வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது நாம் தினசரி பயன்படுத்தும் கணக்கு. வருடத்திற்கு 13 மாதங்கள் என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்கு. மாதம் ஒரு முறை என ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் பல ஆண்டுகளாகவே வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதற்கேற்ற வகையில் தான் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களையும் வைத்திருக்கின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கை குறித்து வாடிக்கையாளர் தரப்பில் இருந்து புகார் எழுந்ததாகவும், அதனால் புதிய விதிமுறை ஒன்றைத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விதித்திருப்பாகவும் கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய் (TRAI).

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அனுப்பிய அந்த அறிவிப்பில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களில் 30 நாள் அல்லது ஒரு மாத கால அளவு கொண்ட ரீசார்ஜ் திட்டம் அல்லது சிறப்புத் திட்டம் ஒன்றையாவது வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது ட்ராய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாடிக்கையாளர்களின் புகாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ட்ராய், இந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் இதனைச் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.