Published:Updated:

இந்தியாவில் அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை... ஷாவ்மி, சாம்சங், விவோ - எந்த பிராண்ட் டாப்?!

பல்வேறு துறைகளும் இணையத்தை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது காலத்தின் கட்டாயம் என்று தான் கூற வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாகவும் ஊரடங்குக் காரணமாகவும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. 2021-ன் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவிலான ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன.

கொரோனா இரண்டாம் அலைப் பரவலினால், மீண்டும் அவ்வப்போது ஊரடங்குகள் அறிவிக்கப்படுகின்ற நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனை இன்னும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 500 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இந்தியா. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் ஸ்மார்ட்போனின் தேவைகளும் உயர அதன் விற்பனை விண்ணை முட்டுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மார்ச் வரை மட்டும் 38 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. இதுவரை ஒரே காலாண்டில் இவ்வளவு அதிகபட்ச ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது இதுதான் முதல் முறை.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் பிராண்ட்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் பிராண்ட்கள்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனாயில் 26 சதவிகித சந்தைப் பங்குகளுடன் சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனமே முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இருக்கிறது. விவோ, ரியல்மீ மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகும் 75 சதவிகித ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனங்களைச் சேர்ந்தைவைகளாகவே இருக்கின்றன. இந்தியாவில் முதல் காலாண்டில் ஆப்பிளின் ஸ்மார்ட் போன்களின் விற்பனையும் முன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு மில்லியன் ஸ்மார்ட்போன்களை முதல் காலாண்டில் ஆப்பிள் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு:

ஊரடங்குக் காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்ததற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விக்காக ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களான, கேமிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஊரடங்குக் காலத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரு சராசரி நபர் வாரத்திற்கு 8 மணி நேரம்வரை ஓடிடி தளங்களில் செலவிடுகிறார் எனத் தரவுகள் சொல்கின்றன. ஊரடங்குக் காலத்தில் மொபைலில் கேம் விளையாடும் நேரம் இந்தியாவில் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 326 மில்லியன் மொபைல் கேமர்களுடன் உலகளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறது இந்தியா.

இந்தியாவில் அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை
இந்தியாவில் அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை

பட்ஜெட் ஸ்மார்ட்போனின் வரவும் இந்தியாவில் கணிசமான அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தற்குக் காரணமாக இருக்கிறது. இவை மட்டுமின்றி கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதில் இருந்து பல்வேறு வகையான நடவடிக்கைகளுக்கு ஸ்மார்ட்போனின் தேவை அவசியமானதாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் அனைத்து வேலைகளையும் நம்மால் செய்ய முடியும் எனினும், ஸ்மார்ட்போனின் இருப்பு அவற்றை எளிதாக்குகிறது. பல்வேறு துறைகளும் இணையத்தை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. மொபைல் ஆப்கள் வெளியிடுகின்றன. எனவே, ஸ்மார்ட்போன் பயன்பாடு தனிப்பட்ட தேவை என்பதைவிட காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு