Published:Updated:

பழைய வரி முறை... புதிய வரி முறை... உங்களுக்கு ஏற்றது எது?

வருமான வரி

பிரீமியம் ஸ்டோரி

திவ்யா அபிஷேக், சார்டர்ட் அக்கவுன்டன்ட், விக்டர் கிரேஸ் & கோ

மத்திய பட்ஜெட் 2020-21-ல் குறைவான சதவிகித வருமான வரியைக் கட்டும் புதிய வரிமுறை (tax regime) அறிமுகம் செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் குறைவான வரியைக் கட்ட முடியும்.

திவ்யா அபிஷேக், 
சார்டர்ட் அக்கவுன்டன்ட், 
விக்டர் கிரேஸ் & கோ
திவ்யா அபிஷேக், சார்டர்ட் அக்கவுன்டன்ட், விக்டர் கிரேஸ் & கோ

இந்தப் புதிய வரி முறை நிதி ஆண்டு 2020-21 (மதிப்பீட்டு ஆண்டு 2021-22) முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த முறையை பொதுப் பிரிவினர் (60 வயதுக்கு உட்பட்டவர்கள்), மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல் 80 வயதுக்குக் கீழ்) மற்றும் மிகவும் மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) என அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2021 டிசம்பர் 31-ம் தேதி வரைக்கும் அபராதம் எதுவும் இல்லாமல், நிதி ஆண்டு 2020-21–க்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம். புதிய வரி முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது இதுவே முதல் முறை ஆகும். புதிய வருமான வரி முறை குறித்து சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

* வரிதாரருக்கு வணிக வருமானம் அல்லது நிபுணத்துவ வருமானம் (Business or Professional Income) இல்லாதபட்சத்தில், அவர் ஒவ்வோர் ஆண்டும் பழைய வரி முறை, புதிய வரி முறையில் எது தனக்கு லாபகரமாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது லாபகரமான வரி முறையை ஒருவர் தேர்வு செய்து கொள்ளலாம்.

* ஒருவருக்கு வணிக வருமானம் அல்லது நிபுணத்துவ வருமானம் இருந்தால், அவர் ஒரு தடவை மட்டும் ஒரு வரி முறையிலிருந்து மற்றொரு வரி முறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்.

* புதிய முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனில், வரிக் கணக்கு செய்யும்போது, 10-IE முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

பழைய வரி முறை... புதிய வரி முறை... உங்களுக்கு ஏற்றது எது?

புதிய வரிமுறையில் எதற்கெல்லாம் வரிச் சலுகை கிடையாது..?

புதிய வரிமுறையில் குறைவான வருமான வரியைக் கட்டுவதால், 70-க்கும் மேற்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் கிடையாது. கீழே காணும் அம்சங்களுக்கு புதிய வரி முறையில் வரிச் சலுகை மற்றும் வரி விலக்குப் பெற முடியாது.

சம்பளதாரர்களுக்கு...

1. நிலைக்கழிவு, தொழில் வரி மற்றும் பொழுது போக்கு படிகள்.

2. விடுமுறை பயணப்படி (LTA).

3. வீட்டு வாடகைப்படி (HRA).

4. மைனர் குழந்தை வருமானப் படி.

5. உதவியாளர்படி.

6. பிள்ளைகள் கல்விப்படி.

7. இதர சிறப்புப் படிகள் [பிரிவு 10(14)].

வணிகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு...

1. பிரிவு 32-ன் கூடுதல் தேய்மானம்.

2. பிரிவு 32AD-ன்கீழான முதலீட்டுப்படி.

3. பிரிவு 33AB மற்றும் 33ABA-ன் கீழ் குறிப்பிட்ட துறை சார்ந்த வணிகங்களுக்கான தள்ளுபடிகள்.

4. பிரிவு 35-ன் கீழ் அறிவியல் ஆராய்ச்சிக்கான செலவுகள்.

5. பிரிவு 35AD-ன்கீழ் மூலதனச் செலவு (Capital expenditure).

6. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு பிரிவு 10AA–ன் கீழ் விலக்கு.

7. வணிக இழப்பு, பயன்படுத்தாத தேய்மானச் சலுகையை அடுத்து வரும் ஆண்டுகளின் லாபத்திலோ, தேய்மானத்திலோ ஈடுகட்ட முடியாது.

சம்பளதாரர் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கான பொதுவான விதிமுறைகள்...

1. குடியிருக்கும் அல்லது வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கு வாங்கிய வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டி (பிரிவு 24).

2. சேப்டர் VI-A வரி விலக்கு (80C, 80 CCC, 80 CCD, 80D, 80E, 80 G போன்றவை) (என்.பி.எஸ்-ல் பணியாளர் கணக்கில் நிறுவனம் போட்டும் தொகை 80CCD(2)–யின் கீழ் தவிர்த்து மற்றும் புதிய வேலை வாய்ப்பில் பிரிவு 80JJAA தவிர்த்து).

3. இதர சிறப்புச் சலுகைகள் (perquisites) அல்லது படிகள்.

4. குடும்ப ஓய்வூதிய வருமானம்.

பழைய வரி முறை... புதிய வரி முறை... உங்களுக்கு ஏற்றது எது?

* பழைய வரி முறையில் பொதுப் பிரிவினருக்கு வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.2.5 லட்சம் வரை, மூத்த குடிமக்களுக்கு

ரூ.3 லட்சம் வரை, மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஆனால், புதிய வரி முறையில் வரிக்கு உட்பட்ட வருமானத்துக்கு அனைவருக்கும் ரூ. 2.5 லட்சம் வரைக்கும்தான் வரி கிடையாது. ரூ.5 லட்சம் வரைக்கும் வரிக்கு உட்பட்டவர்களுக்கு இரு முறைகளிலும் வரி சிறப்பு தள்ளுபடி ரூ.12,500 கிடைக்கும்.

புதிய வரிமுறை யாருக்கு ஏற்றது?

லாக்இன் கொண்ட முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத அதிக வருமானம் கொண்ட வரிதாரர்களுக்கு புதிய வரி முறை ஏற்ற தாகும். உதாரணமாக, வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது.

இடையில் பங்குச் சந்தை நன்றாக ஏற்றம் கண்டு அதிக வருமானத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், லாபத்தை வெளியில் எடுக்க முடியாமல் தவிப்பதற்குப் பதில், குறைவான வரியைக் கட்டி விட்டு, வேறு வகை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, எப்போது அதிக லாபமாக இருக்கிறதோ, அப்போது யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கு புதிய முறை ஏற்றதாக இருக்கும்.

புதிய வரி முறையில் குறைவான வரியைக் கட்டி விட்டு மீதிப் பணத்தை இதர தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும், லாக்இன் பீரியட் இல்லாத அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யவும் பயன்படுத்திக்கொள்ளலாம். முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் அதிக வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது.

பழைய வரி முறை... புதிய வரி முறை... உங்களுக்கு ஏற்றது எது?

பழைய வரிமுறை யாருக்கு ஏற்றது?

ஒருவருக்கு குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டுக் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் போன்றவை இருக்கும் பட்சத்தில், பழைய வரி முறை லாபகரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லாதபட்சத்தில் புதிய வரி முறை லாபகரமாக இருக்கும்.

எந்த வரி முறை ஒருவருக்கு லாபகர மாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆன்லைனில் நிறைய கால்குலேட்டர் இணைப்புகள் உள்ளன. நாணயம் விகடனின் இந்த இணைப்பிலும் https://www.vikatan.com/income-tax-calculator?b4 நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி, குறைவான வரியைக் கட்டும் பயனை அடையத் தவறாதீர்கள்!

படம்: சந்தீப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு