Published:Updated:

4 இளைஞர்கள்... 80 ஹோட்டல்கள்... 25 ஊழியர்கள்!

இளைஞர்கள்

கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

4 இளைஞர்கள்... 80 ஹோட்டல்கள்... 25 ஊழியர்கள்!

கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

Published:Updated:
இளைஞர்கள்

‘படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை’ என்று இளைஞர்கள் பலர் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நவீன தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தி சாதனை படைத்துவருகிறார்கள் கரூரைச் சேர்ந்த வெங்கட் ரத்னம், பிரதீஷ்குமார், சபரிநாதன், கார்த்திக் ஆகியோர்.

Food Delivery
Food Delivery

சென்னை, மும்பை எனப் பெருநகரங்களில் ஸ்டார்ட்அப்களை உருவாக்கிச் சாதிப்பது பெரிய விஷயமல்ல... கரூர் போன்ற வளரும் நகரங்களிலும் ஸ்டார்ட்அப்பில் கால்பதித்து இந்த இளைஞர்கள் கலக்கிவருகிறார்கள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், `டெலிவரி ஸ்டார்’ என்ற ஆப்பின்மூலம் கரூரில் உணவு டெலிவரி செய்யும் தொழிலில் அசத்திவருகிறார்கள். 25 ஊழியர்கள், 80 ஹோட்டல்கள், 15,000 வாடிக்கையாளர்கள் என இவர்களின் வெற்றிப்பாதை வெகு அசத்தலானது. அவர்களுக்கு ‘வாழ்த்து’ச் சொல்லிவிட்டு, முதலில் வெங்கட் ரத்னத்திடம் பேசினோம்.

“நாங்க நாலு பேரும் சின்ன வயசுலருந்தே நண்பர்கள். அப்போ இருந்தே நாலு பேருக்கும் ஒரு சொந்தத் தொழிலைக் கூட்டாகச் செஞ்சு சாதிக்கணுங்கிற லட்சியம் இருந்தது. நான் பி.சி.ஏ முடிச்சிட்டு, 15 வருஷமா டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி, லாரி புக்கிங் அலுவலகம்னு வேலை செஞ்சேன். இப்போ பஸ் பாடி கட்டும் கம்பெனியில இருக்கேன். அதேபோல, பிரதீஷ்குமார் பி.பி.ஏ படிச்சுட்டு ஏற்றுமதி நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டிருந்தான். கார்த்திக் பி.இ படிச்சுட்டு, யூ.கே-லயும், சபரிநாதன் பி.இ முடிச்சுட்டு சேலத்திலும் வேலை பார்த்துக்கிட்டுருந்தாங்க. நாங்க எல்லாருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவை டெலிவரி பண்றது மட்டுமில்லாம, இப்போ ஆப் மூலமா காய்கறிகளையும் டெலிவரி பண்றோம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016-ம் வருஷத்துல இருந்தே சொந்தமா ஏதாச்சும் தொழில் பண்ணணும்னு நினைச்சோம். ஆனா, என்ன தொழில் பண்றதுனு புரியலை. அப்போதான் வெள்ளூரைச் சேர்ந்த ஒருத்தர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆப் மூலம் உணவு டெலிவரி தொழிலைத் தொடங்கினார். அதைக் கேள்விப்பட்டு கரூர் பிரான்சைஸியை நாங்க எடுத்தோம். 10 லட்ச ரூபாய் டெபாசிட் கட்டினோம். பெரிய டெலிவரி கம்பெனிகள் மெட்ரோ சிட்டிகளில் மட்டும் தொழிலை நடத்திக்கிட்டு இருந்துச்சு. அதனால ஆரம்பத்துல இந்தத் தொழிலைப் பத்தி ஹோட்டல் தரப்பிலும், வாடிக்கையாளர் தரப்பிலும் புரியவைக்க ரொம்பக் கஷ்டப்பட்டோம். கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கையை ஏற்படுத்தினோம். அதன் பிறகு, மூன்று ஊழியர்கள், 15 ஹோட்டல்கள், 50-க்கும் குறைவான வாடிக்கையாளர்கள்னுதான் தொழிலை ஆரம்பிச்சோம்.

இளைஞர்கள்
இளைஞர்கள்

ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 20 ஆர்டர்கள் வரைக்கும்தான் கிடைச்சுது. மனம் தளராம தொழிலைச் செஞ்சோம். ஒருகட்டத்துல அந்த ஸ்டார்ட்அப் கம்பெனியால தொழிலைத் தொடர முடியலை. அந்த டெலிவரி ஆப்பை நாங்க வாங்கினோம். ரூ.15 லட்சம் முதலீட்டில் டெக்னாலஜி வகையில மெருகேற்றினோம். `ஆஃபர்’, `காம்போ ஆர்டர்’னு வாடிக்கையாளர்களைக் கவரும் விஷயங்களைச் செஞ்சோம். தொழில் மெள்ள மெள்ள வளர்ந்தது. இப்போ தினமும் 500 ஆர்டர்கள் வரைக்கும் கிடைக்குது” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதீஷ்குமார், “முதலாளிங்கறதுக்காக நாங்க கம்பெனிக்குள்ளேயே இருக்கறதில்லை. களத்தில் இறங்கி வாடிக்கையாளரின் தேவை, குறைகளைக் கேட்டு நிவர்த்தி செஞ்சோம். ஆரம்பத்துல நாங்க நாலு பேரும் அவரவர் பார்த்துவந்த வேலைகளை விட்டுடலை. தொழில் கொஞ்சம் வளர்ந்ததும் நான் மட்டும் வேலையை விட்டேன். வெங்கட் ரத்னம் கரூரிலேயே இருக்கறதால, தொழிலைக் கூடுதல் நேரம் ஒதுக்கி கவனிச்சுக்குவார். சபரிநாதனும் கார்த்திக்கும் ஆன்லைன் மூலம் கணக்குவழக்குகளை பார்த்துக்குவாங்க.

ஆரம்பத்துல காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் வேலை பார்த்தோம். பிறகு காலை 7:30 மணியிலிருந்து, இரவு 10:30 வரை வேலை நேரத்தை மாத்தி அமைச்சோம். இதனால தொழில் விரிவடைஞ்சு, இப்போ 80 ஹோட்டல்கள், 15,000 வாடிக்கையாளர்கள், 25 ஊழியர்கள்னு வளர்ந்து வந்திருக்கோம்.

கரூர் நகரத்தில் 16 கிலோமீட்டர் வரைக்கும் சர்வீஸ் பண்றோம். ஆப் மூலமா மட்டுமில்ல, போன்ல யாராவது, ‘நாங்க வெளியூர் போயிட்டோம். வீட்டுல பெரியவங்க இருக்காங்க. இந்த ஹோட்டல்ல இருந்து, இந்த உணவை வாங்கிவந்து தர முடியுமா’ன்னு கேட்பாங்க. அதையும் தட்டாமல் செய்யறோம். பொங்கல், தீபாவளினு பண்டிகை நாள்கள்லயும் எங்களோட வேலையை செய்யறோம். அதேபோல வாடிக்கையாளர்கிட்டேயிருந்து ஆர்டர் வரும்போது, அந்த இடத்துல ஊழியர் யாரும் இல்லைன்னாலும், நாங்களே களத்துல இறங்கி டெலிவரி பண்ணுவோம். வாடிக்கையாளர் கைகளுக்கு உணவு போய்ச் சேரும் வரைக்கும் நாங்கதான் பொறுப்புங்கறதால பேக்கிங்கை பக்காவா செஞ்சு கொடுக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹோட்டல்கள் தரப்புல சொல்லப்படுற குறைகளையும் அப்பப்போ நிவர்த்தி பண்ணிடுவோம். அதேபோல டெலிவரி ஆப்லயும் நோட்டிஃபிகேஷன், மெனு, ஆஃபர்னு அப்டேட் செஞ்சிடுவோம்.

பிரதீஷ்குமார், வெங்கட், 
சபரிநாதன், கார்த்திக்
பிரதீஷ்குமார், வெங்கட், சபரிநாதன், கார்த்திக்

எங்ககிட்ட பார்ட் டைமா வேலை பார்க்கும் ஊழியர்கள்கூட மாதம் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க. எங்க ஊழியர்களுக்கு தேவையான பேக், டிசர்ட்ஸ், இன்ஷூரன்ஸ் விஷயங்களை செஞ்சு தர்றோம். கல்லூரி மாணவர்கள் சில பேரு பார்ட் டைமா வேலை பார்க்கிறாங்க. கல்லூரிக்குப் பணம் கட்ட முடியாம தவிக்கிறப்போ அவங்களுக்கு உதவுறோம். ஒவ்வொரு வாரமும் ஊழியர்களைவெச்சு மீட்டிங் போடுறோம். பர்சனாலிட்டி டெவலெப்மென்ட், போக்குவரத்து விதிகளை மதிக்கிறது, வாடிக்கையாளர்கிட்ட பேசறது, வண்டியில போறப்போ ஹெல்மெட் அணியறதுன்னு நிறைய விஷயங்களைச் சொல்லித் தர்றோம். இப்படிச் சின்ன சின்ன காரியத்துலயும் கவனமா இருக்கறதாலதான் எங்களால வெற்றிகரமாக இந்தத் தொழிலைச் செய்ய முடியுது.

உணவை டெலிவரி பண்றது மட்டுமில்லாம, இப்போ காய்கறி, ஆடு, கோழிக்கறிகளையும் ஆப் மூலமா வரும் ஆர்டர்களுக்கு டெலிவரி பண்ண ஆரம்பிச்சி ருக்கோம். இயற்கை முறையில் விளையற காய்கறி, கீரை, பழங்களையும் எங்க டெலிவரி ஆப் மூலமா, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி பண்ணும் முயற்சியையும் அடுத்து செய்ய இருக்கோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி தொழில் செய்யலாம்னு சின்னதா யோசிச்சோம். இன்னிக்கி ஓரளவுக்கு சாதிக்கத் தொடங்கியிருக்கோம்” என்றார்.

மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டால் நாம் இருந்த இடத்திலிருந்தே சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞர்கள் மிகச் சிறப்பான உதாரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism