Published:Updated:

`புதிய சட்டம்; வரி மட்டும் ரூ.2,300 கோடி!'- கூகுளிடம் வசூலிக்கும் ஆஸ்திரேலியா

கடந்த பத்து வருடங்களில், ஆஸ்திரேலியாவில் மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலருக்கு வருவாய் ஈட்டியுள்ளது கூகுள்.

google
google

உலகின் முன்னணி தேடுதல் தளமான கூகுளை 481 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2,300 கோடி ரூபாய்) வரி செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது, ஆஸ்திரேலிய வரி அலுவலகம். கிட்டத்தட்ட 10 வருட காலமாக நடந்த பிரச்னை இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கூகுள் மட்டுமல்லாது மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற மற்ற பெருநிறுவனங்களையும் சேர்த்து, மொத்தமாக 1.25 பில்லியன் டாலர் வரி வசூலிக்கப்படவுள்ளது. தொழில்நுட்ப பெருநிறுவனங்களை வரி செலுத்த வைத்ததில் ஆஸ்திரேலிய வரி அலுவலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

google
google

2015-ல், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பொருளாளரான ஜான் ஹாக்கி மற்றும் வரி ஆணையரான கிறிஸ் ஜோர்டனால் தொடங்கப்பட்ட இந்தப் பணியில், பல புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வரி புகலிடம் முறையை ஒழிப்பதுதான் அதில் முதன்மையாக இருந்தது. இந்த முறையைப் பொறுத்தவரை பன்னாட்டு பெருநிறுவனங்கள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் வர்த்தகங்களுக்கு அங்கேயே வரிக் கணக்குகளை ஏற்படுத்தாமல், சிங்கப்பூர் போன்ற வரி விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் வரிக் கணக்குகளை உருவாக்குவார்கள்.

கடந்த பத்து வருடங்களில், ஆஸ்திரேலியாவில் மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலருக்கு வருவாய் ஈட்டியுள்ளது கூகுள். ஆனால், வரி கணக்குகள் அனைத்தும் சிங்கப்பூர் மூலமாக உருவாக்கப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எந்த விதமான வரி வருமானமும் இல்லாமல்போனது.

ஆகவே, இந்த முறையை ஒழித்து, இனி உள்ளூரிலேயே வரிக் கணக்குகளை உருவாக்க வேண்டும் எனப் புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பன்னாட்டு பெருநிறுவனங்களையும் கண்காணிப்பதற்காகப் புதிய சிறப்புக் குழுவையும் இவர்கள் நியமித்துள்ளனர். அதன்படித்தான் இவ்வளவு பெரிய தொகையை பெருநிறுவனங்கள் வரியாகச் செலுத்த உள்ளன.

துணை ஆணையரான மார்க் கொன்சா, 'இது ஆஸ்திரேலிய வரி அமைப்பிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி' எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலமாக ஆஸ்திரேலியாவின் வரி வருமானத்தைப் பெருக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தவர், ``2023 வரை சிறப்புக் குழு இயங்கும் என்றும் அதன் மூலமாக இன்னும் பல பன்னாட்டு பெருநிறுவனங்களிடமி ருந்து வரி வசூலிக்க முடியும்" என்றும் கூறியிருக்கிறார்.

google
google

சர்வதேசப் பெருநிறுவன வரி மற்றும் ஆய்வு மையத்தின் தலைமை ஆய்வாளரான ஜேசன் வார்டு, 'இது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி' எனத் தெரிவித்துள்ளார். "எப்படிப் பார்த்தாலும் இவர்கள் வசூலித்த வரி, கடந்த பத்து வருடங்களில் கூகுள் செலுத்தவேண்டிய தொகையைவிட குறைவாக இருக்குமென்றுதான் கருதுகிறேன். இன்னும் பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, உலகம் முழுவதும் முறையாக பெருநிறுவனங்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.