Published:Updated:

சிக்கன நடவடிக்கை..!- 7,000 பேரை பணிநீக்கம் செய்ய காக்னிசன்ட் முடிவு

அந்நிறுவனத்தில் பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பணியாளர்கள் வரை, தற்போதுள்ள பணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

காக்னிசன்ட்
காக்னிசன்ட் ( vikatan )

முன்னணி ஐ.டி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களில் 7,000 பேர் வரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில், பெரும்பான்மையாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் வரை இந்தியர்களே பணியாற்றுகிறார்கள். எனவே, இந்தப் பணியிழப்பால் இந்தியர்களுக்கே பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

காக்னிசன்ட்
காக்னிசன்ட்
vikatan

காக்னிசன்ட் நிறுவனம், சிக்கன நடவடிக்கையின்மூலம் வருமானத்தை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் பிரிவைச் சேர்ந்த 10,000 முதல் 12,000 பணியாளர்கள் வரை, தற்போதுள்ள பணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இவர்களில் 5,000 பணியாளர்களை மட்டும் திறன் மேம்பாடு செய்து, அந்நிறுவனத்தின் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றிப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 5,000 முதல் 7,000 வரையிலான பணியாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாவது உறுதியாகிறது.

மேலும், இந்நிறுவனம் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளைச் செய்துகொடுக்கிறது. அந்தப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, 2020 முதல் சில பிசினஸ்களைக் குறைத்துக்கொள்ளவும் காக்னிசன்ட் முடிவெடுத்துள்ளது.

காக்னிசன்ட் ஊழியர்கள் பணி நீக்கம்
காக்னிசன்ட் ஊழியர்கள் பணி நீக்கம்

பணிகளைக் குறைத்துக்கொள்ளும்போது, அதில் பணியாற்றிவரும் 6,000 பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதற்காக, காக்னிசன்ட் நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் இவர்களைப் பணியமர்த்த முடிவெடுத்துள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக 6,000 பேர் வரை பாதிக்கப்படக்கூடும்.