மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வருமான வரி சேமிப்புத் திட்டங்கள்... இளைஞர்கள் சரியாகத் தேர்வு செய்வது எப்படி?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

டார்கெட் குரோர்பதி @ 40 - 8

வரி - விவரம் தெரியாதவர்கள் இதை எப்படியாவது கட்டாமல் தவிர்த்துவிட நினைக்கிறார்கள். ஆனால், அரசுக்கு உரிய வரியைக் கட்டிவிடுவதன் மூலம் நாம் பல வகையிலும் நன்மை அடைய முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

வருமான வரி விலக்கு…

ஒருவரின் சம்பளம் மற்றும் வருமானத்தில் வருமான வரியைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியமாகும். ஆனால், வருமான வரியை ஒருவரால் கண்டிப்பாகக் குறைக்க முடியும். அதற்கு பேர்தான், வரி விலக்கு. அதற்கு சற்று திட்டமிடல் தேவை.

ஒருவரின் அவசியமான செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு மத்திய அரசு வருமான வரிச் சலுகைகளை அளித்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு ஆரம்பச் சம்பளமே அதிகமாக இருக்கிறது. அதனால், அவர்கள் வேலைக்குச் சேர்ந்து முதல் ஆண்டே வருமான வரியைக் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசு அளித்திருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கான வரித் தள்ளுபடியைக் கணக்கில் எடுத்துகொள்ளும்பட்சத்தில் மாதம் சுமார் ரூ.42,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் வரியைக் கட்ட வேண்டியிருக்கும்.

இளைஞர்களின் தேர்வு...

இன்றைய இளைஞர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வருமான வரியைத் தவிர்க்க ஆயுள் காப்பீட்டைத் தேர்வு செய்திருக் கிறார்கள். அதில் எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் வருமான வரியை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே பிரீமியம் கட்டி வருகிறார்கள். ஆயுள் காப்பீடு அவசியம் தேவை என்கிறபோது குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, இதர வருமான வரிச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

பிரபலமான திட்டங்கள்..!

நம் நாட்டைப் பொறுத்தவரை, வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்ய வேண்டும் எனில், பிரபலமான 80சி பிரிவின்கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தப் பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

இந்தப் பிரிவின்கீழ் பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (EPF), விருப்ப பிராவிடென்ட் ஃபண்ட் (VPF), பொது பிராவிடென்ட் ஃபண்ட் (PPF) ஆகியவை மிகவும் பிரபலம் ஆகும். இ.பி.எஃப் என்பது பணியாளர் மாத சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% தொகை அல்லது 1,800 ரூபாயாக மாதம்தோறும் பிடிக்கப்படும். வி.பி.எஃப் என்பது பணியாளரின் விருப் பத்தின் அடிப்படையில் இ.பி.எஃப் கணக்கில் கூடுதல் தொகையை முதலீடு செய்து வருவதாகும்.

வருமான வரி சேமிப்புத் திட்டங்கள்... இளைஞர்கள் சரியாகத் தேர்வு செய்வது எப்படி?

தற்போதைய நிலையில் இ.பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.1% வட்டி வருமானம் அளிக்கப் பட்டு வருகிறது. பி.பி.எஃப் முதலீட்டை நாட்டு மக்கள் அனைவரும் மேற்கொள்ள முடியும். 15 ஆண்டு திட்டமான இது அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்டதாகும். தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த மூன்று முதலீட்டுத் திட்டங்களின் சிறப்பு அம்சம், முதலீட்டுப் பெருக்கம், முதிர்வுத் தொகை என அனைத்து நிலையிலும் வருமான வரிச் சலுகை அளிப்பதாகும்.

வங்கிகளின் ஐந்தாண்டு வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். ஏற்கெனவே பார்த்த லைஃப் இன்ஷூனஸ் பாலிசிகளான எண்டோவ் மென்ட், டேர்ம் பிளான், யூலிப் பாலிசிகளுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்த பாலிசிகளைக் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு எடுக் கும் பட்சத்தில்தான் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

அடுத்து முக்கியமான ஒரு வரிச் சேமிப்புத் திட்டம், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம் (Equity Linked Saving Scheme- ELSS) ஆகும். இது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். இதில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுகளுக்குள் எடுக்க முடியாது. இதன் வருமானம், அந்த ஃபண்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளின் செயல்பாட்டைப் பொறுத்துள்ளது. நீண்ட காலத்தில் இ.எல்.எஸ்.எஸ் மூலமான வருமானம் மிகவும் அதிகமாக இருக்கும்

இவ்வளவு முதலீட்டுத் திட்டங்கள், வாய்ப்புகள் இருக்கும்போது வருமான வரியை மிச்சப்படுத்த எதில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற குழப்பம் அனைவருக்கும் வருவது இயல்புதான். வரித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என ஒப்பிட்டுப் பார்த்தாலே சரியான திட்டத்தைத் தேர்வு செய்துவிட முடியும்.

வரித் திட்டங்கள்: கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

பின்வரும் நான்கு அம்சங்களின் அடிப்படையில் நல்ல வரி சேமிப்புத் திட்டத்தை ஒருவர் சுலபமாகத் தேர்வு செய்ய முடியும்.

முதலில், அந்த முதலீட்டின் மூலமான வருமானம் எவ்வளவு எனப் பார்க்க வேண்டும். இது பணவீக்க விகிதத்தைவிட சுமார் 3 - 5 சதவிகிதத்துக்குமேல் அதிகமாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, முதலீட்டை எத்தனை நாள் வரைக்கும் எடுக்க முடியாது என்கிற ‘லாக்இன்’ காலத்தைக் கவனிக்க வேண்டும். எதில் குறைவான ஆண்டுகளுக்கு ‘லாக்இன்’ காலம் இருக்கிறதோ, அந்தத் திட்டம் நல்ல திட்டம்.

மூன்றாவதாக, முதிர்வுத் தொகை கைக்கு வரும்போது எவ்வளவு வருமான வரியைக் கட்ட வேண்டும் என்பதாகும். நான்காவதாக, அந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான செலவு ஆகும்.

வரி சேமிப்புத் திட்டங்களுக்கான வருமானம்...

வரி சேமிப்புத் திட்டங்களுக் கான வருமானம் என்கிறபோது பி.எஃப்-க்கு 8.1%, பி.பி.எஃப்-க்கு 7.1%, என்.எஸ்.சி 7% வட்டி வருமானம் கிடைக்கிறது. ஆனால், இவை கிட்டத்தட்ட பணவீக்க விகிதம் அல்லது அதைவிட சிறிது தான் அதிகமாக உள்ளது. வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் டுக்கு 5.5% - 6.5% வரை வங்கியைப் பொறுத்து வட்டி தரப்படுகிறது. எண்டோவ்மென்ட் பாலிசிகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம் கிடைக்கும். யூலிப் பாலிசிகளில் ஏகப்பட்ட கட்டணங் கள் இருப்பதால், அதிலும் குறை வான வருமானமே கிடைக்க வாய்ப்புள்ளது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்...

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்பது பணவீக்க விகிதத்தைத் தாண்டிய அதிக வருமானம் ஆகும். இதன் வருமானம் நீண்ட காலத்தில் சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் இருந்து வருகிறது.

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் (2023, ஜனவரி 5-ம் தேதி நிலவரம்) சுமார் 16 சதவிகிதமாகவும், டாப் 10 ஃபண்டுகளின் வருமானம் 20 - 25 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவே ஐந்தாண்டுக் காலத்தில் 12 - 16 சத விகிதமாகவும் பத்தாண்டுக் காலத்தில் 15 - 17 சதவிகிதமாகவும் உள்ளது.

வரி சேமிப்புத் திட்டங்களை எடுத்துக்கொண்டால் 5 ஆண்டுகள் தொடங்கி 15 ஆண்டுகள் வரை செல்லும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மட்டுமே மிகக்குறை வான ‘லாக்இன்’ காலம் அதாவது, மூன்று ஆண்டுகள் ஆகும். அதே நேரத்தில், ‘லாக்இன்’ காலம் முடிந்ததும் முதலீட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. எப்போது பணம் தேவைப்படு கிறதோ, அப்போது எடுத்தால் போதும்.

இந்த ஃபண்டின் மூலம் கிடைக் கும் லாபத்துக்குக் குறைவான வட்டியைக் கட்டினால் போதும். நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக் கும் வரி இல்லை. அதன் பிறகான ஆதாயத்துக்கு 10% வருமான வரியைக் கட்டினால் போதும். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்யலாம். மேலும், முதலீட்டை எப்போது வேண்டு மானாலும் நிறுத்தி, மீண்டும் தொடரலாம். மொத்த முதலீடும் மேற்கொள்ளலாம்.

பி.எஃப், பி.பி.எஃப் முதலீட்டை ஆரம்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், வருமானம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால், மாதச் சம்பளம் வாங்கும் இளைஞர்களுக்கு சம்பளத்தில் பிடிக்கும் பி.எஃப் தொகை மட்டுமே போதும். பணி ஓய்வை நெருக்கும்போது தேவைப்பட்டால் வி.பி.எஃப் மூலம் முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம். எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் ஏஜென்ட் கமிஷன் மற்றும் கட்டணங்கள் மிக அதிகம். என்.எஸ்.சி, வங்கி எஃப்.டிக்கு கட்டணம் இல்லை. ஆனால் வருமானம் குறைவு; வருமானத்துக்கு வரியைக் கட்ட வேண்டும்.

இளைஞர்களின் முதல் முதலீடு...

இளைஞர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதல் திட்டமாகவும், வருமான வரிச் சேமிப்புக்காக அவர்கள் முதலீடு செய்யும் முதல் திட்டமாகவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் இருப்பது அவசியமாகும். இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் ஆண்டுதோறும் நிலையான வருமானம் கிடைக்காது என்றாலும், நீண்ட காலத்தில் கணிசமான வருமானம் கிடைக்கும். இதன் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். 5 - 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே, இதை நீண்ட கால முதலீடாகப் பார்க்க வேண்டும். மேலும், வரிச் சேமிப்புக்காக இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டைத் தேர்வு செய்யும்போது மொத்த முதலீட்டையும் ஒரே ஃபண்டில் போடாமல் முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப ஓரிரு ஃபண்டுகளில் பிரித்துப் போடுவது மூலம் ரிஸ்க்கைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்க முடியும்.

(குரோர்பதி ஆவோம்)

வரிச் சலுகை: நியூ பென்ஷன் சிஸ்டம்..!

நியூ பென்ஷன் சிஸ்டம் என்கிற என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யும்போது கூடுதலாக ரூ.50,000-க்கு வரிச் சலுகை பெற முடியும். இது 80சி தவிர்த்து கூடுதலாக ரூ.50,000 முதலீட்டுக்கு 80CCD (1B) பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் வருமான வரிச் சேமிப்புக்காக இந்த என்.பி.எஸ். முதலீட்டையும் கவனத்தில் கொள்ளலாம். இது பிற்காலத்தில் பென்ஷன் கிடைக்க உதவியாக இருக்கும்.