இந்தியாவில் GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்தது. இது நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை ஜிஎஸ்டியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும், இதனால் ஏற்படும் நஷ்டங்களையும் மத்திய அரசுக்குப் புகார்களாகத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

மத்திய அரசும் அவ்வப்போது ஜிஎஸ்டி முறையில் இருக்கும் சிக்கல்களை ஏற்றுக்கொண்டு, ஜிஎஸ்டியின் பல்வேறு சட்ட திட்டங்களைத் தளர்த்தியும், வரி விகிதங்களைக் குறைத்தும் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சி செய்தது. ஆனாலும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 2 வருடங்களுக்கு மேலாகியும் பிரச்னைகள் ஓய்ந்தபாடில்லை. மத்திய அரசிடம் தினமும் ஜிஎஸ்டி தொடர்பாகப் புதுப்புது குற்றச்சாட்டுகளை வியாபாரிகள் தொடர்ந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது இதில் உலகப்புகழ் பெற்ற உணவு நிறுவனமான மெக்டோனால்ட்ஸ் (McDonalds) நிறுவனமும் இணைந்துள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉலகம் முழுக்க துரித உணவுகளை விற்கும் மெக்டோனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவிலும் மிகப் பிரபலம். இந்தியாவில் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தை பிரான்சைஸ் கொடுத்து நடத்துவது ஹார்ட்கேசில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) என்கிற தனியார் நிறுவனம். இந்த நிறுவனம்தான் இப்போது ஜிஎஸ்டி தொடர்பாகப் புகார் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வந்த புதிதில், உணவகங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அப்படி வரி விதித்தபோது உள்ளீட்டு வரிச்சலுகை (Input Tax Benefit) பெற அனுமதி இருந்தது. ஆனால், இப்போது 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்துவிட்டு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரியை ரத்து செய்துவிட்டார்கள். இதனால், அவர்களுக்குப் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி இந்தப் புதிய வரி விகிதத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உள்ளீட்டு வரி என்றால் என்ன?
உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம், ஒரு கடையிலிருந்து 100 ரூபாய்க்கு முந்திரிப் பருப்பு வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அதற்கு 12% ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆக 112 ரூபாய் கொடுத்து முந்திரிப் பருப்பு வாங்குவார்கள். இப்போது, இந்த நிறுவனம், வாங்கிய முந்திரிப் பருப்புகளைக் கொஞ்சம் விலை உயர்த்தி, 150 ரூபாய்க்கு விற்கும் என்று வைத்துக்கொள்வோம். இந்த 150 ரூபாயில் 12% வரும் 18 ரூபாய் ஜிஎஸ்டி தொகையில் ஏற்கெனவே ஜிஎஸ்டி கட்டிதான் வாங்கினோம் என்பதால் கூடுதலாக வரும் 6 ரூபாயை மட்டும் அரசுக்குச் செலுத்தினால் போதும். மீதமுள்ள 12 ரூபாயை உள்ளீட்டு வரியாகக் கழித்துக்கொள்ளலாம். இதுதான் உள்ளீட்டு வரியின் கான்செப்ட்.

இப்போது, மெக்டோனால்ட்ஸ் விவகாரத்துக்கு வருவோம். இந்த 5% சதவிகித GST குறித்து Hardcastle Restaurants நிறுவனம் புகார் அளிப்பது என்னவென்றால், ``பர்கர், ஐஸ்க்ரீம், பால், எசென்ஸ், சமையல் எண்ணெய், சிக்கன், கெட்சப், முட்டை, சீஸ், உருளைக்கிழங்கு எனப் பல்வேறு பொருள்களை ஜிஎஸ்டி செலுத்தி வாங்குகிறோம். கடைசியில், எங்களுக்கு ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரிச்சலுகை இல்லை என்றால், என்ன நியாயம்?” எனக் கேள்வி எழுப்புகிறது.
தங்கள் மூலப் பொருள்களை வாங்கும்போது செலுத்திய ஜிஎஸ்டியைவிட, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டி வரி அதிகம். இது எங்களுக்குச் சரியாக வரவில்லை எனவும் கூறுகிறார்கள். அதாவது, பல மூலப் பொருள்களை 12%, 18% என ஜிஎஸ்டி செலுத்தி வாங்கிவிட்டு, 5% மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டி வசூலிப்பது நஷ்டத்தை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு (writ petition) தாக்கல் செய்து இருக்கிறார்களாம். அதோடு அரசுக்கு இந்த ஜிஎஸ்டி வரி சிக்கல் குறித்து நோட்டீஸும் அனுப்பப்பட்டு இருக்கிறதாம்.
`உணவகங்களில் ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்தது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான். ஆனால், உள்ளீட்டு வரி சலுகையை ரத்து செய்ததால், உணவகங்களுக்கு வரிச் செலவுகள் அதிகரிக்கும். கடந்த பல மாதங்களாகவே, ஜிஎஸ்டி வரியை அதிகரித்து, உள்ளீட்டு வரிச் சலுகையைக் கொடுக்கச் சொல்லித்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்’ என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.
இதனால் விரைவில் அரசு தரப்பிலிருந்து, இந்த ஜிஎஸ்டி வரி சிக்கல் தொடர்பாக, ஒரு விடை வரும் என எதிர்பார்க்கலாம்.