Published:Updated:

டாக்ஸி டிரைவர் டு தொழிலதிபர் - ஓர் ஆம்புலன்ஸ் மனிதரின் வெற்றிக்கதை!

சாந்தகுமார்
News
சாந்தகுமார்

``ஒரு டவல்ல நாலணா, எட்டணா, ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சில்லறை எடுத்திட்டு வந்து `இவ்ளோதான் கிடைச்சது'னு கொடுப்பாங்க. எண்ணிப்பார்த்தா நூறு, நூத்தம்பது ரூபாதான் இருக்கும். பெட்ரோலுக்கான காசை மட்டும் எடுத்துக்கிட்டு, மிச்சத்தை அவங்ககிட்டேயே கொடுத்துட்டு வந்திடுவோம்.''

டாக்ஸி டிரைவர் டு தொழிலதிபர் - ஓர் ஆம்புலன்ஸ் மனிதரின் வெற்றிக்கதை!

``ஒரு டவல்ல நாலணா, எட்டணா, ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சில்லறை எடுத்திட்டு வந்து `இவ்ளோதான் கிடைச்சது'னு கொடுப்பாங்க. எண்ணிப்பார்த்தா நூறு, நூத்தம்பது ரூபாதான் இருக்கும். பெட்ரோலுக்கான காசை மட்டும் எடுத்துக்கிட்டு, மிச்சத்தை அவங்ககிட்டேயே கொடுத்துட்டு வந்திடுவோம்.''

Published:Updated:
சாந்தகுமார்
News
சாந்தகுமார்

சாந்தகுமார், ஆம்புலன்ஸ் சேவையில் 43 வருட அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, நடிகர் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்களின் இறுதி யாத்திரையை இவருடைய 'ஃபிளையிங் ஸ்குவாட்' நிறுவனம்தான் எடுத்து நடத்தியது. `இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர்' என்று குறிப்பிடப்படும் சாந்தகுமாரை கீழ்ப்பாக்கத் திலுள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.

P.R.M.M. Shantha kumar
P.R.M.M. Shantha kumar

``பிறந்தது வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். எங்கப்பா ஒரு டாக்ஸி டிரைவர். எங்க வீட்ல நாங்க 11 குழந்தைங்க. அப்பா, அம்மாவோட சேர்த்து 13 பேரு சாப்பிடணும். ரொம்ப வறுமையான சூழல்ல வாழ்ந்தோம். 1970-கள்ல டாக்ஸியைதான் ஆம்புலன்ஸ்போல பயன்படுத்துவாங்க. சென்னை கே.எம்.சி வாசல்ல அப்பாவும் நானும் இரவும் பகலும் டாக்ஸியோட காத்துக்கிட்டிருப்போம். எப்போ வேணும்னாலும், `பாடியை சொந்த ஊருக்கு எடுத்துட்டுப் போகணும்; வர்றீங்களாப்பா'னு இறந்தவங்களோட சொந்தக்காரங்க வருவாங்க. தூரத்துக்கு தகுந்தமாதிரி முந்நூறு, நானூறுன்னு ரேட் பேசிட்டு கிளம்புவோம். `இந்தாப்பா பெட்ரோல் போடுறதுக்கு நூறு ரூபா வெச்சுக்கோ; மிச்சத்தை ஊருக்குப் போனதும் கொடுக்கிறோம்'னு சொல்வாங்க.

நாங்களும் நம்பிப் போவோம். ஊர்ல ஓர் ஓலைக்கொட்டாய் முன்னாடி பாடியை இறக்கி வெச்சிட்டு, `கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க'ன்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. நாங்க மணிக்கணக்குல காத்திக்கிட்டிருப்போம். சில நேரம் விடிய விடியக்கூட காத்துக்கிட்டு இருந்திருக்கோம். விடியல்ல ஒரு டவல்ல நாலணா, எட்டணா, ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சில்லறை எடுத்திட்டு வந்து `இவ்ளோதான் ஐயா ஊருக்குள்ள கிடைச்சிது'னு கொடுப்பாங்க. எண்ணிப் பார்த்தா நூறு, நூத்தம்பது ரூபாதான் இருக்கும். பெட்ரோலுக்கான காசை மட்டும் எடுத்திட்டு, மிச்சத்தை அவங்ககிட்டேயே கொடுத்துட்டு வந்திடுவோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் காலத்துல டாக்ஸிதான் ஆன்புலன்ஸுன்னு சொன்னேன் இல்லையா? அதுல நோயாளிங்க படுற கஷ்டத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாது. `பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க'ன்னு போன் செய்வாங்க. எலும்புல ஏர் கிராக்தான் ஏற்பட்டிருக்கும். அவங்களைத் தூக்கிட்டு வந்து டாக்ஸியில ஏத்தி, கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல இறக்கி, அங்கிருக்கிற ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி அனுப்புறப்போ ஏர் கிராக், எலும்பு முறிவா மாறியிருக்கும்.

அந்தளவுக்கு நோயாளிகளையும் அடிபட்டவங்களையும் அலுங்காம கொண்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேர்க்கிறதுக்கான ஆம்புலன்ஸ் வசதி அப்போ இல்ல. தவிர, செத்தவங்க உடம்பையும் பின் சீட்ல வெச்சுதான் கொண்டுபோய் வீட்ல சேர்த்திருப்போம். அதே சீட்லதான் நோயாளிகளையும் ஏத்திட்டுப் போவோம். அப்போல்லாம் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். 1980-ல தெரிஞ்ச ஒரு சேட்டுகிட்ட 1,500 ரூபா கடன் வாங்கி ஒரு பழைய ஆம்புலன்ஸை வாங்கி, ஆம்புலன்ஸ் பிசினஸை ஆரம்பிச்சேன்'' என்றவர், இந்தத் தொழிலில் தான் சந்தித்த நல்லது, கெட்டதுகளையும் பகிர்ந்துகொண்டார்.

Flying Squad
Flying Squad

``நான் என்ன பிசினஸ் பண்றேன்னு தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் என்கிட்ட நட்பா பழகிட்டிருந்த பலபேர், அதுக்கப்புறம் என்னைக் கண்டாலே ஒதுங்கிப் போயிடுவாங்க. ஏன்னா, அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் செய்றது பிணம் தூக்குற தொழில். இன்னும் சிலர், `பொணம் தூக்குற வண்டி எங்க வீட்டுப் பக்கத்துல நிக்கக் கூடாது'ன்னு சண்டை போடுவாங்க. அப்போல்லாம், `நான் செய்றது தொழில் மட்டும் கிடையாது; சேவை'ன்னு மனசுக்குள்ள நினைச்சிப்பேன். எனக்கு வீடு கொடுக்க மாட்டாங்க. என்னைப்பத்தி தெரியாம வீடு கொடுத்தவங்ககூட விஷயம் தெரிஞ்சதும் வீட்டை உடனே காலி பண்ணுங்கன்னு சொல்லிடுவாங்க. இந்த நவீன தீண்டாமைவாதிகள்கிட்ட நான் எதிர்த்துப் பேசி சண்டை போட்டதே இல்லை.

சொந்த மாநிலம் விட்டு தமிழ்நாடு வந்தவங்க எதிர்பாராம இறந்துப்போயிருப்பாங்க. அந்த மாதிரி உடம்புகளை இந்தியா முழுக்க கொண்டுபோய் சேர்த்திருக்கேன். அந்த மாதிரி நேரங்கள்ல நக்சலைட்கிட்ட சிக்கி அடியுதை வாங்கி, கையில இருந்த காசையெல்லாம் பறிகொடுத்து, உயிருக்கு பயந்து ஓடிவந்த சம்பவங்களும் என் வாழ்க்கையில நடந்திருக்கு.

இன்னொரு பக்கம், நெஞ்சு வலின்னு கூப்பிட்டவங்களை சரியான நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோய் காப்பாத்துன திருப்தி; `கரெக்டான நேரத்துல கூட்டிட்டு வந்துட்டீங்க'ன்னு தோளைத் தட்டிக்கொடுத்த டாக்டர்ஸ்; இல்லாதவங்ககிட்ட குறைச்சலா காசு வாங்கிக் கிடைச்ச புண்ணியம்னு வாழ்க்கை நிறைவா போய்க்கிட்டிருக்கு. ``நோயாளிகளோட அசெளகர்யத்தைப் பார்த்து பார்த்துதான் அவங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை என்னோட ஆம்புலன்ஸ்ல வைக்க ஆரம்பிச்சேன். ஃப்ரீசர் பாக்ஸ் நான் கண்டுபிடிச்சதுதான்.

அதுல கிடத்தப்பட்ட முதல் உடம்பு சிவாஜி சாரோடது. அதுக்கு பேட்டர்ன், ராயல்டி எதுவும் நான் கேட்கலை. இன்னிக்கு இந்தியா முழுக்க ஃப்ரீசர் பாக்ஸ் பிசினஸ் பல பேரை வாழ வெச்சுக் கிட்டிருக்கு. கொரோனா நேரத்துல இறந்தவங்க உடம்பை வீட்டுக்குக்கூட கொண்டு போக முடியாத நிலைமை. அப்போ, ஆம்புலன்ஸுக்குள்ள கேமரா வெச்சு, இறந்தவங்க முகத்தை அவங்க சொந்தக்காரங்க பார்க்குறதுக்கு வழி செஞ்சேன். நன்றி சொல்லி அந்தக் குடும்பங்கள் அழுததை இப்போ நினைச்சாலும் உடம்பு புல்லரிக்குது'' என்கிற சாந்தகுமார், தன் பிசினஸ் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுடன்...
குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுடன்...

``1,500 ரூபா கடன்ல ஆரம்பிச்ச பிசினஸ். இன்னிக்கு பேங்க்ல ஏழரை கோடி ரூபாய் லோன் வாங்கி பிசினஸை டெவலப் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, இதுக்கு முன்னாடி நான் வாங்கின கடனையெல்லாம் அந்தளவுக்கு நேர்மையா அடைச்சிருக்கேன்னு அர்த்தம். வங்கிக்கடன்ல வளர்ந்த பிசினஸ் என்னோடது. சென்னையில மட்டும் 36 ஆம்புலன்ஸ் இருக்கு. தவிர, தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்கள்லேயும் நம்ம ஆம்புலன்ஸ் சேவை இருக்கு.

இந்தத் தொழில்ல 24 மணி நேரமும் வேலை செய்ய ரெடியா இருக்கணும். வேகமா போகணும்; அதே நேரம் நோயாளியோட நிலைமைக்கேத்த மாதிரி வண்டி ஓட்டணும். இதுக்கேத்த மாதிரிதான் என்னோட எல்லா ஆம்புலன்ஸையும் வடிவமைச்சிருக்கேன். என்னோட போன் ஆஃப் ஆகவே கூடாது. அதிகபட்சம் ரெண்டாவது, மூணாவது ரிங்ல போனை எடுக்கணும். என்னைக் கல்யாணம் செஞ்ச நாள்ல இருந்து என் மனைவி உதவி பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ என் ரெண்டு பொண்ணுங்க, ரெண்டு மருமகனுங்க எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க'' என்றவர், இளைஞர்கள் இந்தத் தொழிலை எடுத்து செய்வதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறார்.

``பழைய ஆம்னி வேன், ஒரு ஃப்ரீசர் பாக்ஸ் இருந்தாலே இந்த பிசினஸை ஆரம்பிச்சிடலாம். இதுக்கு ஒரு லட்சம் போதும். கொஞ்சம் பெருசா ஆரம்பிக்கணும்னா, 5 லட்சம் முதலீட்டுல ஓர் ஆம்புலன்ஸ், 4 ஃப்ரீசர் பாக்ஸ் போதும். குறிப்பா, கிராமங்கள்ல இருக்கிற மக்கள் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. முறைப்படி அனுமதி வாங்கி உங்க ஊர்ல ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிச்சிங்கன்னா, வருமானமும் கிடைக்கும்; புண்ணியமும் கிடைக்கும். ஆனா, எக்காரணம் கொண்டும் ஒரு நோயாளியோ, ஓர் உடலோ உங்களுடைய ஆம்புலன்ஸில் இருக்கும்போது மது அருந்திவிட்டு ஓட்டாதீர்கள்'' என்று பேசி முடித்தார் சாந்தகுமார்.