Published:Updated:

ஒரே மாதத்தில் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள்! ஜெட் வேகத்தில் முன்னேறும் ஜியோ

தெ.சு.கவுதமன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதனால், வோடபோன், ஐடியா பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

Reliance gio
Reliance gio

குறைந்த விலை, அதிக டேட்டா என ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானதிலிருந்தே அதிரடி அறிவிப்புகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருகிறது. இதன் காரணமாக, மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி இறங்குமுகத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. இந்நிலையில், பிராட்பேண்ட் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கப்படும் என சமீபத்தில் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

Telecommunication companies
Telecommunication companies

இந்தநிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், கடந்த ஜூன் மாதம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வோடோபோன் ஐடியா நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், 41.45 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அடுத்ததாக, ஏர்டெல் நிறுவனம் 29,883 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2.66 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

பிராட்பேண்ட் சேவையைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே தற்போது முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு 331.26 மில்லியன் வாடிக்கையாளர்களும் ஏர்டெல் நிறுவனத்துக்கு 119.09 மில்லியன் வாடிக்கையாளர்களும் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 110.50 மில்லியன் வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 12.87 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

Realiance gio
Realiance gio

கேபிள் இணைப்புடன் கூடிய பிராட்பேண்ட் இணைப்பு என்ற வகையில் பார்க்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 9.05 மில்லியன் வாடிக்கையாளர்களும் ஏர்டெல் நிறுவனத்துக்கு 2.40 மில்லியன் வாடிக்கையாளர்களும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் நிறுவனத்துக்கு 1.45 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தொலைபேசி பயன்பாட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,183.15 மில்லியனிலிருந்து 1,186.63 மில்லியனாக உயர்ந்துள்ளது.