Published:Updated:

அமேசான் ஜெஃப் பெஸோஸின் Shadow Adviser சிஇஓ ஆனது எப்படி... யார் இந்த ஆண்டி ஜாஸி?!

அமேசான் என்ற நிறுவனத்தின் இன்ஜினாக மாறுகிறது அமேசான் வெப் சர்வீஸஸ். அதனை உந்திச் செலுத்தும் நபராக ஆண்டி ஜாஸி இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகின் இரண்டாவது ட்ரில்லியன் டாலர் நிறுவனமான அமேசானுக்கு இன்று 27-வது பிறந்த நாள். இந்த 27 வருடங்களாக அமேசானின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வழிநடத்தியவர் பெஸோஸ். இப்போது அமேசானின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து பெஸோஸ் விலக அந்த இடத்துக்கு ஆண்டி ஜாஸி பணியமர்த்தப்பட்டிருக்கிறார். யார் இந்த ஆண்டி ஜாஸி?
ஜெஃப் பஸாஸ், அமேசான் நிறுவனர்
ஜெஃப் பஸாஸ், அமேசான் நிறுவனர்

அமேசான் ஸ்டார்ட் அப்பாக இருந்ததில் இருந்தே அதனுடன் பயணித்து வந்தவர் ஆண்டி ஜாஸி. நியூயார்க் நகரைச் சேர்ந்த இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்த கையோடு 1997-ஆம் ஆண்டு அமேசானில் மார்கெட்டிங் மேனேஜராக பணியில் இணைந்திருக்கிறார். அமேசானில் எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகளில் ஜாஸியின் பங்கும் அதிகம். புத்தகங்களை மட்டும் விற்பனை செய்துவந்த அமேசானில், சிடி மற்றும் டிவிடிக்களும் விற்பனை செய்யலாம் என்ற யோசனையில் ஆரம்பித்து அமேசானின் பாதையையே புரட்டிப் போட்ட பல ஐடியாக்களின் பின்னால் ஜாஸி இருந்திருக்கிறார். அதில் மிக முக்கியமானது அமேசான் வெப் சர்வீஸஸ்.

2002-ம் ஆண்டில் பெஸோஸூக்கு Shadow Adviser-ஆக நியமனம் செய்யப்படுகிறார் ஜாஸி. அப்போதில் இருந்தே பெஸோஸின் நிழலாகத்தான் இருந்து வந்திருக்கிறார். பெஸோஸின் கொள்கைகளும், ஜாஸியின் கொள்கைகளும் பெரும்பாலும் ஒத்துப் போகவே செய்திருக்கின்றன. தற்போது அமேசானின் தலைமை செயல் அதிகாரி மாறியிருப்பதால் அதன் கொள்கைகளிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், கொள்கையில் பெரிதாக மாற்றங்கள் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் பெஸோஸின் நகலாகத்தான் ஜாஸி இருந்து வந்திருக்கிறார். பெஸோஸின் வியாபாரக் கொள்கைகள் ஜாஸியை வெகுவாகவே ஈர்த்திருக்கின்றன.

ஆண்டி ஜாஸி
ஆண்டி ஜாஸி

2003-ஆம் ஆண்டு கிளவுட் கம்ப்யூட்டிங் தளம் ஒன்றை உருவாக்கலாம் என்ற ஜாஸியின் யோசனைதான் அமேசானை ட்ரில்லியன் டாலர் என்ற அரியணையில் அமர்த்தியிருக்கின்றது. 2003-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட யோசனை 2006-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. அமேசான் வெப் சர்வீஸஸ் உருவாக்கப்படுகிறது. அமேசான் வெப் சர்வீஸஸ் தொடங்கப்பட்டதில் இருந்தே அதனை ஜாஸியே தலைமை தாங்கி வருகிறார். 2003-ல் கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாத காலத்திலேயே ஜாஸி கொடுத்த யோசனையினால், 2020-ல் அமேசான் 63 சதவிகித லாபத்தை தன் அமேசான் வெப் சர்வீஸஸின் மூலம் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெஃப் பெஸோஸூடன் விண்ணுக்குச் செல்லும் 82 வயது வாலி ஃபங்க், யார் இவர்?

க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் 33 சதவிகிதம் இடத்தை அமேசானே ஆக்கிரமித்திருக்கிறது. அமேசான் என்ற நிறுவனத்தின் இன்ஜினாக மாறுகிறது அமேசான் வெப் சர்வீஸஸ். அதனை உந்திச் செலுத்தும் நபராக ஆண்டி ஜாஸி இருக்கிறார். இந்த ஒரு செயல்பாடே சொல்லிவிடும், ஆண்டி ஜாஸி ஏன் அமேசானின் அடுத்த செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று. தற்போது அவரது சம்பளம் 1.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள 61,000 பங்குகளையும் ஆண்டி ஜாஸிக்கு அமேசான் நிறுவனம் அளிக்கவிருக்கிறது.

அமேசான்
அமேசான்

ட்ரில்லியன் டாலர் நிறுவனம் என்றால் சவால்களும் குறைவாகவா இருக்கப்போகிறது. தலைமை செயல் அதிகாரி என்னும் பகட்டான அரியணையில் ஏறி அமர்ந்தாலும், ஜாஸி சந்திக்கவிருக்கும் பிரச்னைகளும் கண்முன்னே கொட்டிக் கிடக்கின்றன. ஐரோப்பாவில் சுயலாபத்துக்காக வணிகர்களின் தகவல்களை அமேசான் பயன்படுத்திக் கொண்டது என அதன் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அமேசானின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சில்லறை வணிகப் பிரிவு இரண்டையும் பிரிக்க வேண்டும் என அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக கொலம்பியா மாகாணத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மற்ற நிறுவனங்களுடனான போட்டியைச் சமாளிக்க வேண்டும் என ஜாஸி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறையவே இருக்கின்றன.

தன் கண் முன்னே இருக்கும் சவால்களை முறியடித்து வெற்றிகரமான தலைமை செயல் அதிகாரி என ஆண்டி ஜாஸி நிரூபிப்பார் என வாழ்த்துவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு