பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக பயன்பாட்டு செயலிகளின் தாய் நிறுவனமாக சமீபத்தில் பெயரிடப்பட்ட மெட்டா நேற்று ஒரு நாளில் மட்டும் தன்னுடைய சந்தை மதிப்பில் 26 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இந்த இருபதாண்டுகளில் அமெரிக்க பங்குசந்தையில் ஒரு பொது நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவுகளில் இதுவும் ஒன்று. பேஸ்புக் சரிந்ததைத் தொடர்ந்து ட்விட்டரும் ஸ்நாப் நிறுவனத்தின் பங்குகளும் கணிசமாக வீழ்ந்தன. இந்தச் சரிவு மெட்டா, சந்தை மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழக்க காரணமாகியுள்ளது. மெட்டாவின் முதன்மை நிர்வாக அதிகாரியான மார்க் ஸுக்கர்பெர்க் தனக்கு சொந்தமான நிகர மதிப்பில் 29 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார். இந்தச் சரிவு, அமெரிக்க பங்குச்சந்தை குறீயீடான Nasdaq இறக்கத்திற்கும் காரணமாகியுள்ளது. அமெரிக்க பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பு என ரெயிட்டர்ஸ் இணையத்தளம் தெரிவிக்கிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படுவதை கட்டுப்படுத்தியதால் பேஸ்புக்கின் விளம்பர வருவாய் கணிசமாக இந்தக் காலாண்டில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கின் 97 சதவீத வருவாய் விளம்பரங்களில் இருந்து பெறப்படுகிறது.

மெட்டா தன்னுடைய புதிய மெட்டாவெர்ஸ் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்து 10 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. 18 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதன் தினசரி பயனர்களின் எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது. சீனாவைச் சார்ந்த டிக்டாக் உள்ளிட்ட வீடியோ பகிர்தல் செயலிகளின் வளர்ச்சி பேஸ்புக் நிராகரிப்பட காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா மார்க்கெட் சரிவுக்கு பிறகு அமெரிக்க சந்தை முதலில் சந்திக்கும் சரிவு இதுதான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.