Published:Updated:

விரிவடையும் கண்காணிப்பு வளையம்... வரிதாரர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

வருமான வரி செலுத்த வேண்டிய அனைவரும் வரி வளையத்துக்குள் வந்தே தீர வேண்டும் என்பதற்கான முயற்சியில் சற்றும் தளராத வருமான வரித் துறை, அடுத்தகட்ட நடவடிக்கையாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதுதான் வருடாந்தரத் தகவல் ஆவணம் (AIS - Annual Information Statement) ஆகும். இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள படிவம் 26AS-ன் மேம்பட்ட வடிவம் ஆகும். வரி செலுத்துபவரின் வருமானம் தொடர்பான தனது கண்காணிப்பு வளையத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து சுமார் 46 வகையான வரவு–செலவு விவரங்களைச் சேகரித்து வரிதாரரின் பார்வைக்குத் தரும் விவர அட்டவணைதான் வருடாந்தரக் கணக்கு தகவல் ஆவணம். இதில் இடம்பெறும் முக்கியமான அம்சங்கள் இனி...

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

சம்பளம்

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சம்பளம் வழங்கும் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த சம்பள விவரத்துடன் டான் (TAN), பான் (PAN) எண்கள் இடம்பெற்றிருக்கும். வரிவிலக்கு பெற்ற இனங் களை நீக்கி, வரிக்கழிவைக் கழித்து வரித் தாக்கல் செய்வது வரிதாரர் பொறுப்பு.

வட்டி வருமானம்

சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் வரவு வைக்கப்பட்ட வட்டி, எஃப்.டி., ஆர்.டி வட்டி, மேற்கண்ட இனங்கள் தவிர்த்த இதர வகை வட்டி வருமானம், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட்டுக்குத் தரப்பட்ட வட்டி, உள்கட்டமைப்பு கடன் ஃபண்ட் மூலம் வரப் பெற்ற வட்டி, அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகள் மூலமான வட்டி ஆகியவை.

வரவுகள்

லாட்டரி பரிசு வரவுகள், டிவிடெண்ட் வரவுகள், பிராவிடன்ட் ஃபண்ட் வரவுகள், ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலமான வரவுகள், எந்திரத் தளவாடங்கள் (Planat and Machinery) வாடகை, வீடு, கடை வாடகை மூலம் வரும் வரவுகள், குதிரை பந்தய வரவுகள்.

கமிஷன்

இன்ஷூரன்ஸ் கமிஷன், லாட்டரி டிக்கட் விற்பனைக்கான கமிஷன்.

செலவுகள்

வாடகைச் செலவு, ஹோட்டல், ஆயுள் காப்பீட்டு பிரீமியம், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பலவகைச் செலவுகள்.

விரிவடையும் கண்காணிப்பு வளையம்... வரிதாரர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

திரும்பப் பெறும் தொகை

வங்கி, அஞ்சலகம், கூட்டுறவு வங்கிகள் முதலானவற்றின் நடப்புக் கணக்கு மற்றும் இதர கணக்குகளிருந்து எடுக்கப்பட்ட தொகை, தேசிய சேமிப்புத் திட்டத்திலிருந்து முதிர்வுக்கு முன்போ, முதிர்வுக்கு பின்போ பெற்ற தொகை.

முதலீடு

நடப்புக் கணக்கில் (Current Account) வங்கி, அஞ்சலகம் கூட்டுறவு வங்கி, வங்கிசாரா நிதி நிறுவங்களில் செய்யப்பட்ட முதலீடு, டைம் டெபாசிட்டுகளில் செய்யப்பட்ட முதலீடு, பங்குகள், பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் முதலான முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் போன்றவற்றை விற்று வரும் லாபம்.

வாகனம்

வாகனம் வாங்குதல், விற்பனை செய்தல்.

அசையாச் சொத்து

அசையாச் சொத்து வாங்குதல், (அதாவது, வீடு, நிலம் போன்றவை) அசையாச் சொத்துகளை விற்பனை செய்தல் பற்றிய விவரங்கள், அசையாச் சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம்.

சந்தைக்கு வெளியே

சந்தைக்கு வெளியிலான (Off Market) பங்குகள், கடன் பத்திரங்கள் முதலான (Debt) பரிவர்த்தனைகள், சந்தைக்கு வெளியிலான மேற்கண்ட இனங்களில் நடைபெறும் (Credit) பரிவர்த்தனைகள்.

வெளிநாடு

அயல்நாட்டு கரன்சி வாங்குதல், அயல்நாட்டுக்குப் பயணம் செய்தல்.

பேமென்ட்

பொருள் வாங்குவதற்கும் பெற்றுக்கொண்ட சேவைக்கும் (Service) பணம் கொடுத்தல். வங்கி டிராஃப்டுகள் வாங்க, தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் முதலானவற்றுக்கு ரொக்கம் கொடுத்தல்.

இதர இனங்கள்

சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் தவிர, ரெக்கரிங் டெபாசிட் தொடங்குதல், நிதியாண்டு இறுதியில் வங்கிக் கணக்குகளின் இறுதி இருப்பு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அத்தகைய கணக்குகளின் விவரங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள்.

என்.ஆர்.ஐ

என்.ஆர்.ஐ-க்கள் பெறும் ராயல்டி, தொழில்நுட்பச் சேவை களுக்கான ஆலோசனைக் கட்டணம், வெளிநாட்டில் உள்ள பங்குகள் விற்பனை வரவு, வெளிநாட்டுப் பங்கு களுக்கான டிவிடெண்ட் வரவு முதலானவை, என்.ஆர்.ஐ-க்களுக்கு குறிப்பிட்ட கம்பெனியில் இருந்துவரும் வட்டி விவரம் மற்றும் தொகை தருவதற்கு முன் பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரங்கள் இடம்பெறும். இந்திய நிறுவனங்களிடமிருந்து என்.ஆர்.ஐ பெற்ற வட்டி, அந்நியப் பணப்பத்திரங்கள் (Currency Bonds) மூலம் என்.ஆர்.ஐ-களுக்குக் கிடைக்கும் மூலதன ஆதாயம், விளையாட்டு வீரராகத் திகழும் என்.ஆர்.ஐ-க்கள், இந்தியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டதால் கிடைத்த வருமானம்.

தவறுகள்

இதுவரை இல்லாத வகையில், வரிதாரர் பற்றிய சகல விவரங் களும் தாங்கிய புதிய வருடாந்தரத் தகவல் ஆவணத்தை வருமான வரித் துறையின் புதிய இன்கம் டாக்ஸ் இஃபைலிங் வலைதள மான http://www.incometax.gov.in என்ற வலைதளத்துக்குச் சென்று ‘Services’ எனும் மடிப்பின் (TAB) கீழ், ‘Annual Information Statement’ என்பதைக் கிளிக் செய்து, வரி தாரர் தகவல்களைச் சரிபார்க்க லாம். தவறு இருந்தால், அவற்றை Feedback செய்யவும், தவறுகளைச் சரி செய்யவும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வசதி உண்டு. இதை தவிர, வருடாந்தரத் தகவல் ஆவணத்தின் சுருக்க ஆவணமும் வரித் தாக்கலுக்கு ஏதுவாக உண்டாக்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியது...

அவ்வப்போது கிடைத்துள்ள தகவல்கள் மட்டுமே மேற்கண்ட ஆவணத்தில் இடம்பெறுகிறது. இதில் விடுபாடு இருந்தால், வரி செலுத்துபவர்தான் சரிபார்த்து, விடுபட்ட இனங்களையும் சேர்த்து வரித் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரித் தாக்கலில் விடுபாடு இருப்பின் திருந்திய வரித் தாக்கல் செய்ய வேண்டும். வரிக்கணக்கு புத்தகம் என இதுநாள் வரை கருதப்பட்டு வந்த படிவம் 26AS-ம் தற்போது வலைதளத்தில் இடம்பெறும். என்றாலும், நாளடைவில் நீங்கிவிடும் என்பது எதிர்பார்ப்பு!