NSO நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் சர்ச்சை உலகம் அறிந்ததே. இஸ்ரேலைச் சேர்ந்த NSO என்ற நிறுவனம் பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி, உலக அரசுகளுக்கு விற்பனை செய்தது. இந்த ஸ்பைவேரின் உதவியுடன் ஒரு தனிப்பட்ட நபரின் ஸ்மார்ட்போனில் இருக்கும் தகவல்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் இருப்பிடத் தகவல்கள் ஆகியவற்றை ஹேக் செய்து சேகரிக்க முடியும். இந்த ஸ்பைவேரைப் பயன்படுத்தி உலகின் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் உளவு பார்க்கப்பட்டார்கள். இந்த விவகாரம் வெளியுலகுக்கு வந்து பெரும் சர்ச்சையானது.
NSO நிறுவனம் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களையும் ஹேக் செய்திருந்து. அதில் ஆப்பிள் நிறுவன ஐபோன்களும் அடக்கம். தங்கள் நிறுவன ஐபோன்களை ஹேக் செய்திருக்கிறார்கள் எனக்கூறி NSO நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடர்ந்திருந்தது ஆப்பிள் நிறுவனம். தங்கள் வழக்குக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்களையும் திரட்டியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அந்த ஆதாரங்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரின் மொபைலில் இருந்துதான் கண்டறியப்பட்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சவுதி அரேபியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அல்-ஹத்லோல், அரேபிய பெண்கள் வாகனங்கள் ஓட்டக் கூடாது என்ற தடைக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் அவருடைய மின்னஞ்சலை ஹேக்கர்கள் சிலர் ஹேக் செய்ய முயற்சி செய்ததாக எச்சரித்திருக்கிறது. கூகுள் எச்சரித்ததையடுத்து கனடாவைச் சேர்ந்த தனியுரிமைப் பாதுகாப்புக் குழுவான சிட்டிசன் லேபைத் (Citizen Lab) தொடர்புகொண்டிருக்கிறார். அவர்களிடம் வேற்று நபர்கள் தன்னுடைய மொபைலில் ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார்.
ஆறு மாதத் தீவிர ஆய்வுக்குப் பிறகு, அல்-ஹத்லோலின் ஐபோனில் ஹேக்கர்கள் பயன்படுத்திய உளவு மென்பொருளில் ஏற்பட்ட சிறிய கோளாறின் காரணமாக, அந்த போனில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஒரு படத்தை ஐபோனிலேயே விட்டுச் சென்றிருக்கிறது அந்த மென்பொருள். ஐபோனை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதை சிட்டிசன் லேபின் ஆய்வாளர்களுள் ஒருவரான பில் மார்ஸேக் கண்டறிகிறார். பொதுவாக உளவு பார்ப்பதற்காக ஸ்மார்ட்போன் அல்லது கணினிக்கு அனுப்பப்படும் வைரஸ்கள் தங்களுடைய வேலை முடிந்தவுடன் எந்தவித தடயத்தையும் விடாமல்தானே அழித்துக் கொள்ளும்படி புரோக்கிராம் செய்யப்படும். அல்-ஹாத்தூலின் ஐபோனில் ஹேக்கர்கள் பயன்படுத்திய உளவு மென்பொருளில் ஏற்பட்ட சிறிய கோளாறின் காரணமாக, அந்த போனில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஒரு படத்தை ஐபோனிலேயே விட்டுச் சென்றிருக்கிறது அந்த மென்பொருள். இதை வைத்துத்தான் அல்-ஹத்லோல் ஐபோன் ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்திருக்கிறார் பில்.

அந்த உளவு மென்பொருள் விட்டுச் சென்ற தடயமானது, அல்- ஹத்லோலின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டதை மட்டும் உறுதிப்படுத்தாமல், அதை உருவாக்கியாது யார் எனவும் கைகாட்டியிருக்கிறது. அது வேறு யாரும் அல்ல NSO நிறுவனம் தான். ``இந்தத் தடயம்தான் இந்த உளவு விளையாட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. யாராலும் கண்டறிய முடியாது என அந்நிறுவனம் நினைத்ததை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என இது குறித்து கூறியிருக்கிறார் பில் மார்ஸாக்.
இவர்கள் கண்டறிந்த தடயங்களின் அடிப்படையில்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் NSO நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது ஆப்பிள் நிறுவனம். இதை வைத்துதான் தங்களது அதிகாரிகளையும் NSO நிறுவனத்தின் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என அமெரிக்காவும் அறிந்துகொண்டிருக்கிறது.