மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீட்டுக் கடன்... வரிச் சலுகைகளுக்காக வாங்கலாமா?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 19

இன்றைய இளைஞர்களில் பலர், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க நினைப்பதற்கு முக்கியமான காரணமே அதில் கிடைக்கும் வரிச் சலுகைக்காகத்தான். வீட்டுக் கடனை பொறுத்தவரை, திரும்பக் கட்டும் அசலுக்கு (Principal) நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை அளிக்கப்படும். இங்கே ‘நிபந்தனைக்கு உட்பட்டு’ என்பதன் அர்த்தம், 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை வழங்கப்படும் பணியாளர் சேம நலநிதி (EPF), ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஆகியவை எல்லாம் சேர்த்துதான் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

வரிச் சலுகை எவ்வளவு..?

கட்டிய வீட்டில் குடியேறிய பிறகுதான் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். வீட்டுக் கடன் வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் 24(பி) பிரிவின்கீழ் வரிச் சலுகை கிடைக்கும். வீட்டில் குடியிருக்கும்பட்சத்தில் நிதி ஆண்டில் வட்டிக்கு அதிக பட்சம் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். அதுவே வீட்டை வாடகைக்கு விட்டிருந்து வாடகையை வருமானமாகக் காட்டும் பட்சத்திலும் வரிச் சலுகை உண்டு.

ஆனால், அதில் முக்கிய நிபந்தனை இருக்கிறது. அதாவது, நிதி ஆண்டில் சொந்தமாகக் குடியிருக்கும் வீடு மற்றும் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கு வீட்டுக் கடன் வட்டிக்கு மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும்.

இதில் இன்னொரு சலுகையும் இருக்கிறது. வங்கி, வீட்டு வசதி நிறுவனத்துக்குக் கட்டும் வட்டி, வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத்தில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது அதை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று ஈடுகட்டி வரிச் சலுகை பெற முடியும்.

அதாவது, எந்த நிதி ஆண்டில் வீட்டுக் கடன் வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருக் கிறதோ, அந்த ஆண்டில் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டு ஏற்கெனவே ரூ.2 லட்சத்துக்குமேல் கட்டிய வட்டியை ஈடுசெய்து, அந்த நிதி ஆண்டில் வரிச் சலுகை பெற முடியும்.

வட்டிக்கான இந்தச் சலுகை வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 1999-க்குப் பின்பு வாங்கியிருந்தால் மட்டுமே கிடைக்கும். அதற்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், ஆண்டுக்கு ரூ.30,000 மட்டுமே கழித்துக்கொள்ள முடியும். ஆக, திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டியில் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.3.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கிறது.

வீட்டுக் கடன்... வரிச் சலுகைகளுக்காக வாங்கலாமா?

கட்டுமானத்தின்போது கட்டும் வட்டி, அசல்…

வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், வீட்டுக் கடனில் அசலின் ஒரு பகுதி திருப்பிச் செலுத்தப்பட்டால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது. வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டும்போது, கட்டுமானத்தின்போது போடப்படும் வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், இதற்கான வரிச் சலுகை உடனடியாகக் கிடைக்காது. கட்டுமானத்தின் போது போடப்பட்ட வட்டிக்கு / கட்டும் வட்டிக்கு வீட்டில் குடியேறிய பிறகு, அந்தத் தொகையை சமமாகப் பிரித்து ஐந்தாண்டுகளில் 24பி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம்.

அதாவது, வீடு கட்டி முடிந்த நிதியாண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சமமாகப் பிரித்து வரிச் சலுகை பெறலாம். அந்த ஐந்து ஆண்டுகளில் வழக்கமாகக் கட்டும் வட்டி, கட்டுமான காலத்தில் கட்டிய வட்டி எல்லாம் சேர்ந்து மொத்த வரிச் சலுகையும் ரூ.2 லட்சத்துக்குள் அடங்கும். மேலும், வீட்டுக் கடனை சில தவணைகளாகத் தந்தால், கடைசித் தவணை தரப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுக்குள் வீட்டைக் கட்டி முடித்தால்தான் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.2 லட்சம் கிடைக்கும். இல்லை எனில், ரூ.30,000தான் கழித்துக்கொள்ள முடியும். மேலும், வீட்டுக் கடன் வாங்கி ஐந்து ஆண்டுகளில் வீடு கட்டி முடிக்கும்பட்சத்தில் மட்டுமே இப்படி வட்டிக்கு ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். இல்லை எனில், ரூ.30,000 மட்டுமே வரிச் சலுகை பெற முடியும்.

டாப்அப் கடனுக்கு என்ன வரிச் சலுகை?

வீட்டுக் கடன் வாங்கி சில ஆண்டுகள் கழித்து, டாப்அப் கடன் வாங்க முடியும். மற்றொரு வீடு வாங்க பெறப்படும் டாப்அப் கடனுக்கு அசல் மற்றும் வட்டியில் வரிச் சலுகை இருக்கிறது. வீட்டை மேம்படுத்த (உதாரணம், தரையில் டைல்ஸ் மாற்ற மார்பிள் பதித்தல்), வசதிகளை அதிகரிக்க (உதாரணம், அலமாரிகள் கட்டுதல்) டாப்அப் கடன் வாங்கினால் வட்டிக்கு மட்டும் வரிச் சலுகை கிடைக்கும். அதுவும் 24பி பிரிவுகளின் வரம்புக்கு உட்பட்டுதான் கிடைக்கும்.

டாப்அப் கடன் வாங்கி வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குதல், மருத்துவச் செலவு உள்ளிட்ட வற்றுக்குப் பயன்படுத்தினால் வரிச் சலுகை கிடையாது.

இணைக் கடனுக்குக் கூடுதல் வரிச் சலுகை...

கணவன்- மனைவி, மகன்/மகள்– தந்தை, மகன்/மகள் – தாய், அண்ணன் – தம்பி, நண்பர்கள், உறவினர்கள் என யார் இணைந்து (Joint) வீட்டுக் கடன் பெற்றாலும், அவர்கள் வாங்கும் கடன் விகிதா சாரத்துக்கு ஏற்ப திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டியில் வரிச் சலுகை பெறுவார்கள்.

இணைந்து கடன் பெறும் அனைவரும் தனித்தனியே நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம், வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெறலாம். உதாரண மாக, வேலை பார்க்கும் கணவன், மனைவி இருவருமே சேர்ந்து வீட்டுக் கடன் பெறும்பட்சத்தில் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் வரை வட்டிக்கும், தலா ரூ.1.5 லட்சம் வரை அசலை திருப்பிச் செலுத்தும் பணத்துக்கும் வரி விலக்கு பெறலாம்.

இணைந்து கடன் வாங்கும் இணை உரிமையாளர்களுக்குத் தான் (co-owner) வரிச் சலுகை கிடைக்கும். இணை விண்ணப்பத் தாரருக்கு (Co-applicant) இந்த சலுகை கிடைக்காது. கட்டுமானத் தின்போது கட்டும் வட்டிக்கும் விகிதாசாரத்துக்கேற்ப இணை உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

பெற்றோருக்கு 50 - 55 வயதுக்கு மிகாமல் இருந்து அவர்கள் வருமானம் ஈட்டுபவர்களாக இருந் தால், அவர்களை இணை கடன் தாரராகச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த வருமான வரிக் கழிவு பெற்றோர்களின் பாகத்துக்கேற்ப அவர்களுக்குக் கிடைக்கும். வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை சில ஆண்டுகள் கழித்து மராமத்து செய்யும்பட்சத்தில் அதாவது, பழுது பார்த்தால், புதுப்பித்தால் அதற்காகப் பெறப்படும் கடனுக் கான வட்டிக்கு ரூ.30,000 வரை24பி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

* வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை ஐந்து ஆண்டுகளுக்குள் விற்றால் அதுவரைக்கும் வழங்கப் பட்ட அசலுக்கான வரிச் சலுகை திரும்பப் பெறப்படும். இந்தத் தொகை வீட்டை விற்ற நிதி ஆண்டில் வருமானமாகச் சேர்க்கப்பட்டு, அதற்கு வரி விதிக்கப்படும்.

* மாதம்தோறும் வட்டியையும் அசலையும் சரியாகச் செலுத்தத் தவறும்போது, வங்கியானது வட்டிக்கு வட்டி விதிக்கும். இப்படி வட்டிக்கு வட்டி விதிக்கப்படும்போது வருமான வரிச் சலுகை கிடையாது.

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்திடம் பெறும் வீட்டுக் கடனும் வரிச் சலுகைகள் பெறும் தகுதி உண்டு.

* ஒரே வீட்டின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்றிருந்தாலும் 80சி மற்றும் 24(பி)-யின்கீழ் வரிச் சலுகை பெறலாம். ஆனால், மொத்த வரிச் சலுகை அந்தப் பிரிவின் உச்சவரம்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடு மற்றும் அதை வீட்டுக் கடன் மூலம் வாங்கியிருந்தாலும், திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு வரம்புக்கு உட்பட்டு வரிச் சலுகை பெறலாம்.

& வங்கிக் கடன் பெறாமல், வீடு விற்பவருக்குத் (உதாரணம் பில்டர்) தவணை முறையில் பணம் செலுத்தினால் கட்டும் வட்டிக்கு பிரிவு 24(பி)-யின்கீழ் வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் அசல் தொகைக்கு எவ்வித வரிச் சலுகையும் பெற முடியாது.

(சொந்த வீட்டை வாங்குவோம்)

வீட்டுக் கடன் வரிச் சலுகை சான்றிதழ் பெறுவது எப்படி?

கடன் கொடுத்தவர் / வங்கி / வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, நிதி ஆண்டில் மொத்தம் இவ்வளவு அசல், இவ்வளவு வட்டி கட்டியிருக்கிறார் என்று சான்றிதழ் (Certificate) பெற்று பணிபுரியும் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வட்டி வரிச் சலுகைக்கான தொகையை சம்பளத் திலிருந்து / வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும்.

சுயதொழில் செய்பவர்களும் இவ்விதம் பெற்று வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரிவித்து வரிச் சலுகை பெறலாம். இந்தச் சான்றிதழை வங்கியில் இருந்து இ-மெயில் மூலமாகவே பெறலாம்.

வட்டி கட்டவில்லை என்றாலும் வரிச் சலுகை கிடைக்குமா?

வட்டித் தொகையை வருடத்துக்கு ஒருமுறை அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்ட வில்லை என்றாலும் கழித்துக்கொள்ளலாம். அதாவது, ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி ரூ.1 லட்சம் (நிலையான வட்டி 10% வட்டி என வைத்துக்கொள்வோம்!) அந்த வட்டியை அவர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்டவில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் சில ஆண்டுகள் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலாம். ஆனால், சட்டப்படி கட்டாத வட்டிக்கும் அதாவது, சேரும் வட்டிக்கு முன்கூட்டியே வரிச் சலுகை பெற முடியும்.