ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலையில் இருந்து நீக்குவது முறையான செயல் அல்ல. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்த போதும், சில நிறுவனங்கள் அவர்களின் பொருளாதார செலவுகளை ஈடுகட்ட சில மாத சம்பளத்தைச் சேர்த்துக் கொடுப்பதாக உறுதி அளித்தது ஊழியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச வணிக நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman Sachs) என்ற நிறுவனம், தங்களது 3,000 ஊழியர்களுக்கு கம்பெனி சி.இ.ஓ டேவிட் சாலமோனுடன் காலை 7.30 மணிக்கு கான்ஃபரன்ஸ் ஹாலில் மீட்டிங் எனக் கூறியுள்ளது. அடித்துப் பிடித்து அங்கு சென்றவர்களிடம், நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என அறிவித்துள்ளது.
சொன்ன நேரத்துக்கு முன்னதாக ஒரு ஊழியர் அங்கு சென்றிருக்கிறார். அவரிடம் `எங்களை மன்னித்து விடுங்கள்; பொய்யாக இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம். இதைச் செய்வதற்காக மேனேஜர் மிகவும் வருந்தினார். எங்களுக்கு வேறு வழியில்லை, பெஸ்ட் ஆஃப் லக்’ எனக் கூறி வலுக்கட்டாயமாகப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

கடைசியாகக் கொடுக்கப்பட்ட 2 ஆப்ஷன்கள்...
மீட்டிங் என ஓடிவந்தவர்களுக்குப் பணி நீக்க அறிவிப்பை அறிவித்து, இரண்டு ஆப்ஷனைக் கொடுத்துள்ளனர். ஒன்று உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேறலாம் அல்லது காத்திருந்து தங்களது சக ஊழியர்களைப் பார்த்துப் பேசிவிட்டு குட் பை சொல்லிப் பிரியலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மீட்டிங் எனக் கூறி, அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.