.... வட்டி, கட்டணம், கூடுதல் வரி...
கணக்கிடுவது எப்படி?

வட்டி கணக்கிடும் முறை...

அ. 2021-22 நிதியாண்டு என்பது 01.04.2021 தொடங்கி 31.03.2022 வரை முடிவடைந்த போதிலும் இந்த நிதியாண்டுக்கு உரிய வரியை (வட்டி ஏதுமின்றி) 31.07.2022 வரை செலுத்தியிருக் கலாம். அதாவது, அபராதம் இல்லாமல் வரித்தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதிக்குள் வரியைச் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது. தவறினால், 01.08.2022 முதல் வரித்தாக்கல் செய்யும் தேதிக்குள் வட்டி கட்ட வேண்டும்.

ஆ. கட்டாமல் விடுபட்டுள்ள வருமான வரிக்கு மட்டுமே வட்டி. உதாரணமாக, ஒருவருக்கான வருமான வரி ரூ.20,000. இதில் ரூ.15,000 (TDS) வரிப்பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது எனில், மீதி உள்ள ரூ.5,000-க்கு மட்டுமே வட்டி கட்டினால் போதும்.

இ. வட்டிக் கணக்கீடு மாதக் கணக்கில் உள்ளபோது, வட்டி செலுத்த வேண்டிய காலத்தில் உள்ள பகுதி நாள்கள் ஒரு முழு மாத மாகக் கணக்கிடப்படும். அதாவது, 5 மாதம் 10 நாள் என்பது 6 மாதம் என எடுத்துக்கொள்ளப்பட்டு வட்டி கணக்கிடப்படும்.

ஈ. வட்டித் தொகை அருகில் உள்ள ரூ.100-க்கு சரிசெய்யப் படும் (Interest calculated to the nearest multiple of 100 rupees) அதாவது, ரூ.15,540 என்பது ரூ.15,500 என்று ஆகிவிடும். ரூ.15,560 என்பது ரூ.15,600 எனக் கணக்கிடப்படும்.

மாதிரிக் கணக்கீடு...

ஒருவரது 2021-22-க்கான வருமான வரி ரூ.30,000. இதில் ரூ.20,000. ஏற்கெனவே, 31.07.2022-க்குள் முன்பே பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. வட்டி மாதத்துக்கு 1%. இவர் வரித் தாக்கல் செய்த 14.12.2022 அன்று வரியையும், வட்டி யையும் செலுத்துகிறார். இவர் செலுத்த வேண்டிய வட்டி கணக்கீடு பின்வருமாறு...

* வட்டி விகிதம் 1% அதாவது, ரூ.100-க்கு ஒரு மாதத்துக்கு ரூ.1 வட்டி.

* இவரது வரி ரூ.30,000-ல் ரூ.20,000 பிடித்தம் போக, வரிப் பாக்கி ரூ.10,000. எனவே, ரூ.10,000-க்கு 1% வீதம் ஒரு மாத வட்டி ரூ.100.

* 01.08.2022 முதல் 14.12.2022 வரையான காலம் 4 மாதம் 14 நாள்கள் அதாவது, 5 மாதத்துக்கு மாதம் ரூ.100 வீதம் ரூ.10,000-க்கு 5 மாத வட்டி ரூ.500. எனவே, தாமதக் கட்டணம் 5000+ வரிப் பாக்கி 10,000 + வட்டி 500 சேர்த்து ரூ.15,500-யை செலுத்தி விட்டு வரித் தாக்கல் செய்ய வேண்டும்!

75-க்குமேல் வரித்தாக்கல் செய்ய விதிவிலக்கு!

75 வயதும், அதற்கு மேலும் உள்ள மூத்த குடிமக்கள் வரித்தாக்கல் செய்யத் தேவையில்லை. அதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு...

1. மூத்த குடிமகள்/மகன் இந்தியாவில் வசிப்பவராக இருப்பதுடன் 2021-22 நிதியாண்டில் 75 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

2. பென்ஷன் + வட்டி வருமானம் மட்டுமே பெறுபவராக இருக்க வேண்டும். இதர வருமானம் உள்ளவராக இருக்கக் கூடாது. மேலும், எந்த வங்கி மூலம் பென்ஷன் பெற்று வருகிறாரோ, அந்த வங்கி மூலமே வட்டியானது பெறப்பட வேண்டும்.

3. பென்ஷன் + வட்டி குறிப்பிடப்பட்ட வங்கி மூலம் பெறப்பட வேண்டும். குறிப்பிட்ட வங்கி என்பது (Scheduled Bank) அட்டவணையிடப்பட்ட வங்கி ஆகும். எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி முதலான பொதுத்துறை வங்கிகள் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட தனியார் துறை வங்கிகள் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி முதலான வெளிநாட்டு வங்கிகள் எல்லாம் அட்டவணையிடப்பட்ட வங்கிகளே.

4. பென்ஷன் தரும் வங்கிக்கு, ‘இதர வருமானம் இல்லை’ என்பதற்கு பென்ஷனர் சான்று சமர்ப்பிக்க வேண்டும். வரிப் பிடித்தம் இருந்தால், வங்கியானது பிடித்தம் செய்துவிடும்.