Published:Updated:

கொரோனாவால் அதிகரித்த `வொர்க் ஃப்ரம் ஹோம்!’- திணறும் ரிச்சி ஸ்ட்ரீட்

Work from home
Work from home ( Quartz )

லேப்டாப்களை வாடகைக்குத்தரும் நிறுவனங்களுக்கு நல்லதொரு வியாபார வாய்ப்பாக இருப்பதால் உடனடியாக லேப்டாப் வாடகைக்கட்டணங்களை உயர்த்திவிட்டார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் வாய்ப்பை வழங்கி வருகின்றன. குறிப்பாக, முழுக்க முழுக்க கணினியின் மூலமாகவே பணியாற்றும் ஐ.டி நிறுவனப் பணியாளர்கள், தங்கள் வசமுள்ள லேப்டாப் மூலமாக வீட்டிலிருந்தே வேலைபார்ப்பது எளிது. எனவே ஐ.டி துறையில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது அதிக அளவில் இருக்கிறது.

இதில் சில பணியாளர்களுக்கு வீட்டில் கணினி வசதி இருக்காது. இன்னும் சிலருக்குத் தரமான லேப்டாப் இருக்காது. எனவே அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே லேப்டாப் வாங்கிக்கொடுத்து வீட்டிலிருந்து பணியாற்றும்படி கூறுகிறார்கள். இதன்காரணமாக தற்போது திடீரென லேப்டாப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

பெரிய நிறுவனங்கள் லேப்டாப் தேவையை இருவிதமாகச் சமாளிக்கிறார்கள். லேப்டாப் நிறுவனங்களிடமே மொத்தமாக ஆர்டர் கொடுத்து புதிய லேப்டாப்களை வாங்குகிறார்கள். திடீரென லேப்டாப்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தயாரிப்பு நிறுவனங்களால்கூட தேவைக்கேற்ப வழங்க இயலாத நிலை. எனவே, லேப்டாப்களை வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்களின் மூலமாக மொத்த ஆர்டராக வாடகைக்கு வாங்குகிறார்கள்.

Work from Home-க்குத் தயாராகும் தமிழகம். அடுத்து என்ன? | The Imperfect Show 17/3/2020

இதுகுறித்து ஐ.டி துறையைச் சேர்ந்த ஷான் கருப்பசாமியிடம் கேட்டபோது, ``எங்கள் நிறுவனத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையைச் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டோம். பலரும் அலுவலகத்தில் இருக்கும் டெஸ்க்டாப் கணினியிலேயே பணியாற்றிப் பழகியிருப்பார்கள். அவர்களிடம் வீட்டில் சிஸ்டம் இருந்தாலும்கூட அது அவர்களுக்கு சவுகர்யமாக இருக்காது. எனவே அவர்களுக்கு லேப்டாப் வாங்கிக்கொடுக்கத் தீர்மானித்தோம்.

ஷான் கருப்பசாமி
ஷான் கருப்பசாமி

வழக்கமாக எங்களது தேவைக்கேற்ப, ஒரு நிறுவனத்திலிருந்து வாடகைக்கு லேப்டாப் வாங்குவதுண்டு. அவர்களிடமே மொத்தமாக வாடகைக்கு லேப்டாப் ஆர்டர் கொடுத்தோம். தேவை அதிகமிருப்பதைத் தெரிந்துகொண்டதால், இதுவரை 2,500 ரூபாயாக இருந்த லேப்டாப்களின் வாடகையை 3,500 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். ’வாடகையை ஏற்றக்கூடாதென்றால் ஆறு மாத காலம் லாக் இன் பீரியட் கொடுங்கள்’ என்று கேட்கிறார்கள். இதற்கு உறுதி கூற முடியாததால் கூடுதல் வாடகைக்கு வாங்கியாகவேண்டிய கட்டாயம். மேலும் நமக்குப் பழக்கப்பட்ட நிறுவனம் என்றால் மெயின்டெனன்ஸ் செய்வதில் பிரச்னை வராது என்பதால் இவர்களிடமே வாங்கவேண்டியுள்ளது. கிராபிக்ஸ் டிசைனிங்கில் பணியாற்றுபவர்களுக்கு லேப்டாப் சரிப்படாது என்பதால் அவர்கள் அலுவலகத்தில் பயன்படுத்தும் கணினியையே வீட்டுக்கு எடுத்துச்செல்லும்படி செய்துள்ளோம்" என்றார்.

இது, லேப்டாப்களை வாடகைக்குத்தரும் நிறுவனங்களுக்கு நல்லதொரு வியாபார வாய்ப்பாக இருப்பதால் உடனடியாக வாடகையை உயர்த்திவிட்டார்கள். மேலும், பழைய, பழுதான லேப்டாப்களையும்கூட சரிசெய்து வாடகைக்கு விடுகிறார்கள். சென்னை நகரில் கிட்டத்தட்ட 30% அளவுக்கு லேப்டாப் வாடகைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெருகும் 'வொர்க் ஃப்ரம் ஹொம்'!
பெருகும் 'வொர்க் ஃப்ரம் ஹொம்'!

மேலும், பழுதாகியிருக்கும் லேப்டாப்களை பழுது பார்க்கவும், செகண்ட் ஹேண்ட் லேப்டாப்களை வாங்கவும், கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். கொரோனா பரவுவதால் மக்கள் அதிகஅளவில் வெளியில் நடமாட வேண்டாம் என்ற அறிவிப்பு வந்தபிறகும்கூட, சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் பரவலான மக்கள் கூட்டம் காணப்பட்டது. பலரும் தங்களிடம் உள்ள பழுதாகி இருக்கின்ற லேப்டாப்களை பழுது பார்ப்பதற்காகவே கடைகளுக்கு வருகிறார்கள்.

கொரோனா வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல்... சாதக, பாதகங்கள்!
#StayinsideStaySafe

"நிறைய நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கச் சொல்றாங்க. அதனால எல்லாரும் புதுசா லேப்டாப் வாங்க வேண்டிய சூழ்நிலையிலோ அல்லது பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலையிலோதான் இருக்காங்க. அதனால ரிச்சி ஸ்ட்ரீட்ல வழக்கத்தை விட கூட்டமா இருக்கு. இந்தச் சூழ்நிலையைச் சமாளிச்சுதான் ஆகணும். வேற வழி இல்லை. லேப்டாப் மட்டும் இல்லை, வேலை பார்க்குறதுக்குத் தேவையான பிற உபகரணங்கள் பத்தியும் இப்போதான் யோசிக்கிறாங்க. வை-பை டாங்கிள், பேக்அப் பேட்டரி போன்ற மற்ற உபகரணங்களையும் இந்த நேரத்திலதான் அதிக அளவில் வாங்க வர்றாங்க" எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ரிச்சி ஸ்ட்ரீட்டில் பொருட்கள் வாங்க வந்திருந்த ஆனந்த்.

இது குறித்து ரிச்சி ஸ்ட்ரீட்டில் கடை நடத்தி வரும் சிலரிடம் பேசினோம். லேப்டாப்களை பழுது நீக்க நிறைய பேர் வருவதாகத் தெரிவித்தனர். மேலும், இந்தச் சமயத்தில் லேப்டாப் தேவை அவசியம் அதிகமாக இருப்பதால் சிலர் செகண்ட் ஹேண்ட் லேப்டாப்களை அவசரத்திற்குக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அனைத்துத் துறையினருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் லேப்டாப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு