கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனால் விரக்தியடைந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஜோ பைடனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதனால் டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. எனவே பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதள செயலிகளுக்குப் போட்டியாக ட்ரம்ப், அவரது ‘ட்ரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி க்ரூப்(TMTG)’ உடன் இணைந்து ‘Truth Social’ என்ற செயலியைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) ஆப்பிள் ஸ்டோரில் அறிமுகப்படுத்தினார். இந்த செயலி ஆப்பிள் யூஎஸ் ஸ்டோரில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பலர் இந்த செயலியைப் பயன்படுத்துவதில் நிறைய பிரச்னைகள் வந்துள்ளதாகப் புகாரளித்துள்ளனர்.

இந்த ‘Truth Social’ செயலியை பதிவிறக்கம் செய்கையில் பலருக்கு ‘ஏதோ தவறாக இருக்கிறது. மீண்டும் முயற்சி செய்யவும்’ எனவும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நாங்கள் உங்களை ஒரு எண்ணாக கருதவில்லை. உங்கள் காத்திருப்புப் பட்டியல் எண் கீழே உள்ளது: #170,174.’ என்ற குறுஞ் செய்திகள் வந்ததாகக் கூறுகின்றனர். மேலும் ஒருவருக்கு ‘அதிகமான பதிவிறக்கம் காரணாமாக தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது, எனவே நாங்கள் உங்களை எங்கள் காத்திருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம்’ என்றும் குறுஞ் செய்திகள் வந்துள்ளன.
இவ்வாறு பல பிரச்னைகள் ‘Truth Social’ செயலியில் உள்ளதால் பலர் இதுபற்றி தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
