Published:Updated:

`இனி அலுவலகங்களே தேவையில்லை..!' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம்

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர் ( Pinterest )

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் தன் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பக் காலத்தில் நம் அனைவரையும் தனியொரு ஊடகமாக மாற்றியது சமூக வலைதளங்களே. தற்போது இருக்கும் சமூக வலைதளங்களின் அரசனாகத் திகழும் ட்விட்டர் தனது ஊழியர்கள் அனைவரையும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வைக்கும் முடிவினை எடுத்துள்ளது.

ட்விட்டர்
ட்விட்டர்

கொரோனா அவசரகால சூழல் ஏற்பட்ட உடன் முதன்முதலில் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது ட்விட்டர் நிறுவனம். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் ட்விட்டர் ஆர்வம் காட்டப் போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் வீட்டில் வைத்தே வேலை செய்ததிலிருந்து நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் தேவை குறையும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ``வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழலே ஊழியர்களுக்குச் சிறப்பானதாக அமையும் பட்சத்தில் இயல்புநிலை திரும்பிய பின்னரும்கூட வீட்டில் வைத்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். இல்லையென்றாலும் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதைப் பாதுகாப்பாக உணரும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஊழியர்களை அன்புடன் வரவேற்கவும் எங்கள் அலுவலகங்கள் தயாராக உள்ளன" என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

மீண்டும் அலுவலத்திற்கு வருவதும் வீட்டிலேயே இருந்து வேலை செய்வதும் பணியாளர்களின் முடிவாகவே இருக்கும் என்றும் ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் திட்டமிடப்பட்ட 2020-ம் ஆண்டிற்கான வணிகப் பயணங்கள் மற்றும் உள் அலுவலக நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கெனவே 2021 ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவிரைவாக ட்விட்டரின் பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் பெருமிதப்பட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

அமேசான், கூகுள், ட்விட்டர்...  கொரோனா பாதிப்பில் ஊழியர்கள், நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள்!

ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களும் அக்டோபர் மாதம் வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஊரடங்கு முடிந்தும் காலம் முழுவதும் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ள பெருமை ட்விட்டர் நிறுவனத்தையே சாரும்.

அடுத்த கட்டுரைக்கு