Published:Updated:

4G ஸ்பெக்ட்ரம்; விருப்ப ஓய்வுத் திட்டம்; 29,937 கோடி நிதி... பி.எஸ்.என்.எல்லைப் புதுப்பிக்கும் அரசு!

4G ஸ்பெக்ட்ரம் இல்லாமல்தான் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பி.எஸ்.என்.எல் திணறிவருகிறது.

பி.எஸ்.என்.எல்லைப் புதுப்பிக்கும் அரசு!
பி.எஸ்.என்.எல்லைப் புதுப்பிக்கும் அரசு!

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் டெலிகாம் நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் வருங்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முடிவுகள் பற்றி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.

BSNL
BSNL

இதில் முக்கிய முடிவாக பி.எஸ்.என்.எல்லுக்கு 2016-ம் ஆண்டு இருந்த அதே விலையில் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4G ஸ்பெக்ட்ரத்தின் விலையில் வரும் GST-யை (சுமார் 4000 கோடி ரூபாய்) அரசு ஏற்றுக்கொள்ளும். ``பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை விற்கும் எண்ணமோ மூடும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. இந்த நிறுவனங்களை மேலும் நெறிப்படுத்தவே விரும்புகிறோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ரவிசங்கர் பிரசாத். இந்த 4G ஸ்பெக்ட்ரம் இல்லாமல்தான் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பி.எஸ்.என்.எல் திணறிவருகிறது.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் விரைவில் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வேலைகள் முடிவடைய தாமதமாகும் என்பதால் அதுவரை எம்.டி.என்.எல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்லின் துணை நிறுவனமாகச் செயல்படும். இவற்றின் புதுப்பித்தலுக்காகவும், மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்காகவும் நான்கு கட்டங்களில் 29,937 கோடி ரூபாயை அரசு செலவிடவுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நான்கு வருடங்களில் பணமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல் கேட்டு வந்தது இது'' என்கிறார் ரவிசங்கர் பிரசாத். இந்தச் செலவுகளையும் அரசே ஏற்கும். இப்போது இந்த நிறுவனங்களில் சுமார் 1.76 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குச் சம்பள பாக்கி இருக்கிறது. ஊழியர்களுக்கே வருமானத்தின் பெரும் தொகையை (பி.எஸ்.என்.எல்- மாதம் ரூபாய் 850 கோடி) வழங்க வேண்டிய சூழல் இந்த நிறுவனங்களில் இருக்கிறது.

ஜியோ யுத்தம்! - காங்கிரஸுக்கு 2ஜி... பி.ஜே.பி-க்கு 4ஜி

இந்த இரு நிறுவனங்கள் தற்போது 40,000 கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பி.எஸ்.என்.எல்லை பெரும் நிறுவனமாக மாற்ற ஊழியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ரவிசங்கர் பிரசாத். இந்தப் புதிய மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது பி.எஸ்.என்.எல்.