Election bannerElection banner
Published:Updated:

இனி இந்திய கிரிக்கெட் ஜெர்ஸியில் 'ஓப்போ' இருக்காது... இந்த ஸ்டார்ட் அப்தான்!

இந்திய ஜெர்ஸி
இந்திய ஜெர்ஸி

"என்னப்பா இது... ஆன்லைன்ல ஒரு ட்யூஷன் சென்டர்தான" என ஆரம்பத்தில் பைஜூவைப் பற்றிச் சொன்னவர்கள் ஏராளம். இன்று மொபைல் நிறுவனம் ஒன்றுடன் போட்டிப்போட்டு அந்த இடத்தைப் பிடிக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறது பைஜூ. 

இந்திய அணியின் ஜெர்ஸியில் இப்போது ஓப்போ நிறுவனம் இடம் பெற்றிருக்கிறது. இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஸ்பான்ஸர். 2017ம் ஆண்டு ஓப்போ இந்திய கிரிக்கெட் அணியின் மெயின் ஸ்பான்ஸர் ஆனது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தை சுமார் 1079 கோடி ரூபாய் தந்து ஓப்போ பெற்றது. விவோவின் 768 கோடி ரூபாய் ஆஃபரைவிட இது அதிகம் என்பதால் ஓப்போவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்போது இந்தத் தொகை மிக அதிகமென ஓப்போ நினைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 3 ஆண்டுகளுக்கு இதைத் தொடர்ந்தால் நஷ்டம் நிச்சயமென ஓப்போ நினைக்கிறது. எனவே அந்த இடத்தை இந்தியாவின் இன்னொரு முக்கியமான ஸ்டார்ட் அப் ஆன பைஜுவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. ஓப்போ தர வேண்டிய பணத்தை பைஜூ தந்துவிடுமென்பதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதனால் எந்த நஷ்டமுமில்லை.

இந்திய அணி அடுத்து ஆடவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் ஓப்போவுக்குத்தான். அதன் பின் செப்டெம்பர் மாதம் வரும் தென்னாப்பிரிக்கத் தொடரிலிருந்து பைஜுவுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைஜூ:

Byju's என்பது இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய கல்வித்துறையைச் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப். Fall in love with learning (கற்றலைக் காதலிப்போம்) என்பதுதான் அவர்கள் டேக்லைன். இன்றைய தேதியில் அவர்களின் மதிப்பு 5.4 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாகக் கணிக்கப்படுகிறது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 37,000 கோடி.

ரவீந்திரனின் சொந்த ஊர் கேரளாவில் இருக்கும் ஒரு கிராமம். ரவீந்திரனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் இருந்தும் அவர்கள் ”படி படி” என நச்சரிக்கவில்லை. ரவீந்திரனுக்குக் கணக்கு பிடிக்கும். அதனால், கணக்கின் அடிப்படையில் வரும் கேள்விகளுக்குப் பதில் தருவது அவருக்கு விருப்பமான பொழுதுபோக்கானது. ஐ.ஐ.டி உட்பட இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CAT தேர்வில் அப்படி நிறைய கேள்விகள் வரும். அது ரவீந்திரனுக்கு விருப்பமான தேர்வு. அவர் நண்பர்களில் CAT தேர்வு எழுத விரும்பியவர்கள் ரவீந்திரனிடம் உதவி கேட்டனர். ”கரும்பு திண்ண கூலியா” என அவரும் ஜாலியாக அந்த வேலையைச் செய்தார். “சும்மா நாமும் எழுதிப் பார்க்கலாமே” என அவரும் CAT தேர்வை எழுத, அவர் அடித்தது செஞ்சூரி. அவர் பாடமெடுத்த நண்பர்களும் நல்ல மதிப்பெண் பெற்றனர்.

அதன்பின், மீண்டும் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார். 2 ஆண்டுகள் கழித்து, 2005ல் இந்தியாவுக்குத் திரும்பியவரை இன்னும் சில நண்பர்கள் மொய்த்தார்கள். அவர்களுக்கும் CAT தேர்வில் வெல்ல வேண்டுமென ஆசை. ரவீந்திரன் ‘நோ’ சொல்லவில்லை. அவர்களும் வெற்றி பெற்றார்கள். அதுதான் ரவீந்திரனின் திருப்புமுனை தருணம். அவர் ஜீபூம்பா வெளியே குதித்த தருணம். “அப்பா அம்மா மாதிரி நாமளும் நல்ல ஆசிரியர்தான் போலிருக்கே” என நினைத்தார் ரவீந்திரன். பள்ளியில் விளையாட்டுதான் முக்கியம் என நினைத்தபோது அதைச் செய்தவர், நல்ல வேலையிலிருக்கும் போது “நமக்கு சொல்லிக்கொடுக்கிறதுதான் செட் ஆகும்” என நினைத்தார். நினைத்ததைச் செய்வதுதான் ரவீந்திரனின் பழக்கம். வேலையை விட்டுவிட்டார்.

பைஜூஸ்
பைஜூஸ்
பைஜூஸ்

பள்ளி, கல்லூரிகளில் எந்த செமினாரும் எடுக்காதவருக்காக எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தார்கள். ஊர் ஊராகப் பறந்தார். முதல் வகுப்பு இலவசம். அது பிடித்திருந்தால் அடுத்து அட்வான்ஸ் வகுப்பு. அதற்குப் பணம் கட்டினால் போதும். பைஜூவின் இலவச வகுப்பில் கற்ற மாணவர்கள் யாரும் அதை வேண்டாமென சொன்னதில்லை. அவருக்குத் தெரியாமலே “பைஜூஸ் கிளாஸஸ்” என்பது ஒரு பிராண்டாக மாறியது. ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் உருவானது. அப்போது தன் வகுப்புகளை வீடியோவாக மாற்ற முடிவு செய்தார். அது இன்னும் கூடுதல் வருமானம் தந்தது. இந்தியாவில், ஓர் ஆசிரியர் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு பைஜூ சம்பாதித்தார். ஒரு சிறிய அறையில் தொடங்கிய பைஜுவின் வகுப்பறை வெளியே ஹாலுக்கு வந்தது; பின் கொஞ்சம் பெரிதாகி ஒரு வீட்டையே ஆக்கிரமித்தது. இன்னும் வளர்ந்து ஒரு ஆடிட்டோரியமே வகுப்பறையாக மாறிப்போனதெல்லாம் ரவீந்திரன் என்ற ஆசிரியரின் மிகப்பெரிய சாதனை.

தொழில்நுட்பம் உலகை மாற்றிய மிக முக்கியமான கருவி. பலரால் புரிந்துகொள்ள முடியாத, சாத்தியமில்லாத பல விஷயங்களை எளிமையாக்கியது தொழில்நுட்பம்தான். கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு பெரியது. அது, கற்றல் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஒவ்வாமையைப் போக்கும் என நம்பினார் ரவீந்திரன். மொபைல்கள் உலகை ஆக்ரமித்துவிட்டதை உணர்ந்தவர் 2015ல் ”பைஜூஸ்” செயலியை உருவாக்கினார். அதே கான்செப்ட்தான். ஆப் இலவசம்; அதன்பின் வகுப்புகள் காண பணம் கட்ட வேண்டும்.

"என்னப்பா இது... ஆன்லைன்ல ஒரு ட்யூஷன் சென்டர்தான" என ஆரம்பத்தில் பைஜூவைப் பற்றிச் சொன்னவர்கள் ஏராளம். இன்று மொபைல் நிறுவனம் ஒன்றுடன் போட்டிப்போட்டு இந்திய கிரிக்கெட் ஜெர்ஸியில் அந்த இடத்தைப் பிடிக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறது பைஜூ.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு