பிரீமியம் ஸ்டோரி

மார்ச் 2021, 31-ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டு 2020-21-க்கு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி 2021, செப்டம்பர் 30-ம் தேதி ஆகும். வழக்கமான கெடுதேதி, ஜூலை 31 ஆகும். கோவிட் பாதிப்பால் அது நீடிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.ஜெகதீஷ்
ஆர்.ஜெகதீஷ்

பொதுவாக, ஒருவரின் வருமானத்திலிருந்து 80சி முதல் 80யு வரையிலான வரிச் சலுகைகளைக் கழித்தது போக, 60 வயதுக்கு உட்பட்டவர்களின் வருமானம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்குமேலே இருந்தால், வரிக் கணக்கைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதே போல, 60 வயதுக்குமேல் 80 வயதுக்கு உட்பட்டவர்களின் வருமானம், ரூ.3 லட்சம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும்போது வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இனி, யார் எந்தப் படிவத்தைப் பயன்படுத்தி, கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஐ.டி.ஆர் – 1 சஹஜ் (ITR-1 / SAHAJ)

யார் பயன்படுத்த வேண்டும்?

* சம்பளம் / பென்ஷன் வருமானம் கொண்டவர்கள்.

* ஒரே ஒரு வீட்டின் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்கள்.

* வட்டி வருமானம் போன்ற இதர வருமானம்.

* ரூ.5,000 வரை விவசாய வருமானம்.

* மேலே கூறப்பட்ட வருமானம் அனைத்தும் சேர்ந்து, நிதி ஆண்டில் ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

யார் பயன்படுத்த முடியாது?

* வீட்டுக் கடன்மூலம் வீடு வாங்கி கடனைத் திரும்பச் செலுத்திவரும் நிலையில், முந்தைய ஆண்டு வட்டிக்கான வரிக் கழிவில் ரூ.2 லட்சத்துக்கு மேற்படும் தொகையை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தள்ளி வைத்திருப்பவர்

* லாட்டரி/ குதிரைப் பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம்

* வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ)

* மூலதன ஆதாயம் உள்ள இந்தியக் குடிமக்கள்.

* நிறுவனம் ஒன்றின் தனிநபர் இயக்குநர் (Individual Director).

வரிக் கணக்கு தாக்கல்... யாருக்கு என்ன படிவம்?

ஐ.டி.ஆர் 2

ஐ.டி.ஆர்-1 படிவம் தாக்கல் செய்ய முடியாதவர்கள், ஐ.டி.ஆர்-2 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (HUF) இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

* சம்பளம் / பென்ஷன்.

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம்.

* இதர வருமானங்கள் (லாட்டரி/ குதிரைப் பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம் போன்றவை).

* மேலே கூறப்பட்டவை மூலம் நிதி ஆண்டில் ரூ.50 லட்சத்துக்குமேல் மொத்த வருமானம் கொண்டவர்கள்.

* நிறுவனம் ஒன்றின் தனிநபர் இயக்குநர்.

* பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் முந்தைய ஆண்டில் முதலீடு செய்தவர்கள்.

* சொந்த (வீடு, மனை), நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகள் மூலமான குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள்.

* வெளிநாட்டு சொத்துகள் / வெளிநாட்டு வருமானம் (வெளி நாட்டு நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்டிருக்கும் பங்குகள் மூலமான வருமானம் போன்றவை).

* ரூ.5,000-க்குமேல் விவசாய வருமானம் கொண்டவர்கள்.

* பிள்ளைகள் / துணைவரின் கிளப்பிங் வருமானம் (Clubbing Income) இருந்தால்.

யார் பயன்படுத்த முடியாது?

வணிகம் மற்றும் தொழில்சார் (profession) வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (HUF) இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது.

ஐ.டி.ஆர் 3

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் - வணிகர்கள் / வியாபாரிகள்/ தொழிலுக்கான லாப நஷ்டக் கணக்கு, பேலன்ஸ்ஷீட் மற்றும் தணிக்கை அறிக்கை (தேவைப்பட்டால்) உள்ளவர்கள் ஐ.ஆர்.டி 3 படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர் 4

ரூ.2 கோடிக்குக் கீழ் டேர்ன்ஓவர் கொண்ட கார்ப்பரேட் அல்லாத தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் - சிறு, குறு வணிகர்கள்/ வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்யலாம். அதாவது, மொத்த விற்பனை தொகையில் அனுமான வருமானமாக 8% (டிஜிட்டல் பரிவர்த்தனை எனில், 6%) கணக்கிட்டு வரி கட்டுபவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர் 5 - 7

கூட்டு நிறுவனங்கள் ஐ.டி.ஆர் 5 படிவத்தை யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐ.டி.ஆர் 6 படிவத்தையும் வரி விலக்கு பெறும் என்.ஜி.ஓ-க்கள், அறக்கட்டளைகள் ஐ.டி.ஆர் 7 படிவத்தையும் பயன்படுத்த வேண்டும்.

முன்னேற்பாடுகள் அவசியம்...

சம்பளதாரர்கள் ஐ.டி.ஆர் 1 அல்லது ஐ.டி.ஆர் 2 படிவத்தைத் தாக்கல் செய்யும் முன் வருமான வரித் துறையின் புதிய இணைய தளத்தில் (www.incometax.gov.in) லாக்இன் செய்து, ஆன்லைனில் ஃபைல் செய்யும் முன் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது அவசியம். முதலில் வேகமான இணைய இணைப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். அடுத்து, வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய பான், ஆதார் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயம். இவை தவிர, முக்கியமாகச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளைப் பார்க்கலாம்.

1. வரிதாரரின் வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி கோடு ஆகியவற்றைத் தயாராக வைத்து கொள்ளவும். காரணம், ஒருவருக்குக் கூடுதலாகக் கட்டப்பட்ட வரி தானாகவே அவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2. வரித் துறையின் புதிய இணைய தளத்திலிருந்து 26 ஏ.எஸ் படிவத்தை டவுன்லோடு செய்து, முடிந்தால் பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில், வரிக்கு உட்பட்ட வருமானம், டி.டி.எஸ் பிடிக்கப்பட்ட விவரங்கள் போன்றவை இருக்கும்.

3. வரிக் கணக்கு தாக்கல் செய்பவர் நிரந்தரப் பணியாளராக இருக்கும்பட்சத்தில், அந்த சம்பளதாரருக்கு நிறுவனம் படிவம் 16-ஐ தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

4. சம்பளதாரருக்கு வாடகை வருமானம் வரும்பட்சத்தில், வீட்டில் குடியிருப்பிருப்பவரின் பெயர் மற்றும் பான் நம்பர், சொத்து வரி ரசீது, வீட்டின் முகவரி ஆகிய விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. நிறுவனம் கொடுக்கும் படிவம் 16-ல் வங்கிச் சேமிப்பு, எஃப்.டி வட்டி விவரங்கள் இருக்காது. அதில் வங்கிச் சேமிப்புக் கணக்கு வட்டி, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, மூலதன ஆதாயம், டிவிடெண்ட் ஆகியவை இடம்பெற வாய்ப்பு இல்லை. இதை வரிதாரர்தான் கவனித்து வரிக் கணக்கு தாக்கலில் சேர்க்க வேண்டும்.

6. நிதி ஆண்டு 2020-21-ல் நிலம், வீடு, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஏதாவது விற்றிருந்தால்/வாங்கி இருந்தால் அதன் விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

7. வரி பாக்கி இருந்தால் ‘பே நவ்’ என்ற ஆப்ஷனைப் பயன்படுத்திக் கட்டிவிடலாம். இல்லையெனில், ‘பே லேட்டர்’ என்கிற பட்டனை க்ளிக் செய்து பின்னர் வட்டியுடன் கட்டும் வசதி இருக்கிறது.

8. முதலீடு மூலமான வட்டி வருமானம், டி.டி.எஸ் பிடிக்கப் பட்ட விவரம், சொத்து விற்பனை விவரம் போன்றவை ஐ.டி.ஆர் 1 அல்லது 2 படிவத்தில் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக் கும். கையிலிருக்கும் விவரங்களை வைத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அவை பெரும்பாலும் சரியாகவே இருக்கும். விவரங்கள் வேறுபட்டிருந்தால் எடிட் ஆப்ஷனைப் பயன்படுத்தி, விவரங்களைச் சரிசெய்யலாம். வருமானங்கள் விடுபட்டிருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

6 கோடி பேர் வரித் தாக்கல்

மத்திய அரசின் வரிக் கணக்கு தாக்கல் செய்யும் இணைய தளத்தில் 9,48,32,278 தனிநபர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 2021-22-ம் நிதி ஆண்டுக்கு இது வரைக்கும் 6,01,46,901 பேர் வரிக் கணக்கு தாக்கல் செய்துவிட்டு, அதை இ-வெரிஃபிகேஷனும் செய்திருக்கிறார்கள். நீங்களும் கடைசி நேரம் வரை காத்திருக் காமல் வரிக் கணக்கை உடனே தாக்கல் செய்துவிடுவது நல்லது. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் முன் முதலில் வேகமான இணைய இணைப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய பான், ஆதார் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயம். இவை தவிர, வரிதாரரின் வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி கோடு ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்வது அவசியம்!

இந்த விவரங்களையும் தயாராக வைத்துக்கொள்ளவும்..!

நிதி ஆண்டில் ஒருவர் பெற்ற அனைத்து வகையான வருமானத்தையும் ஐ.டி.ஆர் படிவத்தில் கொடுக்க வேண்டும். அதில், வரி விலக்கு பெற்ற வருமானத்தையும் கொடுக்க வேண்டும். இதற்கென தனி பகுதி ஐ.டி.ஆர் படிவத்தில் இருக்கிறது. உதாரணமாக, ஒருவருக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டை விற்றதன் மூலம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் நீண்ட கால மூலதன ஆதாயம் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகைக்கு வரி கிடையாது (2018-19 நிதி ஆண்டிலிருந்து). ஆனால், இதை வரிக்கணக்கில் குறிப்பிடுவது அவசியம். இல்லையெனில், வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரக்கூடும்.

வரிதாரர் தன் சம்பாத்தியத்திலிருந்து தன் மனைவி மற்றும் பிள்ளைகள் முதலீடு செய்ய பணம் கொடுத்து, அந்த முதலீட்டின்மூலம் வருமானம் வந்திருந்தால், அந்த வருமானத்துக்கு வரிதாரர்தான் வரி கட்ட வேண்டும். இதை கிளப்பிங் இன்கம் (Clubbing Income) என்பார்கள். பெரும்பாலானவர்கள் இந்த வருமானங்களைக் கணக்கில் காட்ட மறந்துவிடுகிறார்கள், மறைத்துவிடுகிறார்கள். இது போன்ற நிலையில், வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வரக்கூடும். இப்போது அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளுடனும் பான் நம்பர் இணைக்கப்பட்டிருப்பதால், வரித் துறையால் இதைக் கண்டுபிடிப்பது மிக எளிது.

தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. அதே நேரத்தில், அது மறுமுதலீடு செய்யப்படுவதால், அந்தத் தொகைக்கு வரிச் சலுகை கேட்டுப் பெற முடியும். இதற்கு நீங்கள் என்.எஸ்.சி மூலம் நிதி ஆண்டில் கிடைத்திருக்கும் வட்டியை இதர வருமானமாக உங்கள் வருமானக் கணக்கில் சேர்க்க வேண்டும். பிறகு, அந்த வட்டித் தொகை மறுமுதலீடு செய்யப்படுவதால், அந்தத் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கோரலாம்.

ஒருவர் அலுவலகம் மூலம் எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசி பிரீமியத்துக்கும் வரிச் சலுகை பெறலாம். படிவம் 16-ல் இந்த விவரத்தைக் குறிப்பிட்டு அலுவலகமே வருமானத்திலிருந்து இந்தத் தொகையைக் கழித்திருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில், அதை நீங்கள் கழித்துக்கொள்ளலாம். நீங்கள் தனியாக எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொடர்பான விவரத்தை நீங்கள்தான் ஐ.டி.ஆர் படிவத்தில் குறிப்பிட்டு வரிச் சலுகையைக் கழிக்க வேண்டும்!வரிக் கணக்கு தாக்கல் செய்பவர் நிரந்தரப் பணியாளராக இருக்கும்பட்சத்தில், அந்த சம்பளதாரருக்கு நிறுவனம் படிவம் 16-ஐ தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்!

ரீஃபண்ட் எப்படி..?

டி.டி.எஸ், டி.சி.எஸ், அட்வான்ஸ் டாக்ஸ், சுயமதிப்பீட்டு வரி ஆகியவை படிவம் 26 ஏ.எஸ்ஸில் நிரப்பப்பட்டிருக்கும். ஐ.டி.ஆர் படிவத்தில் வரிதாரர் குறிப்பிடும் கட்டிய வரிகள் 26 ஏ.எஸ்ஸில் குறிப்பிட்டிருப்பதைவிட அதிகமாக இருந்தால், ரீஃபண்ட் வரும். குறைவாக இருந்தால், மீதி வரி கட்டச் சொல்லி வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு