சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

நியூராலிங்க்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூராலிங்க்

நியூராலிங்க், Brain-Machine Interface(BMI) தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் நிறுவனம் எனச் சொல்லலாம்.

பேபால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என இதுவரை எலான் மஸ்க் தொட்டது அனைத்துமே தங்க முட்டைகளிடும் தொழில்நுட்ப வாத்துகள். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், எலெக்ட்ரிக் கார், தனியார் விண்வெளிப் பயணம் என இன்றைய தொழில்நுட்பங்களை நேற்றே அடையாளம் கண்டவர் எலான் மஸ்க். இன்று நாளைய தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார். அப்படியான ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்தான் ‘நியூராலிங்க்’ (Neuralink). கடந்த மூன்று ஆண்டுகளில் 158 மில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றிருக்கும் இந்த ஸ்டார்ட்-அப்பில் மஸ்க்கின் பங்கு மட்டும் 100 மில்லியன் டாலர். சமீபத்தில் டெக் உலகில் பலரது கவனத்தையும் பெற்ற ஒரு முக்கிய டெமோவை நிகழ்த்திக்காட்டியது இந்த நிறுவனம். சரி, ‘நியூராலிங்க்’ என்பது என்ன மாதிரியான நிறுவனம்?

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

நியூராலிங்க், Brain-Machine Interface(BMI) தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் நிறுவனம் எனச் சொல்லலாம். அதாவது மூளையிலிருந்து நேரடியாக இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பது இந்த நிறுவனத்தின் கனவு. இவை முழு வடிவம் பெற்றால், டச் ஸ்கிரீன் வேண்டாம், மௌஸ், கீபோர்டு என எதுவுமே வேண்டாம் நீங்கள் நினைத்தாலே போதும் அது இயந்திரங்களுக்குப் புரியும், அவற்றை அவை செயல்படுத்தும். கேட்க பிரமிப்பாக இருக்கிறதல்லவா... நியூராலிங்க் மூலம் எலான் மஸ்க் சாதிக்க நினைப்பது இதைத்தான். இத்தனை ஆண்டுகளில் நியூரோ சயின்ஸ் மற்றும் இதுபோன்ற brain-machine interface தொழில்நுட்பங்கள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் அனைத்தும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன. நியூராலிங்க், இன்று பெருமளவில் மேம்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், நானோ டெக் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல நினைக்கிறது.

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

மூளையில் தகவல்கள் நியூரான் என்னும் நரம்பணுக்கள் வழி எலெக்ட்ரிக் சிக்னல்கள் மூலம் பகிரப்படுகின்றன. இந்த சிக்னல்களைக் கண்காணிப்பதே முதல் வேலை. அதை வைத்துதான் மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நியூராலிங்க் குழு இதில் கண்டிருக்கும் மிக முக்கியமான முன்னேற்றமாகக் கூறுவது ‘flexible threads’ஸைத்தான். சிறிய மெல்லிய வயர்களைத்தான் threads என்று அழைக்கின்றனர். பக்கவாதம் போன்ற பாதிப்புகள் கொண்டவர்களுக்கு நேரடியாக மூளையிலிருந்தே மொபைல்கள் மற்றும் கணினிகளை இயக்கும் திறனைக் கொடுப்பதே இந்த நிறுவனத்தின் முதல் இலக்காக இருக்கிறது. இதை அடையும் முயற்சியில் இந்த த்ரெட்கள் பெரும்பங்கு வகிக்கப்போகின்றன. 4 முதல் 6 மைக்ரான் வரை மட்டுமே இருக்கும் இந்த த்ரெட்கள் நமது முடியை விடவும் மெல்லியதாக இருக்கின்றன. இது மாதிரியான 96 த்ரெட்களை கனெக்ட் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 3,072 எலெக்ட்ரோடுகளை மூளையில் பொருத்தமுடியுமாம். இந்த எலெக்ட்ரோடுகள் மூலம்தான் என்னென்ன சிக்னல்கள் நியூரான்களுக்கிடையே பகிரப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க முடியும்.

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். சில ஹாலிவுட் படங்களில் காட்டியிருப்பார்கள். தலையைச் சுற்றிப் பல பெரிய வயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அத்தனை வயர்கள் இருந்தாலும் அதிகபட்சமாக 128 எலெக்ட்ரோடுகளைத்தான் பொருத்த முடிந்திருக்கிறது. இதனால் குறைந்த அளவிலான டேட்டாவையே மூளையிலிருந்து அவை பெற்றுத் தந்தன. அளவிலும் இவை பெரியதாக இருப்பதால் இவற்றை நீண்டநேரமும் பயன்படுத்த முடியாது. கைக்குள் அடங்கும் அளவுக்கு இதைச் சிறியதாக மாற்றியதே நியூராலிங்க்கின் முதல் வெற்றி. இதன்மூலம் அதிக எலெக்ட்ரோடுகளை மூளையில் இணைக்க முடிவதால் அதிக டேட்டா கிடைக்கும். அதிக டேட்டா கிடைக்கும்போது மூளை என்ன நினைக்கிறது என்பதைச் செயற்கை நுண்ணறிவால் இன்னும்கூடத் துல்லியமாகக் கணிக்கமுடியும்.

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

கடந்த வருடம் நியூராலிங்க் காட்டிய டெமோவில், லேசர்கள் மூலம் துல்லியமாக ஒவ்வொரு வயரும் மூளையுடன் கோக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். இந்த வயர்கள் நேராக N1 என்னும் ஒரு சென்சாரில் இணைக்கப்படும். இந்த சென்சார் காதின் பின் எளிதாக மாட்டக்கூடிய ஒரு சிறிய சாதனத்துக்கு வயர்லெஸ்ஸாகத் தகவல்கள் அனுப்பும். இந்தச் சாதனத்தைத் தேவைப்படும்போது கழற்றி சார்ஜ் செய்யமுடியும். இது புளூடூத் மூலம் தகவல்களைக் கணிணிக்கோ மொபைலுக்கோ அனுப்பும்.

இந்த வருடம் இந்த டிசைனை இன்னும் எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு சாதனம். பழைய 50 பைசா நாணயத்தின் அளவு இருக்கும் ஒரு மைக்ரோ சிப் இது. இத்துடன் பல த்ரெட்கள் இருக்கின்றன. ஊசி குத்துவதுபோல இந்த த்ரெட்கள் ஒவ்வொன்றாக மூளையில் இணைக்கப்படுகின்றன. இது முடிந்ததும் சாதனம் மண்டை ஓட்டில் பொதியப்படுகிறது. இந்த சாதனம் மூளையிலிருந்து வரும் சிக்னல்களை வயர்லெஸ்ஸாகக் கணினிக்கு அனுப்புகிறது. இந்த சாதனம் ஒரு சார்ஜில் ஒரு நாள் வரை தாக்குப்பிடிக்கிறது. அதன்பின் வயர்லெஸ்ஸாக இதை சார்ஜ் செய்ய வேண்டும். மூன்று பன்றிகளை வைத்து இந்த சாதனத்தின் லைவ் டெமோ ஒன்றையும் காட்டியிருக்கிறார் எலான் மஸ்க்.

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

ஒன்று, எந்தவொரு சாதனமும் பொருத்தப்படாத சாதாரணப் பன்றி. இரண்டாம் பன்றி கெர்ட்ரூட் (Gertrude), இது நியூராலிங்க் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பன்றி. இரண்டு மாதங்களாக மூளையில் இந்தச் சிப்புடன் சுற்றித்திரிகிறது. மொத்தமாக 1024 எலெக்ட்ரோடுகள் கெர்ட்ரூட்டின் மூளையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. மற்றொரு பன்றியில் நியூராலிங்க் சாதனம் பொருத்தப்பட்டு பின்பு நீக்கப்பட்டிருக்கிறது. மூன்று பன்றிகளுமே ஒரே மாதிரியானதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டினார் மஸ்க். கெர்ட்ரூட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் மூளையில் இருந்து லைவ்வாகத் தகவல்கள் வருவதையும் அவர் காட்டினார். எப்போதெல்லாம் கெர்ட்ரூட்டின் மூக்கு ஒரு பொருளைத் தொடுகிறதோ அப்போதெல்லாம் பீப் சத்தம் வரும் வண்ணம் டெமோ செய்து காட்டப்பட்டது.

இந்தச் சிப்பைத் தலையில் பொருத்தப் பயன்படுத்தும் ரோபோவையும் அறிமுகப்படுத்தினார் மஸ்க். மிகவும் நுண்ணிய வயர்களை மூளையில் பதிக்கவேண்டும் என்பதால் இந்த வேலைக்கு ரோபோக்கள் மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் அவர். சரியாக ரத்தக்குழாய்கள் எதுவும் இல்லாத இடம் பார்த்து இந்த நுண்ணிய வயர்களைத் துல்லியமாகப் பதிக்கிறது இந்த ரோபோ. இதேபோன்று பொருத்திய சிப்பை வெளியே எடுக்கவும் ரோபோவே பயன்படுத்தப்படுமாம். முப்பதே நிமிடங்களில் செய்து முடித்துவிடக் கூடிய எளிய வழிமுறை இது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நியூராலிங்க் சிப்கள்கூட ஒரே மூளையில் பொருத்த முடியும் என்கிறார் எலான் மஸ்க்.

இயந்திரங்களை மூளையை வைத்துக் கட்டுப்படுத்துவது மட்டும் இதன் ஒரே பயன் கிடையாது. எப்படி மூளையிலிருந்து தகவல்கள் பெற முடிகிறதோ அப்படி மூளைக்குத் தகவல்கள் அனுப்பவும் முயற்சி செய்து வருகிறது நியூராலிங்க். இது சாத்தியமானால் மூளையில் இருக்கும் நியூரான்களைத் தூண்டிவிட்டு சில நரம்பியல் குறைபாடுகளைச் சரி செய்ய முடியும். கண்பார்வைக் கோளாறுகள், பர்கின்சன், அல்சைமர் போன்ற குறைபாடுகளுக்கும்கூடத் தீர்வு பிறக்கும் என்கிறார்கள். ஆனால் இந்தப் பயன்களையெல்லாம் பார்க்க இன்னும் பல வருடங்கள் ஆகும். முன்னேற்றங்களைப் பொறுத்தவரையில் இப்போதுதான் நியூராலிங்க் பிள்ளையார் சுழியே போட்டிருக்கிறது.

மிக விரைவில் மனித உடலில் முதல் நியூராலிங்க் சிப் பொருத்தப்படவிருக்கிறது. அதற்கான முதல்கட்ட ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டதாக நியூராலிங்க் தெரிவித்திருக்கிறது. அடுத்த வருடமே பன்றிகளுக்குப் பதிலாக மூன்று மனிதர்களுடன் மஸ்க் மேடையேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!
நீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்!

நினைக்கிறது பெருசா... நடத்துறது பெருசா?!

ன்றிகளை வைத்து எலான் மஸ்க் காட்டியிருக்கும் நியூராலிங்க் டெமோ, அறிவியல் உலகில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஆனால், மேம்பட்ட பொறியியல் மூலம் பல விஷயங்களைச் சாதித்திருக்கிறது என்றாலும் மூளை சார்ந்த அறிவியலில் புதிதாக எதுவும் நியூராலிங்க் கண்டுபிடித்துவிடவில்லை என்கின்றனர் சில நியூரோ சயின்ஸ் பேராசிரியர்கள். அதில் திருப்புமுனையாகச் சில ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே நியூராலிங்க்கின் கனவு நனவாகும் என்கிறார்கள். “சிலர் ஐடியாவுக்கு அதிக மதிப்பும், அதைச் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளுக்குக் குறைவான மதிப்பும் கொடுக்கின்றனர். உதாரணத்திற்கு, நிலவுக்குச் செல்ல வேண்டும் என்று திட்டம் போடுவது ஈஸி, அதைச் செயல்படுத்துவதுதான் கஷ்டம்” என இதற்குப் பதிலளித்திருக்கிறார் எலான் மஸ்க்.