Published:Updated:

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்!

சாஸ்பூமி டீம்
பிரீமியம் ஸ்டோரி
சாஸ்பூமி டீம்

சாதித்த சாஸ்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்!

சாதித்த சாஸ்

Published:Updated:
சாஸ்பூமி டீம்
பிரீமியம் ஸ்டோரி
சாஸ்பூமி டீம்

றக்குறைய மகாபலிபுரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அந்த ஹோட்டலில் இந்தியா முழுக்க மென்பொருள்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் தொழில் நடத்துபவர்கள் கூடியிருந்தார்கள். ஜீன்ஸ், டிசர்ட் சகிதமாக இருந்த அவர்கள், ‘நாளைய இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நடத்தப் போகிறவர்கள் நாங்கள்தான்’ என்ற பெருமிதத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் வாயிலிருந்து வந்துவிழும் வார்த்தைகள் `மில்லியன்’, `பில்லியன் டாலர்’ போன்றவையாகத்தான் இருந்தன. யார் இவர்கள்..?

இன்று இணையத்தில் நம் தேவைகள் அதிகம். ஆம்பூர் பிரியாணி வாங்குவது முதல் அமெரிக்காவுக்குப் பணம் அனுப்புவது வரை அத்தனை வேலைகளையும் இணையதளம் மூலம் செய்து முடிக்க நமக்குப் பலவிதமான மென்பொருள்கள் (Softwares) தேவைப்படுகின்றன. நம் தேவைகளுக்கேற்ப 1700-க்கும் மேற்பட்ட பிரிவுகளில், ஆயிரக்கணக்கான மென்பொருள்களை தினம் தினம் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனர்கள்.

ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப்

ஒரு நிறுவனம் இந்த மென்பொருள்களை தன் பயன்பாட்டுக்கு வாங்க வேண்டுமென்றால், பல லட்ச ரூபாயைச் செலவு செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனமே அதை உருவாக்க வேண்டும். இரண்டுமே நடக்கிற காரியமில்லை எனும்போது, `மாதத்துக்கு இவ்வளவு கட்டணம் கட்டுங்கள்; உங்களுக்கான மென்பொருள்களை நாங்கள் தந்துவிடுகிறோம்’ என்று சேவை அடிப்படையில் மென்பொருள்களைப் பயன்படுத்தத் தருவதுதான் ‘சாஸ்’ (SaaS - Software as a Service). இந்த சாஸ் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பைக் கண்டு உலகமே வியக்கிறது. குறிப்பாக, சென்னையிலிருந்து செயல்படும் ஜோஹோ (Zoho), ஃப்ரெஷ்வொர்க் (Freshwork), கிஸ்ஃப்ளோ (KissFlow), சார்ஜ்பீ (Chargebee) நிறுவனங்களின் பங்களிப்பு உலக அளவிலும், இந்திய அளவிலும் வியக்க வைப்பது.

இன்றைக்கு சாஸ் துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்கள் தலா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.700 கோடி) வருமானம் ஈட்டுபவையாக வளர்ச்சி கண்டிருக்கின்றன. இரண்டு நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) வருமானத்தையும், 37 நிறுவனங்கள் 5 மில்லியன் டாலர் (ரூ.35 கோடி) முதல் 50 மில்லியன் டாலர் வரையிலான வருமானத்தையும் கொண்டிருப்பதை உலகம் முழுக்க உள்ள சாஸ் நிறுவனங்கள் வியப்புடன் பார்த்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சாஸ் துறையைச் சார்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் கூடி, தங்கள் துறையில் நடக்கும் நல்ல, கெட்ட விஷயங்களை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் பகிர்ந்துகொள்ள ‘சாஸ்பூமி’ (SaaSBoomi) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடக்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வில், இந்த ஆண்டு இந்தியா முழுக்க 450-க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனர்கள் கலந்துகொண்டனர்.

சாஸ்பூமி டீம்
சாஸ்பூமி டீம்

‘‘சாஸ் துறையில் இருப்பவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். மூன்றாவது ஆண்டாக இது நடக்கிறது. முதல் ஆண்டில் நூறு பேர் கலந்துகொண்டனர்; இப்போது 450 பேராக அதிகரித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஆயிரம் பேர் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றார் கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சுரேஷ் சம்பந்தம்.

‘‘நாங்கள் அனைவரும் வெவ்வேறு நிறுவனங்களை நடத்திவந்தாலும், எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இனி தவறு செய்வதைத் தவிர்க்க நினைக்கிறோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி’’ என்றார் சார்ஜ்பீ நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஷ் சுப்பிரமணியன்.

‘‘சாஸ் நிறுவனங்களுக்கு உலக அளவில் இருக்கும் பிசினஸ் மிகப்பெரியது. ஆனால், அதற்கு நம் பங்களிப்பு சிறிய அளவிலேயே இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த பிசினஸுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சென்னையில் தயிர்சாதத்தை சாப்பிட்டுக்கொண்டே இந்த பிசினஸின் பெரும் பகுதியை நம்மால் பிடிக்க முடியும்’’ என்றார் ஃப்ரெஷ்வொர்க் நிறுவனத்தின் கிரிஷ் மாத்ருபூதம்.

ராஜன் ஆனந்தன், சந்தர் பட்டாபிராம், வினோத் முத்துகிருஷ்ணன்
ராஜன் ஆனந்தன், சந்தர் பட்டாபிராம், வினோத் முத்துகிருஷ்ணன்

இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்ச்சியின் முதல் தினத்தன்றே ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நடத்துபவர்கள் திரண்டு வந்துவிட்டார்கள். அவர்கள் தங்களின் பிசினஸ் பிளான்களை எடுத்துச்சொல்லி, அவர்கள் உருவாக்கிவரும் புராடெக்டுகளை நிபுணர்களிடம் சொல்லி, ஆலோசனை கேட்டுத் தங்களை பண்படுத்திக் கொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காலையில் தொடங்கி மாலை வரை உலக அளவில் சாஸ் துறையின் ஜாம்பவான்களாக விளங்கும் நிபுணர்களை அழைத்துப் பேசவைத்தனர்.

சாஸ் துறையில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மென்பொருள்களை எப்படி விற்பனை செய்ய வேண்டும் என விளக்கமாகச் சொன்னார் ராஜன் ஆனந்தன். இவர் டெல், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணியாற்றியவர்; கூகுள் இந்தியாவின் துணைத் தலைவராகவும் இருந்தவர். தற்போது ‘செகோயா’ (Sequoia) என்ற முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். ‘‘நீங்கள் அடைய நினைத்த 100 சதவிகிதத்தில் 95 சதவிகிதத்தை அடைந்தால்கூட அது ‘மிஸ்’தான். 100 சதவிகிதத்தையும் அடைவதே வெற்றி’’ என்று அவர் பேசியதைப் பலரும் ரசித்தனர்.

அமெரிக்காவின் கூபா (Coupa) பகுதியைச் சேர்ந்த சந்தர் பட்டாபிராம், தனது நிறுவனம் 10 பில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனமாக மாறியது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

க்ளவுட்செர்ரி என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி, ஆறு ஆண்டுகளில் அதை சிஸ்கோ (CISCO) நிறுவனத்துக்கு விற்ற அனுபவத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் வினோத் முத்துகிருஷ்ணன்.

இரண்டாம் நாள் கருத்தரங்கின் இறுதியில் பேசினார் ஃப்ரெஷ் வொர்க் நிறுவனத்தின் கிரிஷ் மாத்ருபூதம். ‘எல்லாத் தடைகளும் நமக்குள்ளே...’ என்று அவர் தனது பேச்சுக்குத் தலைப்பு வைத்திருந்தார்.

சாஸ் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது நமக்குப் பெருமையே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தொழில் என்று வரும்போது சிறந்த ஆலோசகரின் ஆலோசனையுடன் முடிவு செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரை, உங்களுடைய சிறந்த ஆலோசகர் என்றால் அது நீங்கள்தான். நான் சாஸ் நிறுவனத்தைத் தொடங்கியபோது, ‘ஏற்கெனவே பல நிறுவனங்கள் இந்தத் துறையில் இருக்கின்றனவே... நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார்கள். அவர்கள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால்தான் இன்று உங்கள்முன் நிற்கிறேன். நமக்குள் `வளர வேண்டும்’ என்ற மனப்பான்மை (Growth Mindset) இருக்க வேண்டும். `போதும்’ என்ற மனப்பான்மை (Fixed Mindset) இருந்தால், நாம் முன்னேறவே மாட்டோம்.

எனது நிறுவனத்தின் வருமானத்தை ஒவ்வோர் ஆண்டும் 100% அதிகரிப்பதுபோல இலக்கு நிர்ணயிப்போம். `இந்த இலக்கை அடையவே முடியாது’ என்று சிலர் சொல்வார்கள். அப்படி சொன்னால்கூட, இலக்கை நான் மாற்றவே மாட்டேன். ஆனால், இலக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து வேலை பார்க்கும்போது, நான் நிர்ணயித்த இலக்கு தானாக அடைவதைப் பார்த்திருக்கிறேன். 100% இலக்கை அடைய முடியாவிட்டாலும், 90% அடைந்தாலே அது பெரிய வெற்றிதானே!’’ என்று அவர் பேச, பலரும் கைதட்டி ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களான டைகர் குளோபல், ஆக்செல், செகோயா ஆகியவை கலந்துகொண்டன. நல்ல மென்பொருளைத் தயாரிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கண்டறிந்து, தொழில் முதலீடு செய்யவே இந்த நிறுவனங்கள் வந்திருந்தன.

சாஸ் துறையில் நம் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கலக்கப்போகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது நமக்குப் பெருமையே! இன்றைய இளைஞர்கள் சாஸ் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்!

பார்வையாளர்களை உருகவைத்த கிரிஷ்!

ஃப்ரெஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் கிரிஷ் மாத்ரூபூதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினி படம் வெளியானால், தனது நிறுவன ஊழியர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று, முதல் காட்சியிலேயே படம் பார்த்துவிடுவார். ஸ்டார்ட்அப் உலகின் சாம்பியனாக அறியப்படும் அவர், சாஸ்பூமி கருத்தரங்கில் பேசியபோது அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்!

‘‘நான் ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு, என்னை இன்ஜினீயரிங் படிக்க வைக்க நினைத்தார் என் அப்பா. நான் நல்ல மார்க் எடுக்காததால், மேனேஜ்மென்ட் கோட்டாவில்தான் சீட் கிடைத்தது. வங்கி அதிகாரியாக வேலை பார்த்த என் அப்பாவால் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் வாங்கும் அளவுக்கு வசதியில்லை. எனவே, என் உறவினர் ஒருவரிடம் கடன் கேட்டார். ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே...’ என்று என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு, `கடன் தர முடியாது’ என்றும் சொல்லிவிட்டார் அவர். பிறகு என் அப்பா வட்டிக்குக் கடன் வாங்கி, என்னைக் கல்லூரியில் சேர்த்தார். ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவர் இறந்துவிட்டார்’’ என்று அவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பிக்க, அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைதட்டிப் பாராட்டினார்கள். ‘லவ் யூ கிரிஷ்’ என்று ஓங்கி ஒலித்தது ஒரு குரல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism