``முதல் மாதம் நல்லாத்தான் இருந்தது, ஆனா இப்போ..!" வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து ஐடி ஊழியர்கள்

பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்வதால் நிறுவனங்களின் வேலைத்திறன் (Productivity) அதிகரித்துள்ளதாக ஐடி துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து வீட்டிலிருந்தே பணி செய்யும் சூழல் எப்படி இருக்கிறது என அறிய சில ஐடி ஊழியர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கானது பின்பற்றப்பட்டுவருகிறது. அதன்படி அரசாங்கம் எல்லா ஐடி மற்றும் இதர நிறுவனங்களையும் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் பணி செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு கூறியுள்ளன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்று கூறியுள்ளது. அதாவது எப்போதும் 10 சதவிகிதப் பணியாளர்களுடனேயே இயங்க முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கையை 30 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளன இந்த நிறுவனங்கள். அப்போதும் சுழற்சி முறையிலேயே பணியாளர்களை அழைக்க உள்ளன.

உலகமெங்கும் இதே நிலைதான். ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் 2020-ம் ஆண்டு முழுவதும் வீட்டிலிருந்தபடியே பணியாளர்களை பணிசெய்யக் கூறியிருக்கிறார். இந்நிறுவனம் 25 சதவிகிதப் பணியாளர்களுடனேயே அலுவலகத்தை இயக்க இருக்கிறது. உண்மையில் கொரோனா பணி செய்யும் சூழலே மொத்தமாக மாற்றியுள்ளது. ஐடி நிறுவனங்களின் பணிகள் பெரும்பாலும் இணையம் மூலமே மேற்கொள்ளப்படுவதால் `வொர்க் ப்ரம் ஹோம்' முறைக்கு எளிதில் மாறியவர்கள் அவர்கள். பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்வதால் நிறுவனங்களின் வேலைத்திறனும் (Productivity) அதிகரித்துள்ளதாகவும் அந்தத் துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து வீட்டிலிருந்தே பணி செய்யும் சூழல் எப்படி இருக்கிறது என அறிய சில ஐடி ஊழியர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.
இது பற்றி ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அசோக் மனோ கூறுகையில், ``எங்கள் நிறுவனம் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு நிறைய உதவிகள் செய்கிறது. ஆனால் எங்களுக்குத்தான் இந்த வேலைமுறை சலிப்பை ஏற்படுத்திவிட்டது. முதல் ஒரு மாதம் வீட்டிலிருந்தே வேலை செய்வது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான் இருக்கிறோம். இதனால் வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க இயலவில்லை. வீட்டில் இருக்கும் போது பத்து நிமிடம் வேலை கூடச் செய்து முடிக்க அரை மணி நேரமாகிறது. அலுவலகத்தில் வேறு எந்த வித தொந்தரவும் இல்லாமல் பணி செய்வோம். ஆனால் இங்கு அப்படி இல்லை. வீட்டில் இருக்கும் போது நிறைய இடைவேளை எடுக்கும் சூழல் உருவாகிவிடுகிறது. இதனால் வேலை செய்யும் போது ஏற்படுகிற ஆர்வமும் குறைந்துள்ளது. அலுவலகத்திலிருந்து மடிக்கணினி, இணைய வசதி எல்லாமே வழங்கப்படுகிறது. அதற்கான செலவையும் அலுவலகமே தந்து விடுகிறது. முன்னர் எப்போது வீட்டிற்குச் செல்வோம் என்ற மன நிலை இருந்தது. இப்போது அப்படியே மாறாக எப்போது அலுவலகம் செல்வோம் என்ற மன நிலையே நீடிக்கிறது" என்றார் .

இதுகுறித்து நந்தனத்தில் உள்ள ஸ்ட்ரிங்க் இன்ஃபோடெக் நிறுவனத்தின் ஊழியர் அப்துள் ஜாஹு பேசுகையில், ``வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது அலுவலகத்தில் என்ன செய்வோமோ அதையேதான் இங்கேயும் செய்கிறோம். இதில் நிறைய சாதகங்கள் உள்ளன. வீட்டிலிருந்தே பணி செய்யும் போது, பயணம் செய்யத் தேவையில்லை. உடை அணிவதிலும் கவனம் செலுத்த அவசியமில்லை. வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது எழுந்தவுடனேயே கூட நம்மால் பணி செய்ய இயலும். பின்னர் இடைவேளையின் போது அவர்களால் இதர வேலைகளைச் செய்துகொள்ள முடியும். பணமே சம்பாதிக்க முடியாத சூழலில் நிறைய பேர் சிக்கித்தவிக்கின்றனர். ஆனால் எங்களால் வீட்டிலிருந்த படியே அலுவலகத்தில் இருப்பது போன்று வேலை செய்ய முடிகிறது. இதனால் சம்பளமும் எங்களுக்கு எப்போதும் போலவே கிடைக்கிறது. இந்த சமயத்தில் மகப்பேறு விடுப்பிலிருந்தவர்கள் கூட வேலையில் இணைந்து விட்டனர். வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதனால்தான் அவர்களால் இணைய முடிந்தது." என்றார்.
இதுபற்றி கஸ்டமர் அனாலிடிக்ஸ் நிறுவனத்தின் அசாரூதின் கூறுகையில், ``வீட்டிலிருந்தே பணி செய்யும்போது சக பணியாளர்களைத் தொடர்பு கொள்வது என்பது சிரமமாகத்தான் உள்ளது. அலுவலகத்தில் இருக்கும் போது இந்தப் பிரச்னை இருந்ததில்லை. இப்போது எதுவென்றாலும் ஒவ்வொரு முறையும் தொலைபேசி மூலம்தான் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் அடிக்கடி மற்றவர்களைத் தொந்தரவு செய்வது போல் இருக்கிறது. நான் பணியில் சேர்ந்த இரண்டு நாளிலேயே ஊரடங்கு தொடங்கிவிட்டது. இதனால் என்னுடைய குழுவுடன் என்னால் போதிய நட்பான சூழலையும் உருவாக்க முடியவில்லை. நேரிலிருந்திருந்தால் இது எளிதாக இந்நேரம் நடந்திருக்கும். இதுவரை நான் எனது தலைமை இயக்குநரைக் கூட நேரில் பார்த்ததில்லை. அலுவலகத்தில் இருக்கும் போது அடுத்த குழுவினரோடு கலந்துரையாடலாம். இதன்மூலம் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும். அந்தச் சூழல் இப்போது முற்றிலுமே இல்லை. வீட்டிலிருந்தே பணி செய்யும் போது வேலைத்திறன் அதிகரித்துள்ளதுதான். இதற்குக் காரணம் வேலையை எந்த நேரத்திலும் செய்ய முடிவதுதான். வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது பணி குறித்து புதிய விஷயங்களை கற்பதும் கடினமாகத்தான் இருக்கிறது. இதனால் புதிதாகச் சேர்ந்த ஊழியர் என்ற வகையில் வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது எனக்குச் சற்றே கசப்பான அனுபவம்தான்"என்றார்.

இதுபற்றி டி.சி.எஸ் நிறுவனத்தின் ஊழியர் கிருத்திகா பேசுகையில், ``அலுவலகத்தில் வேலை செய்யும் போது அதற்கென நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். தற்போது வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுடன் சேர்ந்தே வேலை செய்யும் சூழலே உள்ளது. இது ஒரு வகையில் வசதியானதுதான் என்றாலும் இதனால் வேலை நேரமானது அதிகரிக்கிறது. இதனால் அலுவலக வேலையும் சரியாக முடிக்க இயலவில்லை, வீட்டு வேலையையும் சரிவரச் செய்ய முடிவதில்லை.
அன்றைய தினத்தின் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும் போது அதை இரவு நேரத்திலும் நாங்கள் செய்கிறோம். இதனால் மறைமுகமாக எங்கள் மீதே ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மாதிரி சின்ன குழந்தைகள் வைத்து இருக்கும் பெற்றோர்க்கெல்லாம் இது சிரமமாகத் தான் உள்ளது.கிருத்திகா
டிசிஎஸ் சார்பில் இந்த வீட்டிலிருந்தே வேலை செய்வதை 2025 வரை நீடிக்கலாம் என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை முழுவதும் அமல்படுத்தினால் கடினமாகவே இருக்கும்.
அலுவலகத்தில் இருக்கும் 50 சதவிகிதம் பேரை மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தினால் நல்லது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது அதிகமாகக் குழு நபர்களுடன் கலந்துரையாடுகிறோம். நிர்வாகத் தரப்பிலும் அடிக்கடி குழுவுடன் தொடர்பில் இருக்கச் சொல்கிறார்கள். புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது புதிய ஊழியர்களை இணையம் வழியாக இன்டர்வியூ வைத்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் இதுவே சாதாரண நடைமுறையாகக் கூட மாறிவிடலாம். வேளையில் ஒரு சிக்கல் என்றால் அலுவலகத்தில் அடுத்தவர் உடனடியாக வந்து அந்த தவற்றைக் கண்டுபிடித்துச் சரி செய்ய இயலும். ஆனால் இப்போது ஸ்க்ரீன் ஷேரிங் இருந்தும் ஒருவர் நமக்கு உதவுவது என்பது கடினமாகவே இருக்கிறது. இவற்றைத் தவிர வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது வசதியாகத்தான் உள்ளது " என்றார்.

இதுபற்றி காக்னிசன்ட் ஊழியர் கார்த்திக் கூறுகையில், ``நான் இதற்கு முன்னரே வீட்டிலிருந்தே வேலை செய்துள்ளதால் இது எனக்கு அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நான் குழுவின் தலைவராக இருப்பதால் அடுத்தவர்களைக் கண்காணிப்பது சிரமமாகத்தான் உள்ளது. நேரில் மேற்பார்வை செய்வது போல இதில் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் வேலை செய்யாமல் அப்படியே இருப்பவர்களுக்கு வசதியாகி விடுகிறது. ஒருவர் மட்டுமே வேலை செய்து, பிறர் வேலை செய்யவில்லை என்றால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் திடீரென இணைய வசதி இல்லை, மின்சாரம் இல்லை என்ற எதாவது காரணம் ஒன்றைச் சொல்லி வேலையிலிருந்து இடைவேளை எடுத்துக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் இரவு நேரத்தில் கூட சிலர் வேலை செய்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சிறு சிறு சந்தேகங்களைக் கூட அவர்களே கற்றுத் தெரிந்து கொள்கிறார்கள். காக்னிசன்டில் இப்போதுதான் பணியாளர்களைக் கணிசமான அலுவலகத்திற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.
நீங்கள் `வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் பணியாற்றிவருகிறீர்களா... உங்கள் அனுபவத்தை கமென்ட்களில் பதிவிடுங்கள்!