நிதியாண்டு 2017-18-ல் சுமார் 8.35 கோடி வரிதாரர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய ஆண்டில் வரி செலுத்தியவர்கள் 7.42 கோடிப் பேர். வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் வரிதாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருமான வரித்துறை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வரி செலுத்துபவர்களின் பாஸ்புக்
முன்பு நமது வங்கிக் கணக்கிலுள்ள தொகையை அறிந்துகொள்ள பாஸ்புக்கை வைத்திருந்தோம். தற்போது கம்ப்யூட்டர் மூலம் நமது கணக்கின் விவரங்களைப் பார்க்கிறோம். இதுபோல, வருமானவரித் துறையிலும் நம் கணக்கில் செலுத்தப்பட்ட அட்வான்ஸ் டாக்ஸ், டி.டி.எஸ் போன்ற வரி விவரங்களை இனி நாம் தெரிந்துகொள்ளும் வழிகளை வருமான வரித்துறை செய்துதரப் போகிறது. படிவம் 26 AS (வருடாந்தர ஒருங்கிணைந்த வரைவு அறிக்கை) என்பதில் வரி செலுத்துபவரின் வரி விவரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும்.

புதிய அவதாரம்
சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை விதி 114-ன்படி, இந்தப் படிவத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. தற்போது ரூ.50,000-க்கும் மேற்பட்ட வரவு / செலவு, பொருள்களை வாங்குவது / விற்பது, சொத்துகள் பரிவர்த்தனை, சேவைகள், வேலை ஒப்பந்தங்கள், முதலீடுகள், செலவுகள், கடன்கள், டெபாசிட், வருமான வரி ரீஃபண்ட், மறுமதிப்பீடு போன்ற வருமான வரிக் கோரிக்கைகள், நிலுவையிலுள்ள நடவடிக்கைகள் மற்றும் முடிக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் 26 AS-ல் பகிரப்படும். அதேபோல, சுங்க வரி, ஜி.எஸ்.டி., பினாமி சட்டங்களின்கீழ் நடக்கும் நிறுவனத்தின் விற்றுமுதல், ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கும். மேலும், வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் அல்லது சொத்துகள் குறித்து வருமான வரித்துறை பெற்ற தகவல்களும் இதில் குறிப்பிடப்படும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இதனால், நாட்டின் எந்தப் பகுதியில் இருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வரிதாரரின் முழு நடவடிக்கைகளும் இணையதளம் மூலம் தெரியவரும். வரிதாரர்களும் ஆவணங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரசு அமைப்புகள் ஆகியவை இனி இவற்றைப் பயன்படுத்த முடியும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வரிதாரரின் நிதி நடவடிக்கைகள் இதில் அப்டேட் ஆகும். ஆண்டு இறுதியில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் முன், இந்தப் படிவத்திலுள்ள விவரங்களையும், தாக்கல் செய்யும் கணக்கின் விவரங்களையும் சரிபார்த்து அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் வித்தியாசம் இருந்தால் வருமான வரித்துறையினர் உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விவரங்களைக் கேட்பார்கள்.
வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்தவைப்பதே வருமான வரித்துறையின் நோக்கம். தற்போது ஏற்படுத்தப்பட்ட படிவம் 26AS-ஐ மேம்படுத்தும் திட்டம் வரிதாரர்களைத் தாமாக முன்வந்து வரி செலுத்தவைக்கும் முயற்சி என்றே சொல்ல வேண்டும்.