Published:Updated:

வாட்ஸ் அப்பில் வணிகம் வளர்க்கும் நகரத்தார் பிஸினஸ் கனெக்சன்ஸ்!

சமூகம் சார்ந்த இளைஞர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் உதவும் வகையில் செயல்பட்டுவருகிறது, `நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ் (NBC)’ என்கிற வாட்ஸ்அப் குழு.

நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ்
நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ்

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை சிலர் பொழுதுபோக்காக பார்க்கின்றனர். சிலர் அதை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். அந்த வரிசையில் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் (professionals) உதவும் வகையில் செயல்பட்டுவருகிறது 255 நபர்களை உறுப்பினர்களாகக்கொண்ட `நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ் (NBC)’ என்கிற வாட்ஸ்அப் குழு.

நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ்
நகரத்தார் பிசினஸ் கனெக்‌ஷன்ஸ்

இதை ஆரம்பித்தவர்கள், செட்டிநாட்டைச் சேர்ந்த ஆத்தங்குடி, கோனாபட்டு ஊர்களிலிருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற சிதம்பரமும் டாக்டர் கலைமணியும்தான். இன்றைக்கு இந்தக் குழுவை ஐந்துபேர் கொண்ட குழுவொன்று கட்டுக்கோப்புடன் நிர்வகித்துவருகிறது.

இந்தக் குழு ஆரம்பித்து ஆயிரமாவது நாளைக் கொண்டாடும் நிகழ்ச்சி, அக்டோபர் 13-ம் தேதி சென்னையிலிருக்கும் இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன் (IOA) வளாகத்தில் நடந்தது. இதில், முனைவர் சோம. வள்ளியப்பன் தொழில்முனைவோருக்கான உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) குறித்துப் பேசினார்.

முனைவர் சோம. வள்ளியப்பன்
முனைவர் சோம. வள்ளியப்பன்

உணர்வுகளைக் கையாள்வது என்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும் அதை சரியாகக் கையாளத் தெரியாததனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், உயிரிழப்புகள் (பிரபல திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த ஜி.வெங்கடேஷ், கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா) குறித்தும் சரியான முறையில் கையாண்டால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றியும் விளக்கினார்.

வீட்டுப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு பிசினஸ் செய்யலாமா?

அதன்பின், குடும்பத்தினர் நிர்வகித்துவரும் வணிகத்தில் இருக்கும் சவால்கள், படிப்பினைகள் குறித்து சுமார் ஒரு மணிநேரம் தனது அனுபவங்களை சுரேஷ் ராமானுஜம் பேசினார்.

‘‘எந்தவொரு வணிகத்துக்கும் தேவை, தொலைநோக்கு, திறமை, வளங்கள், சந்தை. நம் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு முடிவெடுப்பது சில சமயங்களில் பிரச்னைகளை உருவாக்கக்கூடும்."

சுரேஷ் ராமானுஜம்
சுரேஷ் ராமானுஜம்

"சரியான தொலைநோக்கும் திறமைகளும் வளங்களும் ரிஸ்க் எடுக்கக்கூடிய மனஉறுதியும், கவனத்தைச் சிதறவிடாமல் நோக்கத்தை இலக்காகக்கொண்டு செயல்படுவதும், செய்யும் தொழிலின்மீது ஓர் அர்ப்பணிப்பும், காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய, ஒத்துப்போகக்கூடிய தன்மையும் இருக்கும்பட்சத்தில், எந்தவொரு சவாலையும் எளிதாகக் கடந்து வெற்றி பெறமுடியும்’’ என்றார்.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பயிலரங்குகளையும், அவை குறித்த கட்டுரைகளையும் வாரந்தவறாமல் எழுதிவரும் எமிரேட்ஸ் என்.பி.டி வங்கியில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்துவரும் சேதுராமன் சாத்தப்பன், `தொழில் பெருமை தரும்’ என்கிற தலைப்பில் பேசினார்.

 சேதுராமன் சாத்தப்பன்
சேதுராமன் சாத்தப்பன்

வேலைக்குச் செல்வதைவிட தொழில் செய்வதில் இருக்கும் நன்மைகளையும் `மாத்தியோசி’ப்பதால் ஏற்படக்கூடிய பலன்களையும் (உதாரணம், சாஷே என்கிற ஒரு பேக்கிங் வகையை தனது ஷாம்ப்பூ மூலம் அறிமுகப்படுத்திய சின்னி கிருஷ்ணன், இட்லி/தோசை மாவு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஐ.டி நிறுவனத்தின் முஸ்தஃபா ஆகியோர்) குறிப்பிட்டு, மிகவும் சுருக்கமாக, செறிவார்ந்த விஷயங்களையும் எடுத்துச் சொன்னார்.

பல மடங்கு வளர்ச்சி தரும் SCALE...

சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் தொழிலைப் பல மடங்காகப் பெருக்குவது எப்படி, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முனைவர் ஏ.வி. செந்தில் பேசினார்.

‘‘தொழிலை எப்படி பல மடங்கு பெருக்குவது (ஸ்கேலிங் அப்) என்பதற்கான சூட்சுமம் `ஸ்கேல் (SCALE)’ என்கிற எழுத்துக்களிலேயே இருக்கிறது என்கிறார் செந்தில். அது என்ன ஸ்கேல்? S – System,  C (capability, capacity, contribution, credibility, comfort level), A (attitude, acceptance, all stakeholders, alignment to vision),  L (learner, leadership, loyal), E – Empowerment எனப் பல நிலைகளைக்கொண்டிருக்கிறது.

முனைவர் ஏ.வி. செந்தில்
முனைவர் ஏ.வி. செந்தில்

2003-ம் ஆண்டு 1 பில்லியன் டாலர் வருமானம்கொண்ட நிறுவனமாக இருந்த டி.சி.எஸ் 2019-ம் ஆண்டு, சுமார் 20 பில்லியன் டாலர் வருமானம்கொண்ட நிறுவனமாக 16 ஆண்டுகளில் 20 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்குக் காரணம், அவர்களின் Systems (automation, IoT, Tools, Cloud, Software) மற்றும் நிறுவனத்தை நடத்திச்செல்ல சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் அனைத்துப் பொறுப்பையும் கொடுத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது போன்றவையே.

தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தைப் பெற `C-A-L’ என்கிற நிலைகளைக் கடக்கவேண்டியது அல்லது நிரூபிக்கவேண்டியது அவசியம். உங்கள் நிறுவனம் 10% அல்லது அதற்கு மேல் வளர்ச்சி பெறவேண்டுமெனில் Cashflow, Strategy, Execution Capability and People Effectivenss – மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

ஆச்சிமார்களின் பிசினஸ் அறிவு...

அடுத்து பேசிய `காஸ்மோ’ ராமநாதன், நகரத்தாரின் பண்பாடு, கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து பல அரிய தகவல்களைக் கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வயதான ஆச்சிமார்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று முறையான கல்வி பயிலவில்லை என்றாலும் அவர்களின் அனுபவ அறிவு, படித்தவர்களையும் விஞ்சும்படி இருந்ததாகத் தனது பேச்சில் குறிப்பிட்டவர், தான் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கப்போவதை அவருடைய ஆயாவிடம் (பாட்டி) சொல்ல, அவர், ‘எத்தனை லட்சம் முதலீடு?’எனக் கேட்டிருக்கிறார். இவர் ஒரு தொகையைச் சொல்ல, அவர் ‘எத்தனை ஆயிரம் மிஞ்சும்’ (அதாவது, லாபம்) எனக் கேட்டிருக்கிறார். அதாவது, முதலீட்டில் எத்தனை சதவிகிதம் லாபம் வரும் என்பதை அவர் மிக எளிய சொல்லாடல் மூலம் கேட்டிருக்கிறார்.

`காஸ்மோ’ ராமநாதன்
`காஸ்மோ’ ராமநாதன்

தொடர்ந்து பேசிய `காஸ்மோ' ராமநாதன், ஏ.கே.செட்டியார் குறித்த தகவல் ஒன்றையும் கூறினார். 1940-களில் `உலகம் சுற்றிய தமிழன்’ எனப் பெயர் பெற்றவர் கோட்டையூரைச் சேர்ந்த ஏ.கே. செட்டியார். அவர், காந்தி சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று அவர்குறித்து ஆவணப்படம் எடுத்தது பெரும்பாலனவர்கள் அறிந்த ஒன்று. ஆனால், அந்தப் படத்தை வாங்க 20th Century Box என்கிற பிரபலமான படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.20 லட்சம் கொடுத்து வாங்க முயன்றபோதும் அதைத் துச்சமென மதித்து நிராகரித்திருக்கிறார். அவர் எடுத்த படம், இன்றைக்கு தேசிய ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது என்றும் குறிப்பிட்டார்.

‘தொழில் நமது பாரம்பரியம், பயணம் தொடர்கிறது…’ என்பதைத் தாரகமந்திரமாகவும் ‘இணைப்பு – உருவாக்கம் – வளர்ச்சி’ என்பதை இலக்காகவும் கொண்டு இந்தக் குழு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்று.

பிசினஸ் செய்தாலும்... எதிர்காலத் தேவைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!