Published:Updated:

`12 ஆண்டுகள் உழைப்பு; நிர்வாகப் பதவிகள்!' - விப்ரோ தலைவரான ரிஷாத் பிரேம்ஜி

ரிஷாத் பிரேம்ஜி தலைமையில்தான் கடந்த 4 வருடங்களாக விப்ரோ பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

ரிஷாத் பிரேம்ஜி
ரிஷாத் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தை சுமார் அரை நூற்றாண்டாக வழிநடத்தி, உலக அரங்கில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கிய அசிம் பிரேம்ஜி, தனது 74-வது வயதில் தன்னுடைய செயல் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது இந்த முக்கியமான பதவியில் அவருடைய மகன் ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷாத் பிரேம்ஜி
ரிஷாத் பிரேம்ஜி

இவர் கல்வி உலகின் பல வர்த்தக மேதைகள் படித்த ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டமும், வெஸ்லேயன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டமும் பெற்றவர். 2014–ல் இவரை உலகப் பொருளாதார அமைப்பு, இளம் உலகளாவிய தலைவர் பட்டம் கொடுத்து கெளரவம் செய்தது.

விப்ரோ நிறுவனத்தில் சேரும்முன் ரிஷாத், லண்டன் பெயின் அண்டு கம்பெனி நிறுவனத்தில் பணியாற்றினார். இந்நிறுவனத்தில் ரிஷாத் நுகர்வோர் பொருள்கள், ஆட்டோமொபைல், டெலிகாம் மற்றும் இன்ஷூரன்ஸ் பிரிவுகளில் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அமெரிக்காவில் இருக்கும் ஜி.இ.கேப்பிடல் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் விப்ரோ நிறுவனத்தின் தலைமைக் குழுவில், 2007-ம் ஆண்டு இணைக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 2015-ல் விப்ரோ தலைமை நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இணைந்தார். இதன் பின் விப்ரோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில்தான் கடந்த 4 வருடங்களாக விப்ரோ பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதேபோல் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் பணியிலும் ரிஷாத் ஈடுபட்டிருந்தார். 2015-ம் ஆண்டில் நிர்வாகக் குழுவில் இணைந்தபோது, அவருக்கு 100 பில்லியன் கொடுக்கப்பட்டது. இதை வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்து நிறுவனத்துக்குப் புதிய வர்த்தகத்தைக் கொண்டு வரப் பயன்படுத்த வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டது. இதுநாள் வரையில் பொறுமையாக ஆலோசித்து 65 மில்லியன் டாலர் தொகையைச் சுமார் 18 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார்.

அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பணியிலிருந்து விலகினாலும் அவர் Non-Executive director- ஆகத் தொடர்வார் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.