Published:Updated:

`தொடரும் அந்நிய நேரடி முதலீடுகள்!' - ஊரடங்கிலும் கொடிகட்டிப் பறக்கும் ஜியோ

ஜியோ
ஜியோ

உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது எனலாம்.

உலகையே அனுதினமும் பதற்றத்தில் வைத்திருக்கும் கொரோனா வைரஸால் வீட்டிலேயே முடங்கிப்போயுள்ளது மக்களின் வாழ்க்கை. அதே சமயத்தில் உலகப் பொருளாதாரமே சமீபகாலங்களில் கண்டிராத பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது. ஆனால், இச்சமயத்திலும் ஜியோ நிறுவனத்தின் காட்டில் முதலீட்டு மழை கொட்டித் தீர்த்துக்கொண்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டு அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம். அண்மையில் சில வாரங்களாகவே பெரிய அளவிலான சர்வதேச முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

அந்தவகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 40 வருடங்களாகத் தொழில்நுட்பம், நுகர்வோர் சேவை, நிதிச்சேவை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துவரும் முன்னணி நிறுவனமும், உலக அளவில் 35 பில்லியன் டாலர் சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனமுமான ‘குளோபல் அட்லாண்டிக் நிறுவனம்’ ரிலையன்ஸ் ஜியோவில் 1.34% பங்குகளை வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் 6598.38 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. அதாவது தற்போதைய ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பங்கு மதிப்பை 4.91 கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கியுள்ளது.

General Atlantic
General Atlantic

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த நான்கு வாரங்களில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இதுவாகும். உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

இதற்கு முன்பாக ஏப்ரல் 22-ம் தேதி `ஃபேஸ்புக் நிறுவனம்’ 43,574 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.99% பங்குகளில் முதலீடு செய்தது. இதன்மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குப் பெரிய முதலீடு கிடைத்தது ஒருபுறமிருந்தாலும், ‘இந்தியாவின் ஆன்லைன் மார்க்கெட்டில் களமிறங்க வேண்டும்’ என்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் கனவும் நிறைவேறியது.

ஃபேஸ்புக் - ஜியோ புதிய கூட்டணி
ஃபேஸ்புக் - ஜியோ புதிய கூட்டணி

அதன்பின், மே 3-ம் தேதி அமெரிக்காவின் ‘சில்வர் லேக் நிறுவனம்’ ஜியோவின் 1.15% பங்குகளை 5,656 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அதேபோல் மே 8-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ‘விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர்’ நிறுவனம் ஜியோவின் 2.32% பங்குகளை 11,637 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செய்த முதலீடு ஜியோவிற்கு ஊரடங்கு காலத்தில் பெரும் பலமாகவே அமைந்துள்ளன. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 67,194.74 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை இந்த நான்கு பெரிய அந்நிய முதலீடுகள் கொடுத்துள்ளன.

ஃபேஸ்புக், ஜியோ புதிய கூட்டணி - ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

இது குறித்துப் பேசியிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, “ சர்வதேச முதலீட்டு நிறுவனமான குளோபல் அட்லாண்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி பற்றிய அந்நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெரிதும் பாராட்டுகிறேன். 40 ஆண்டுக்கால தொழில்நுட்ப முதலீட்டில் அனுபவம் கொண்ட அட்லாண்டிக்கின் உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் மூலதன நுண்ணறிவுகளை ஜியோவின் நலனுக்காகப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு