Published:Updated:

பழைய வீடு விற்பனை... வரியைச் சேமிக்க உதவும் சி.ஜி.ஏ.எஸ்!

வரி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு

வரி சேமிப்பு

பழைய வீடு விற்பனை... வரியைச் சேமிக்க உதவும் சி.ஜி.ஏ.எஸ்!

வரி சேமிப்பு

Published:Updated:
வரி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு

ரியல் எஸ்டேட் துறை 2008-ல் பலத்த அடி வாங்கி கோமாவில் கிடந்தது, இப்போது கண் விழித்து சோம்பல் முறித்துக் கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் பலரும் தங்களுக்கான கனவு இல்லங்களில் முதலீடு செய்யும் மும்முரத்தில் இருக்க, வேறு சிலர் தங்கள் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்க முனைந்துள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

பல காரணங்கள்...

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்கள் தாங்கள் வசிக்க மட்டும் ஒரு வீட்டை வைத்துக் கொண்டு, மற்றவற்றை விற்றுவிடத் தீர்மானித்து வருகிறார்கள்.

பெரிய அளவில் இருக்கும் தனி வீடுகளில் வசிக்கும் சிலர், நிர்வகிக்க எளிதாக இருக்கும் சிறிய வீடுகளுக்கு இடம்பெயர விரும்புகிறார்கள்.

சிறிய தொகையில் தாங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பு பெருமளவில் வளர்ந்து பெருகி இருப்பதைக் காணும் சிலர், அதன் பலனை முழுமையாக அனுபவிக்க எண்ணி, விற்கத் தலைப்படுகிறார்கள்.

சிலர் சொந்த ஊரிலுள்ள தங்கள் சொத்துக் களை விற்றுவிட்டு, வேலை நிமித்தமாக வேறு ஊரில் வீடு வாங்கிக் குடிபோகும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இளம்தலைமுறையினரின் நகரங்கள்/ அயல்நாடுகள் நோக்கிய நகர்வும், நூறு வருடம் பழைமையான பூர்வீக வீடுகளில் வசிக்க அவர்கள் தயாராக இல்லாததும் ஒரு காரணம்.

சமீபத்திய பங்குச் சந்தை எழுச்சியும் ஒரு முக்கிய காரணம். வெறும் 3 - 5% வருமானம் தரும் ரியல் எஸ்டேட்டைவிட 10% வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் / பங்குச் சந்தை முதலீடு மேன்மையானது என்ற எண்ணம் அதிகரித்துவருவதும் வீடு விற்பனையை ஊக்குவிக்கிறது.

பழைய வீடு விற்பனை... வரியைச் சேமிக்க உதவும் சி.ஜி.ஏ.எஸ்!

மூலதன ஆதாய வரி...

ஒருவர் என்ன காரணத்துக்காகத் தனது வீட்டை விற்றாலும் அதில் வரக்கூடிய முதலீட்டு லாபத்துக்குக் (Capital Gain) கட்டாயம் வரி கட்டியாக வேண்டும். ஒரு சொத்தை வாங்கி 24 மாதங்களுக்குள்ளாக விற்றால் வருவது குறுகிய கால முதலீட்டு லாபம் (Short Term Capital Gain). இது வருமானத் துடன் சேர்க்கப்பட்டு அதற்குத் தகுந்தாற்போல வரி விதிக்கப்படும்.

ஒரு சொத்து வாங்கி 24 மாதங்களுக்குப் பின் விற்கப்பட்டால் கிடைப்பது நீண்டகால முதலீட்டு லாபம் (Long Term Capital Gain). இதில் இண்டெக்சேஷனுக்குப் பின் வரும் லாபத் தொகைக்கு 20% வரி + 4% செஸ் விதிக்கப்படுகிறது.

வரியைச் சேமிக்கும் வழிகள்...

லட்சக்கணக்கில் கட்ட நேரும் இந்த வரியைத் தவிர்த்து, சேமிப்பை அதிகரிக்க மத்திய அரசாங்கமே பலவித வழிகளைக் காட்டுகிறது.

நம்மில் பலருக்கும் தெரிந்த எளிய வழி, 54இசி பாண்டுகள். ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (REC), நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) போன்ற அரசுக் கம்பெனிகளில் ஒரு நிதி ஆண்டில் ரூ.50 லட்சம் வரை யிலான லாபத்தை ஐந்து வருட காலத்துக்கு முதலீடு செய்து வரியைத் தவிர்க்கலாம்.

பழைய வீடு விற்பனை... வரியைச் சேமிக்க உதவும் சி.ஜி.ஏ.எஸ்!

ரூ.50 லட்சத்துக்குமேல் செக்‌ஷன் 54...

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக முதலீட்டு லாபம் ஈட்டியவர்களுக்குப் பேருதவி யாக இருப்பது செக்-54. ஒரு இடத்தில் வீட்டை விற்று, அந்தப் பணத்தில் வேறு இடத்தில் வீடு வாங்க எண்ணு பவர்களுக்கும் வரி, செஸ் என்ற பெயரில் பணம் கரைந்து விடாமல் இருக்க இது உதவு கிறது.

செக்.54-ன்கீழ் ‘கேப்பிடல் கெயின்ஸ் அக்கவுன்ட் ஸ்கீம்’ (CGAS) எனப்படும் வங்கிக் கணக்கில், வரம்பு எதுவுமின்றி மொத்த லாபத்தையும் முதலீடு செய்யலாம்.

இரண்டு ஆண்டுக்குள்...

அரசு வங்கிகளின் குறிப் பிட்ட கிளைகளில் மட்டுமே இந்த வசதி கிட்டுகிறது. புதிய வீட்டை வாங்க எண்ணு பவர்கள் இரண்டு வருடங் களுக்குள் இந்த லாபத்தை உபயோகித்து புதிய வீட்டை வாங்க வேண்டும். வீட்டைக் கட்ட விரும்புபவர்கள் மூன்று வருடங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்தக் காலக்கெடு தவறினால் வரி கட்டுவதைத் தவிர்க்க இயலாது.

இரண்டு வகை கணக்குகள்...

இதில் டைப் ஏ, டைப் பி (Type A & B) என்று இரண்டு வகை கணக்குகள் உள்ளன. ‘டைப் ஏ’ என்பது சேமிப்புக் கணக்கு போன்றது; ஆனால், இந்தக் கணக்குக்கு செக் புக் வசதி கிடையாது. பான் கார்டு, முகவரிச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றைச் சமர்ப்பித்து ‘டைப் ஏ’ கணக்கை ஆரம்பித்து, மொத்த லாபத்தையும் அதில் வைத்தபின், எப்போது எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதற்குத் தகுந்த மாதிரி பணத்தைப் பிரித்து, ‘டைப் பி’ எனப் படும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் வைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும்போது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை குளோஸ் செய்து டைப் ‘ஏ’ அக்கவுன்டில் வரவு வைத்து, பின் அங்கிருந்து ஃபார்ம் சி/ டி-யை (Form C & D) சமர்ப்பித்து, பணத்தைப் புது வீடு தொடர்பான செலவுகளுக்குப் பயன் படுத்தலாம்.

டைப் ஏ & பி ஆகிய இரு கணக்குகளிலும் உள்ள பணத்துக்கு வட்டியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்கிறது.

கடன் பெற முடியாது...

இந்தக் கணக்குகளை வங்கியின் ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்றலாம்; ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்ற முடியாது. இந்தக் கணக்குகளில் கடன் பெற முடியாது.

இந்தக் கணக்குகளில் உள்ள பணம் புதிய வீட்டுக்காக செலவானபின், இந்தக் கணக்கை குளோஸ் செய்ய வேண்டுமானால், முதலீட்டாளரின் வருமான வரியைக் கணக்கிடும் அதிகாரியிடம் (Income Tax Assessing Officer) இருந்து ஒப்புதல் பெற வேண்டும். இந்த ஒப்புதலுடன் ஃபார்ம் ‘ஜி’யை (Form G) வங்கியில் சமர்ப்பித்தால், இந்த முதலீட்டு லாபக் கணக்கு வெற்றிகரமாக குளோஸ் செய்யப்படும்.

ஒருவேளை, சிறிய தொகை இன்னும் இந்தக் கணக்கில் மீதம் இருந்தால், அந்தப் பணத்தை முதலீட்டாளரின் வேறு கணக்குக்கு மாற்றிவிட்டு, இந்தக் கணக்குகளை குளோஸ் செய்வார்கள். அப்படி மாற்றப்பட்ட பணத்துக்கு மட்டும் முதலீட்டு லாப வரி கட்டினால் போதும்.

சிரமம் சற்று அதிகம்தான்...

முதலீட்டு லாபத்துக்கான வரியைச் சேமிக்க இந்த முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு சிரமம் சற்று அதிகம்தான். இதில் செக் புக் வசதி கிடையாது என்பதால், ஒவ்வொரு முறையும் பணம் தேவைப்படும் போதும் வங்கிக்குச் சென்று ஃபார்ம் சி/டி-யை (Form C & D) சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். கணக்கை குளோஸ் செய்ய வருமான வரி அதிகாரியிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

மிகவும் அரிதாக உபயோகப்படுத்தப்படும் கணக்கு இது என்பதால், இது பற்றிய விவரங்கள் பல ஊர்களில் உள்ள வங்கி ஊழியர்களுக்கே அதிகம் தெரிந்திருப்ப தில்லை.

ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ், சுமார் ஒரு கோடி ரூபாய் நீண்ட கால முதலீட்டு லாபம் பெற்ற ஒருவருக்குக் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் வரை வரி சேமிப்பு மற்றும் வட்டி வருமானம் கிடைக்கிறது. ரூ.50 லட்சத்துக்குமேல் முதலீட்டு லாபம் பெற்றவர்களும், பழைய வீட்டை விற்றுப் புதிதாக வாங்க/கட்ட நினப்பவர்களும் இந்த சி.ஜி.ஏ.எஸ் அக்கவுன்ட் தரும் வரி சேமிப்பு மூலம் பெறும் நன்மை பல லட்சங்கள்.

ஆகவே, அரசு முன்வந்து வழங்கும் இந்தச் சலுகைத் திட்டத்தை சிறிது கஷ்டப்பட்டாவது பயன் படுத்துவது நன்று.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism