Published:Updated:

வட்டி... டிவிடெண்ட்... அன்பளிப்பு... வருமான வரி கணக்கீடு எப்படி?

வருமான வரி

பிரீமியம் ஸ்டோரி

இந்திய வருமான வரிச் சட்டப்படி ஒருவரின் வருமானத்தை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். சம்பளம், வாடகை வருமானம், பிசினஸ் வருமானம், மூலதன ஆதாயம், இதர வருமானம் ஆகியவை அந்த ஐந்து வருமானங்கள். இந்த ஐந்து வருமானங்களும் சேர்ந்ததுதான் ஒருவரின் மொத்த வருமானம். பொதுவாக, இந்தத் தொகையிலிருந்து வரிச் சேமிப்புக்காகச் செய்யப்படும் முதலீடுகளைக் கழிக்க கிடைப்பது நிகர வருமானம். இந்த வருமானத்துக்கு ஒருவர் அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப 5%, 20% மற்றும் 30% (பழைய வரி முறை) வரி கட்ட வேண்டும்.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

வட்டி வருமானம்...

இதர வருமானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது வட்டி வருமானம். இந்தப் பிரிவில் வங்கி சேமிப்பு மற்றும் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி), ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி), கார்ப்பரேட் எஃப்.டி போன்றவை அடங்கும். இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும். பொதுப்பிரிவினருக்கு இந்த வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ.40,000-க்கு மேல் (சீனியர் சிட்டிசனுக்கு ரூ.50,000 மேல் இருந்தால்) இருந்து, பான் எண் கொடுத்திருந்தால் 10% டி.டி.எஸ் பிடிக்கப்படும். இல்லையென்றால் 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும். இதற்கான வருமான வரி பிரிவு 194A ஆகும்.

ஒருவர் வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்றால் வரிக் கணக்குத் தாக்கல் செய்து, இந்த டி.டி.எஸ் தொகையை ரீஃபண்டாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். 20% அல்லது 30% வரி வரம்புக்குள் வந்தால் பாக்கி வரியைக் கட்ட வேண்டி வரும். இந்த வட்டி வருமானங்கள் ஒருவரின் வருமானத்தோடு சேர்க்கப்படும். வங்கிச் சேமிப்புக் கணக்கு மற்றும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு மூலமான வருமானத்துக்கு பிரிவு 80TTA-யின் கீழ் ரூ.10,000 வரை நிதி ஆண்டில் வரி கிடையாது.இதுவே, சீனியர் சிட்டிசன் என்றால் அவருக்கு வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு, எஃப்.டி, ஆர்.டி ஆகியவற்றின் மூலமான மொத்த வட்டி வருமானத்துக்கு பிரிவு 80TTB பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ.50,000 வரி கிடையாது. பிரிவு 80TTB-ல் வரிக் கழிவு பெறும் மூத்த குடிமக்களுக்கு பிரிவு 80TTA-யின் கீழ் வரிச் சலுகை கிடையாது. வங்கி சேமிப்புக் கணக்கு, ஆர்.டி எஃப்.டி வருமானங்கள் ஒருவரின் மொத்த வருமானத் துடன் சேர்க்கப்படும். அதிலிருந்து 80TTA அல்லது 80TTB பிரிவின் கீழ் முறையே ரூ.10,000 வரை அல்லது ரூ.50,000 வரை வரித் தள்ளுபடி அளிக்கப்படும்.

வட்டி... டிவிடெண்ட்... அன்பளிப்பு...
வருமான வரி   கணக்கீடு எப்படி?

டிவிடெண்ட் வரி

அடுத்த முக்கிய இதர வருமானம் டிவிடெண்ட். இந்த வருமானம் நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் (பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள், குளோபல் ஃபண்டுகளின் டிவிடெண்ட் ஆப்ஷன்கள்) முதலீடுகள் மூலம் கிடைப்பது. இந்த டிவிடெண்ட் வருமானத்துக்கு இதற்கு முன் நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு டிவிடெண்ட் விநியோக வரி கட்டிவிட்டு, டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு வரி எதுவும் இல்லாமல் வழங்கி வந்தன. இப்போது டிவிடெண்ட் வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் முழுமையாக வரி கட்ட வேண்டும். அதாவது, இந்த டிவிடெண்ட் வருமானம் ஒருவரின் வருமானம்/ சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு அவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். நிதி ஆண்டில் டிவிடெண்ட் வருமானம் ரூ.5,000-ஐ தாண்டும் போது, நிறுவனங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 10% டி.டி.எஸ் (TDS) ஆக பிடித்துவிட்டு, மீதித் தொகைதான் டிவிடெண்டாகத் தரும். இதற்கான வருமான வரிப் பிரிவு 194 ஆகும்.

மேலும், ஒருவர் ஓர் இடத்தில் பணி புரிந்துகொண்டு, வேறு ஒரு வகையில் ஃப்ரீலான்ஸ் முறையில் வருமானம் ஈட்டினால் அதுவும் இதர வருமானத்தின் கீழ்தான் வரும். இந்த வருமானம் அவரின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

அன்பளிப்பு...

அன்பளிப்பாக ஒருவர் பணமாகவோ, பொருளாகவோ நிதி ஆண்டில் ரூ.50,000-க்குக் குறைவாகப் பெற்றால், அதற்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட மொத்த அன்பளிப்புத் தொகைக்கும் வரி கட்ட வேண்டும். அந்த அன்பளிப்பு இதர வருமானமாகக் கருத்தப்படும். அதேநேரத்தில், நெருங்கிய உறவினர்களிடமிருந்து எவ்வளவு தொகை (ரொக்கப் பணமாக இல்லாமல், வங்கிப் பரிவர்த்தனை மூலம் நடந்திருக்க வேண்டும்) பெற்றாலும் அதற்கு வரி இல்லை.

பென்ஷன், சம்பள வருமான மாகக் கருதப்படும்; ஃபேமிலி பென்ஷன், இதர வருமானமாகக் கருதப்படும். ரூ.15,000 அல்லது ஃபேமிலி பென்ஷன் தொகையில் 33%, இதில் எது குறைவோ அதற்கு வரி கிடையாது. பணியாளர் பி.எஃப் பணத்தை ஐந்து ஆண்டுக்குள் எடுத்தால், இதர வருமானம் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும். இதர வருமானங்கள் அனைத்தும் ஒருவர் கணக்கிட்டு அதற்குரிய வருமான வரியைக் கட்ட வேண்டும். மேலும், இந்த இதர வருமானங்கள் அனைத் தையும் ஒருவர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் போது ஐ.டி.ஆர் படிவத்தில் காட்டி அதற்கு வரி கட்ட வேண்டும்.

இப்போதெல்லாம் ஒருவர் இதர வருமானத்துக்கு கட்ட வேண்டிய வரி அல்லது கட்டிய வரி முன்கூட்டியே அவரின் ஐ.டி.ஆர் படிவத்தில் நிரப்பப்பட்டிருக்கும். இதர வருமானம் கணக்கில் வரவில்லை என்றாலோ, வரி கட்டத் தவறி னாலோ வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். சில நேரங்களில் வரித் தொகைக்கு வட்டி மற்றும் அபராதம் கட்ட வேண்டி வரலாம். எனவே, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.

தொலைக்காட்சி பரிசுக்கு எவ்வளவு வருமானம்?

பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு, குதிரைப் பந்தயம், லாட்டரி பரிசு, சீட்டாட்டம் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் பணம் இதர வருமானத்தின் கீழ் வருகின்றன. இந்த வகை பரிசுக்கு ஒருவர் 30% வரி கட்ட வேண்டும். பரிசுத் தொகை ரூ.10,000-ஐ தாண்டும்போது 30% டி.டி.எஸ் பிடிக்கப்பட்டு, மீதித் தொகைதான் பரிசு பெற்றவருக்கு வழங்கப்படும். பரிசாக கார் கிடைத்தால் அதன் மதிப்புக்கு 30% டி.டி.எஸ் தொகை கட்டினால்தான் காரை தருவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு