Published:Updated:

மாநகராட்சிகளின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?

கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

நிதி நிலைமை

மாநகராட்சிகளின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது?

நிதி நிலைமை

Published:Updated:
கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி களுக்கும் இது தேர்தல் சமயம். சமீப காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட மாநகராட்சிகள் தவிர, கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் சில மாநகராட்சிகளின் நிலைமை இப்போது எப்படி இருக்கின்றன என்பது குறித்து அறிய களமிறங்கி விசாரித்தோம். இந்த விசாரணையில் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள், பல மாநகராட்சிகளில் நிதி நிர்வாகம் சரியாக நடக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது. இனி ஒவ்வொரு மாநகராட்சியாகப் பார்ப்போம்.

கோவை மாநகராட்சி...

மாயமாய் மறைந்த ரூ.296 கோடி டெபாசிட் பணம்..!

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் தருவது கோவை மாநகராட்சிதான். 30 லட்சம் மக்கள் தொகையை நெருங்கும், கோவை மாநகராட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ.2,500 கோடிக்கு பட்ஜெட் போடுகின்றனர். 2011-ம் ஆண்டு ரூ.20 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2021-ம் ஆண்டில் ரூ.68 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளியில் இருந்துவரும் வரி இனங்கள்தான் மாநகராட்சிக்கு முக்கிய வருவாய். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மாநகராட்சிக்கு பல நூறு கோடி ரூபாய் வரித்தொகை நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு வாடகை கொடுக்க வேண்டியவர்கள் நீதின்றத்தில் வழக்கு தொடுத் திருப்பதால், வாடகை வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. கோவையின் அடையாளமாக உள்ள பல பெரு நிறுவனங்கள்கூட உரிய நேரத்தில் வரி கட்டுவதில்லை என்பது கவலை தரும் விஷயம். கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு 25 வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில், 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை ரூ.300 கோடி டெபாசிட் தொகை இருந்தது. இப்போது வெறும் ரூ.4 கோடிதான் டெபாசிட் தொகை யாக உள்ளது. மீதமுள்ள ரூ.296 கோடி எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை.

‘‘மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் தருவதே சவாலான காரியமாக மாறிவிட்டது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஒப்பந்ததாரர் களுக்கும் உரிய நேரத்தில் பணம் தர முடிவ தில்லை. நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்படுவது வளர்ச்சிப் பணிகள்தான். கடந்த ஆண்டு மட்டும் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள், நிதிப் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டது’’ என்று புலம்புகிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்.

“கோவை மாநகராட்சியின் நிதிப் பற்றாக் குறைக்கு, ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை நின்ற அதிகாரிகளுமே காரணம்” என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மாநகராட்சிகளின் நிதி நிலைமை 
எப்படி இருக்கிறது?

மதுரை மாநகராட்சி...

மாநில நிதி ஆணையம் தரும் பணத்திலிருந்துதான் சம்பளம்..!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக உருவான மாநகராட்சி மதுரை. 5,000 ஆண்டுகள் பாரம்பர்யம் மிக்க மதுரை நகரில் உள்ள சாலைகள் மிக மோசம். ஊருக்கு வருகிறவர்கள், ரோடுகள் இவ்வளவு கேவலமா இருக்கே என்று அங்கலாய்த்துவிட்டுச் செல்கிறார் கள். பலரின் இடுப்பை ஒடிக்கும் நிலையில்தான் மதுரை நகரின் சாலைகள் உள்ளன. 100 வார்டுகள் கொண்ட மாநகரில் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு பட்ஜெட் போடும் மாநகராட்சி யில் வருவாய் பற்றாக்குறையுடன்தான் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக மாநகராட்சி நிர்வாகத்திலிருந்த மக்கள் பிரதிநிதிகள், ஊழல் அதிகாரிகளால் மாநகராட்சிக்கு வர வேண்டிய பலவகையான வரி வருவாய்கள் வருவதில் பல சிக்கல்களை ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.

சாமானியர்கள்கூட தாங்கள் செலுத்த வேண்டிய வரி களை சரியாக் கட்டிவிடும் நிலையில், மதுரையில் பிரபலமாகத் திகழும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி பாக்கிகளை வைத்துள்ளன என்பதை மாநகராட்சியின் இணையதளத்திலேயே பார்க்க முடிகிறது. வீட்டு வரி முதல் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், இடங்களிலிருந்து வர வேண்டிய வாடகை நிலுவை, வரி நிலுவை நீண்டகாலமாக வருவதில்லை. இவற்றையெல்லாம் கறாராக வசூலிக்க வேண்டிய அதிகாரிகள், அவ்வப்போது தங்கள் பாக்கெட்டை மட்டும் நிரப்பிக்கொண்டு, கஜானாவுக்கு வர வேண்டிய வருவாயைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் இது பற்றிக் கேட்டோம். “மாநகராட்சியில் வர வேண்டிய வருவாய் குறைவாக இருப்பது ஓரளவு உண்மைதான். அதைச் சரி செய்யும் வகையில்தான் நிலுவைகளை வசூல் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சமீப காலம் பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரிபாக்கி வைத்திருந்ததை நெருக்கி வசூல் செய்திருக்கிறோம். மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வரியோ, வாடகையோ கட்டாமல் நிலுவை வைத்தவர்களிடம் எச்சரித்து வசூலிக்கிறோம்.

ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்குகிறது. இப்போதுகூட மாநகராட்சியில் சாலை அமைக்க 110 கோடி ரூபாயை மாநில அரசு சிறப்பு நிதியாக அளித்துள்ளது. இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணயத்திலிருந்து ரூ.8 - ரூ.10 கோடி வழங்கும். அதை வைத்துத் தான் ஊழியர்களுக்கு நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்கு கிறோம். இதுபோல, மத்திய நிதி ஆணையம் இந்த ஆண்டுக்கு ரூ.42 கோடி ஒதுக்கியது. அதைப் பல திட்டங்களுக்கு பயன்படுத்து கிறோம்’’ என்றார்.

நெல்லை மாநகராட்சி...

கடந்த ஆண்டு ரூ.7 கோடி பற்றாக்குறை... இந்த ஆண்டு..?

1994-ம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி உருவானது. கடந்த 28 வருடங்களில் பெரும்பாலான ஆண்டுகளில் பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே தயாரிக்கப் பட்ட நிலையில், இந்த ஆண்டு உபரி நிதி கிடைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் வருவாய் நிதி, குடிநீர் நிதி, ஆரம்பக் கல்வி நிதி போன்றவை மூலம் வருவாய் ரூ.397.15 கோடி கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதே பிரிவுகளில் செலவினமாக ரூ.387.02 கோடி கணக்கிடப் பட்டுள்ளது. அதனால் உபரி வருவாயாக 10.13 கோடி கிடைக்கும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2020-21) பற்றாக் குறையாக 7.29 கோடி இருந்தது. உபரி வருமானம் கிடைக்குமா, பற்றாக்குறை வருமா என்பது அடுத்த ஆண்டுதான் தெரியும்.

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டோம். ‘‘திருநெல்வேலி மாநகரம் முழுக்க ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிதியாண்டில் உபரி வருவாய் கிடைக்கும் வகையில் பட்ஜெட் தயாரித்துள்ளோம். பல நிறுவனங் கள் நீண்ட காலமாக மாநகராட் சிக்கு வரி செலுத்தாமல் இருந்தன. அத்தகைய 20 பெரிய நிறுவனங் களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால், வருவாய் கிடைத்துள்ளது. தவிர, மேலும் 800 பேருக்கு மின்சாரம் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிவித்ததால், கூடுதல் வருவாய் கிடைத் திருக்கிறது” என்றார்.

மாநகராட்சிகளின் நிதி நிலைமை 
எப்படி இருக்கிறது?

தூத்துக்குடி மாநகராட்சி...

வரி பாக்கி எக்கசக்கம்..!

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 60 வார்டுகளை உள்ளடக்கியது என்றாலும், முழுமையான வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. 5 முதல் 8 வார்டுகள் இன்னும் சாலை வசதி வசதியைப் பெறவில்லை. குடிநீர் இணைப்புக்காகப் பணம் கட்டிவிட்டு குடிநீரை எதிர்பார்த்து இந்தப் பகுதி மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாதாரண மக்களே வரியை சரியாகக் கட்டிவரும் நிலையில் சில கல்வி நிறுவனங்கள், பெரும் கடைகள், மருத்துவமனைகள் இன்னும் வரி பாக்கியைச் செலுத்தாமல் உள்ளனர். சொத்து வரி, மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் இருந்து வர வேண்டிய வரி சில ஆண்டுகளாவே நிலுவையில் உள்ளது. இதனாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். “மாநில நிதிக்குழு மூலம் மாதம்தோறும் ரூ.2 கோடி நிதி கிடைத்து வருகிறது. அதன் மூலம் மாநகராட்சி ஊழியர்களுக்குப் பற்றாக்குறை இல்லாமல் சம்பளம் கொடுத்து வருகிறோம். சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.70 கோடி வரை வருவாய் கிடைத்து வந்த நிலையில், கொரோனா பரவலால் கடந்த இரு ஆண்டுகளாக அந்த வரித் தொகையை முழுகையாக வசூலிக்க இயலவில்லை. அத்துடன், பெரிய நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடி வரை வரி பாக்கி வசூலிக்க வேண்டியுள்ளது.

வரி, வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நிறுவனத்தாரிடம் வரியைச் செலுத்தச் சொல்லி எச்சரித்து வருகிறோம். அதே நேரத்தில் நீண்டகாலமாக அதிக வரி பாக்கி வைத்த சில நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பைத் துண்டித்துள்ளோம். இதுபோன்ற நிலுவைகளை வசூலித்தால் வருவாய் அதிகரிக்கும். முழுமையான வரவும் இல்லை. அதே நேரத்தில் அதிகப் பற்றாக்குறையும் இல்லை. விரைவில் மாநகராட்சியின் வருவாயை உயர்த்திவிடுவோம்” என்றனர்.

கார்த்திகேயன், விஷ்ணு சந்திரன், சிவசுப்பிரமணியன், ஆஷா அஜித்
கார்த்திகேயன், விஷ்ணு சந்திரன், சிவசுப்பிரமணியன், ஆஷா அஜித்

திண்டுக்கல் மாநகராட்சி...

வரவைவிட செலவு அதிகம்..!

தமிழகத்தில் 11-வது மாநகராட்சியாக 2014-ல் திண்டுக்கல் நகராட்சி, தரம் உயர்த்தப்பட்டது. எட்டு ஆண்டுகளாகியும் நகராட்சித் தரத்திலேயே திண்டுக்கல் இருந்துவருகிறது.திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி ஆகியவற்றின் மூலம்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், தண்ணீர் வரி உள்ளிட்டவையிலும், தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு.

2017-2018 நிதியாண்டில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு வரி வசூல் ரூ.44.88 கோடி, செலவு ரூ.60.24 கோடி; 2018-2019 நிதியாண்டில் வரவு ரூ.62.42 கோடி, செலவு ரூ.65.28 கோடி; 2019-2020 நிதியாண்டில் வரவு ரூ.51.19 கோடி, செலவு ரூ.64.27 கோடி; 2020-2021 நிதியாண்டில் வரவு ரூ.47.29 கோடி, செலவு ரூ.88.32 கோடி ஆக மொத்தம் சராசரியாக வரவு 51.44 கோடியாகவும், செலவு ரூ.68.28 கோடியாகவும் உள்ளது.

அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சியில் வரவை விட செலவு ஆண்டுக்கு ரூ.16.84 கோடி அதிகமாக செலவிடப்படுகிறது. இருப்பினும் 2014 முதல் மாநகாட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற பணபலன்கள் ரூ.2 கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு ரூ.60 கோடிக்கு கடன் உள்ளது. ரூ.35 கோடி வரை வரி வசூல் பாக்கியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் இல்லாததால், தூய்மைப் பணி யாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நகரில் தூய்மைப்பணி தொய்வடைந்துள்ளது. இதே போல, ஒப்பந்ததாரர்களுக்கு முறையாகப் பணபட்டுவாடா செய்யப்படாததால், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளும் தேக்கமடைந்து உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிர மணியனிடம் பேசினோம். ‘‘மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை வசூல் கொரோனா காரணமாகக் குறைந்துவிட்டது. மக்களிடமும் சொத்து வரி, வீட்டு வரி வாங்குவது என்பது பெரும் சவாலாகிவிட்டது. இருப்பினும் மாநகராட்சிக்கு கிடைக்கக் கூடிய வருவாயைக் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக ஊதியம் கொடுக்கிறோம். மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து தருகிறோம்’’ என்றார்.

நாகர்கோவில் மாநகராட்சி...

20% நிதி பற்றாக்குறை உள்ளது..!

நூறு ஆண்டுகளாக நகராட்சி யாக இருந்த நாகர்கோவில் 2019-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியின் நிதிநிலை பற்றி விசாரித்தோம். “நாகர்கோவில் மாநகராட்சியாக இருந்த சமயத்தில் நிதிப் பற்றாக்குறை இருந்தபோதும், 2016-ம் ஆண்டு கடைசி கவுன்சில் கூட்டத்தில் மட்டும் ரூ.6 கோடிக்கு திட்டங்கள் போட்டார்கள். மின்சாரக் கட்டண பாக்கி ரூ.5 கோடி, ஓய்வூதிய பாக்கி ரூ.5 கோடி எனச் சுமார் ரூ.15 கோடி கடனில் இருந்தது.

2017-ல் கமிஷனராக வந்த சரவணகுமார் அதிரடியாகச் சில நடவடிக்கைகள் எடுத்தார். வடசேரி சந்தையில் புதிதாகக் கட்டப்பட்டு ஏலம் விடாமல் வைத்திருந்த கடைகளை ஏலம் விட்டார். இதனால் அதிக வருவாய் ஈட்டி நாகர்கோவில் மாநகராட்சியைக் கடன் இல்லாமல் கொண்டு சென்றார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு இப்போது வரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.100.38 கோடி வருவாய் வருகிறது. குடிநீர் கட்டணம் மூலம் ரூ.11.90 கோடி வருவாய் வருகிறது. அதே சமயம், 20% நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித்திடம் பேசினோம்.

“நாகர்கோவிலில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. வீட்டு வரி, கடை வாடகைகள் மூலம்தான் வருவாய் வருகிறது. வரி வசூல் குறைவாக உள்ளதால், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். தொழில் வரியை அதிகரிப்பதன் மூலமும், வணிக நிறுவனங்கள் லைசென்ஸ் எடுக்காமல் செயல்படுவதைக் கண்டறிந்து, லைசென்ஸ் எடுக்க வைப்பதன் மூலமும் வருவாயை பெருக்க உள்ளோம்.

அது மட்டுமல்லாது, பலர் ஐந்து வீடுகளை ஒரே பில்டிங்கில் வைத்துவிட்டு ஒரு வீட்டுக்கான வரியைச் செலுத்துகின்றனர். அதுபோன்ற கட்டடங்களைக் கண்டறிந்து சரியான அளவு வரியைப் போடுகிறோம்” என்றார்.

மாநகராட்சித் தேர்தலில் ஓட்டு போடும் முன்பு மக்கள் இந்த விவரங்களை எல்லாம் தெரிந்துகொண்டு முடிவெடுப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism