Published:Updated:

`மார்வெல், ஃபாக்ஸ், ஸ்டார்வார்ஸ், இன்னும் பல...'- சாதனைகளை அடுக்கிய டிஸ்னி சிஇஓ திடீர் பதவி விலகல்

பாப் ஐகர்
பாப் ஐகர் ( Jordan Strauss | AP )

இந்த மீக்கி மௌஸ் நிறுவனம்தான் இன்று பாதி ஹாலிவுட்டை கைக்குள் வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் CEO-வாகச் செயல்பட்டுவந்த பாப் ஐகர்.

வால்ட் டிஸ்னி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் டிஸ்னியின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) பாப் ஐகர், இனி அந்தப் பதவியில் செயல்பட மாட்டார் என அறிவித்துள்ளது. இவருக்குப் பதில் டிஸ்னி பார்க்ஸின் (டிஸ்னிலேண்டு போன்ற தீம் பார்க்குகள்) தலைவராக உள்ள பாப் சேபக் இந்தப் பொறுப்பை இன்றே ஏற்கவுள்ளார். ஏற்கெனவே கொரோனா வைரஸால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது டிஸ்னியின் தீம் பார்க்குகள். இந்நிலையில் திடீரென ஏன் இந்த அறிவிப்பு எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். பாப் ஐகரின் தற்போதைய 36 மாத ஒப்பந்த காலத்தில் 14 மாதங்களே முடிவடைந்துள்ளன. இந்த மாற்றத்தால் பங்குச்சந்தையில் டிஸ்னியின் பங்குகள் சரிந்தன.

யார் இந்த ஐகர்?

ஐகரின் மேற்பார்வையில் 2005 முதல் டிஸ்னி மாபெரும் வளர்ச்சியைக் கண்டது. இக்காலகட்டத்தில் டிஸ்னி நிறுவனம் படங்கள், தீம் பார்க்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு ஊடகங்கள் எனத் தனது கால்தடங்களை எல்லாவற்றிலும் பதித்தது. கடந்த ஆண்டுகூட இவரின் தலைமையின் கீழ் டிஸ்னி ப்ளஸ் என்ற ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்தது வால்ட் டிஸ்னி நிறுவனம். இதுவரை சுமார் 30 மில்லியன் சந்தாதாரர்களை டிஸ்னி ப்ளஸ் பெற்றுள்ளது. மேலும் 71.3 பில்லியன் விலைக்குத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான 21st செஞ்சுரி ஃபாக்ஸை வாங்கியதும் இவரது தலைமையின்கீழ்தான்.

Disney plus
Disney plus

இன்று மக்களின் விருப்பமான சூப்பர் ஹீரோக்கள் அனைத்தும் டிஸ்னியின் கைவசம் வந்தது பாப் ஐகர் தலைமையில்தான். ஆம், கடந்த தசாப்தத்தின் தொடக்கத்தில்தான் மார்வெல் என்டர்டெய்ன்மென்டை விலைக்கு வாங்கியது டிஸ்னி. இதோடு லுகாஸ் ஃபிலிம், ஸ்டார் வார்ஸ், இண்டியானா ஜோன்ஸ் போன்ற முக்கிய ஃபிரான்சைஸ்களையும் டிஸ்னிவசம் கொண்டுவந்தார். ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் முறிந்து போன உறவைச் சரி செய்தவரும் இவர்தான். இதனால் ஜாப்ஸ் 1986-ல் கண்டுபிடித்த பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோவையும் டிஸ்னி வாங்கியது.

Vikatan

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அமெரிக்க படங்களில் 38 சதவிகிதம் டிஸ்னி ஸ்டூடியோவால் வெளியிடப்பட்டவை. மேலும் கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த முதல் ஐந்து படங்கள் டிஸ்னியின் படங்கள்.

டிஸ்னியின் புதிய CEO பாப் சேபக்
டிஸ்னியின் புதிய CEO பாப் சேபக்
Kin Cheung

பாப் ஐகரின் காலத்தில் டிஸ்னி நிறுவனம் தனது உச்சத்தைத் தொட்டது என்று சொன்னால் மிகையாகாது. ஐகர் தொட்டதெல்லாம் டிஸ்னிக்கு வெற்றியாகவே அமைந்தது. ஐகர், CEO பொறுப்பிலிருந்து வெளியேறுவதைப் பற்றி டிஸ்னியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் தனக்கு அடுத்து வரவுள்ள இயக்குநர் சேபக்குக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் 2021-ம் ஆண்டு இறுதி வரை இருவரும் டிஸ்னி நிறுவனத்துக்காக ஒன்றாகப் பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு