Published:Updated:

`ஆஃபர்தான்.. ஆனாலும்..!?' அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் தில்லுக்கு துட்டு

ஃப்ளிப்கார்ட், அமேசான்
ஃப்ளிப்கார்ட், அமேசான்

சிறப்பு விற்பனை காலத்தில் ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் விற்ற பொருள்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஓரிரு வாரங்களாகவே, மக்கள் `ஷாப்பிங்' மோடில்தான் இருக்கிறார்கள். ஆனால், தீபாவளி வருவது மட்டும்தான் இதற்குக் காரணமா என்று கேட்டால், `இல்லை' என்பதே பதில்.

"இதை வாங்கலாமா, அதை வாங்கலாமா, அதன் விலை என்ன?, இதில் எவ்வளவு ஆஃபர்?, அடுத்த டீல் எப்போது?” என்று மக்களைப் பரபரப்பாக வைத்திருப்பது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் `Big Billion Day', `The Great Indian Festival' மற்றும் `Big Diwali Sale' ஆகிய தள்ளுபடி விற்பனைகள்தாம். நம்மூரில் வியாபாரிகளால் விற்பனையை அதிகரிக்கத் தொடங்கப்பட்ட ஆடி தள்ளுபடி கான்செப்டின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த அதிரடி தள்ளுபடிகள். நமக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ மிக அதிகப்படியான ஆஃபர்களை நம் கண்ணில் காட்டி அந்தத் தள்ளுபடிக்காகவே வாங்கப்படும் பொருள்கள் அதிகம்.

அமேசான் 'The Great Indian Festival'
அமேசான் 'The Great Indian Festival'

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஏதோ ஒன்றிரண்டு பொருள்களை அதுவும், நேரில் தேடி அலைந்து வாங்குவது கடினம் என்றிருக்கும் பொருள்களை மட்டும்தான் ஆன்லைனில் வாங்கிவந்தனர். ஆனால் இன்று, மளிகை பொருள்கள், காய்கறிகள், மருந்துகள், காலணிகள், துணிவகைகள், ஃபர்னிச்சர்கள் என ஏறத்தாழ ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்துமே இன்று ஆன்லைனில்தான் அதிகம் வாங்கப்படுகின்றன. மிக முக்கியமாக மொபைல் போன்கள். ஷாவ்மி, ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல்களை எக்ஸ்கிளூசிவ்வாக இணையத்தில் அறிமுகம் செய்யத் தொடங்கியவுடன் ஆன்லைன் மொபைல் விற்பனை என்பது உச்சத்திற்குச் சென்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், முதலில் ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள்தான் இணையத்தில் பொருள்களை விற்பனை செய்வதில் அதிகப்படியான வளர்ச்சியைக் காட்டிவந்தது. அமேசான் என்ற அசுரன்தான் அதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றான்.

2013!
அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டு.
`அமேசான், ஃப்ளிப்கார்ட்டுக்குக் கடிவாளம்!' - மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை

தொடக்கத்தில் புத்தகங்கள், பொம்மைகள் போன்ற சிறிய பொருள்களை விற்பனைசெய்த அந்நிறுவனம் அதன் மாபெரும் வியாபார யுக்தியால் இன்று, இந்தியாவின் நம்பர் ஒன் ஆன்லைன் விற்பனை நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.

அப்படியென்ன வளர்ச்சி?

தற்போது வரை சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்தியாவில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில் மேலும், 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 1 பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 7,000 கோடி. அப்படியென்றால் அந்நிறுவனத்தின் மொத்த விற்பனை, வருமானம் என்னவாக இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். அதுவும் சமீபத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் தள்ளுபடி விற்பனையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுமே மிகப்பெரிய அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளன. எகனாமிக் டைம்ஸின் தகவல்படி, தள்ளுபடி விற்பனை நடந்த ஆறு நாள்களில் மட்டும் கடந்த ஆண்டில் தள்ளுபடி விற்பனைக் காலத்தில் நடந்ததைவிட 33 சதவிகிதம் கூடுதல் ஆகும்.

ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்

இந்த வளர்ச்சி குறித்து அமேசான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அமிட் அகர்வால் கூறுகையில், "இந்தாண்டு, தள்ளுபடி விற்பனையில் கடந்த ஆண்டுகளைவிடவும் அதிக பொருள்களை எங்கள் நிறுவனம் விற்றுள்ளது. இந்த வருடத்தின் முதல் பாதியில் நாட்டில் நிலவிய பொருளாதர மந்தநிலையால் பொருள்களின் விற்பனையும் குறைந்து இருந்தது. ஆனால், இந்தத் தள்ளுபடி விற்பனை, அதை ஈடுசெய்துள்ளது” என்கிறார்.

"ஃப்ளிப்கார்டை பொறுத்தவரை Tier-III எனப்படும் 20,000 முதல் 50,000 மக்கள் வசிக்கும் சிறு நகரங்களில் தனது விற்பனையை இந்தத் தள்ளுபடி காலத்தில் இரட்டிப்பாக்கியுள்ளது. இதில், பெரும்பாலும் விற்பனையானவை ஃபேஷன் மற்றும் அழகு சாதனப்பொருள்கள். இவற்றை வாங்கிய பலரும் முதல் முறையாக தங்கள் தளத்தில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள்" என்கிறார் ஃப்ளிப்கர்டின் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி.

விற்பனையான பொருள்களின் எண்ணிக்கை குறைந்தாலும் ஃபர்னிச்சர், தொலைக்காட்சி முதலிய பொருள்களில் புதுப்புது EMI ஸ்கீம்கள் அறிவித்து தனது வருமானத்தில் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டது ஃப்ளிப்கார்ட்.

ஐபோன், ஒன்ப்ளஸ், ரியல்மீ... அமேசான் அதிரடி விற்பனையில் மிஸ் பண்ணக்கூடாத 10 கேட்ஜெட் ஆஃபர்ஸ்!

அமேசான் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இந்தத் தள்ளுபடி காலத்தில் மட்டும் அதன் மொபைல் போன் விற்பனை சுமார் பதினைந்து மடங்கு வரை உயர்ந்துள்ளது. இந்த விற்பனையில், நாட்டில் உள்ள ஏறத்தாழ 99.4% பின் கோடுகளுக்கும் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளதாம். இதில் எண்பத்தெட்டு சதவிகிதம் சிறிய நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமேசான் ப்ரைமில் நாட்டில் உள்ள 15,000 பின் கோடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் புதிதாக சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். மொத்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது மொபைல் விற்பனையில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு விற்பனை குறைந்தாலும் (சென்ற ஆண்டு – 55%, இந்த ஆண்டு- 40%) மொத்தமாக மதிப்பை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்தத் தள்ளுபடி காலங்களில் அதிகம் விற்பனையாவது மொபைல் போன்கள்தான் (55% of the general merchandise value).

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 விற்பனை செய்துள்ள பொருள்களின் (Gross Merchandise Value) மதிப்பு என்பது 19,000 கோடி ரூபாய்.
Amazon
Amazon

தீபாவளி வருவதாலும், இப்போதும் ஒரு சிறப்பு விற்பனை சென்றுகொண்டிருப்பதாலும் இந்த மாதம் மட்டும் இந்த வெப்சைட்களில் விற்பனையாகும் பொருள்களின் மதிப்பு, 6 பில்லியன் டாலர் அதாவது 39,000 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ``என்னையா இது இவ்ளோ குறைஞ்ச விலையில பொருள குடுக்குறான். எப்படிதான் லாபம் பாப்பானோ” என்று நாம் எண்ணும் வேளையில் இந்த இருநிறுவனங்களும் ஈட்டியிருக்கும் வருமானம் இதுதான்.

ரொம்ப காலமாகவே உணவு டெலிவரி செய்யும் தொழிலிலும் கால்தடம் பதிக்க அமேசான் நிறுவனம் முயன்று வருகிறது. தற்போது அதற்கான வேலைகளில் deliveroo என்னும் லண்டன் சார்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து களமிறங்கத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் இங்குள்ள உணவகங்களுக்கு நியாயமான கமிஷன் வழங்குவதாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. தற்போது இதில் உச்சத்தில் இருக்கும் Swiggy மற்றும் Zomato-வின் மார்கெட் அமேசானின் வருகையால் நிச்சயம் பாதிப்படையும். நம் நாட்டில் இந்த உணவு டெலிவரி செய்யும் தொழிலின் மார்கெட் மதிப்பு மட்டும் இந்தாண்டு இறுதிக்குள் சுமார் 5 பில்லியன் டாலரை எட்டப்போகிறது.

`அமேசான், ஃப்ளிப்கார்ட்டுக்குக் கடிவாளம்!' - மத்திய அரசுக்கு வியாபாரிகள் சங்கத்தின் புதிய கோரிக்கை

இந்தியாவில் இ-காமர்ஸின் தொடக்க காலத்தில், அந்நிறுவனங்களால் தங்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படுவதாக நேரடி விற்பனையாளர்கள் எதிர்த்தார்கள். அதே போல வால்மார்ட் நிறுவனம் நம்நாட்டில் தனது கிளையைத் திறந்தபோதும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் அதற்குச் சிவப்பு கொடி காட்டினர். ஆனால், அந்நிறுவனங்களின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்கமுடியவில்லை. தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வைத்திருப்பதே வால்மார்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2022 ஆண்டிற்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் சுமார் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களைத் தாண்டிவிடும் என்றும் அதில் 90% ஆன்லைனில் நடக்கும் சில்லறை வர்த்தகத்திலிருந்து வரும் என Global Consultancy PWC கணிக்கிறது. ஆம், இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கின் அடுத்த யுகத்திற்கு நுழைந்துவிட்டோம் நாம்.

அடுத்த கட்டுரைக்கு