வாட்ஸ்அப்... நம்மைப் பற்றிய டேட்டாக்கள் இனி பத்திரமாக இருக்குமா? உலகம் முழுக்க நடக்கும் சர்ச்சை!

டெக் உலகில் பிரபலமான வாசகம் இது... “If you don’t pay for the product, you are the product.” இலவசமாக உங்களுக்கு ஒரு சேவை கிடைக்கிற என்றால் உங்களிடமிருந்து வேறு விதங்களில் ஆதாயம் பார்க்கப்படும் என்று இதற்குப் பொருள். பிரபல டிஜிட்டல் சேவைகள் அனைத்துக்குமே இது பொருந்தும்.
ஃபேஸ்புக் இலவசமாகச் சேவை வழங்குகிறது என்றால், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. ஃபேஸ்புக்குக்கு உங்களைவிடவும் உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். நீங்கள் எந்த அரசியல் நிலைப்பாடு உடையவர் என்பது தொடங்கி, உங்களது ஃபேவரைட் உள்ளாடை வரை அனைத்தையும் ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருக்கும் என்பதுதான் நிதர்சனம். இவையெல்லாம் எப்படி அவர்களுக்குக் கிடைக்கிறது எனக் கேட்கிறீர்களா?
எல்லாம் நாம் கொடுக்கும் டேட்டாக் களை வைத்துதான். முன்பு லைக் மட்டும்தான் செய்துகொண்டிருந் தோம். இப்போது லைக் உட்பட மொத்தம் ஐந்து எமோஷன்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறது. இதனால் ஒரு விஷயத்துக்கு நாம் எப்படி எமோஷனலாக ரியாக்ட் செய்வோம் என்றுகூட ஓரளவு கணித்துவிடும். இதனால் ஃபேஸ்புக்குக்கு என்ன லாபம்..?
உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்களது தேவை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு விளம்பரங் களைக் காட்டும் ஃபேஸ்புக். சரியான பார்வையாளர்களுக்கு விளம்பரங் களை எடுத்துச் செல்வதால், நிறுவனங்களும் ஃபேஸ்புக்கில் விளம்பரம் தருவதையே விரும்பும். இதில் கூட்டிக் கழித்து பார்க்கக்கூட ஒன்றும் கிடையாது. உங்களைப் பற்றி எந்த அளவுக்கு நன்றாகத் தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஃபேஸ்புக்கினால் வருமானம் ஈட்ட முடியும். ஃபேஸ்புக் என்றில்லை கிட்டத்தட்ட அனைத்து டிஜிட்டல் சேவைகளும் இந்த வேலையைத்தான் பார்க்கின்றன. ஆனால், தொடர்ந்து ஏதேனும் சர்ச்சையில் சிக்குவது ஃபேஸ்புக்தான். ஏனென்றால் ஃபேஸ்புக் அளவுக்கு டேட்டா எந்த நிறுவனத்திடமும் கிடையாது.
சரி, இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? ஃபேஸ்புக்குக்கு சொந்தமான மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப்பை சுற்றிக் கடந்த சில நாள்களாகப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு ஒரு பாப்-அப் மெசேஜ் வந்திருக்கும். அதன் பிரைவசி பாலிசியையும் பயன்பாட்டு விதிகளையும் (Privacy Policy, Terms and Conditions) மாற்றுவதாக அதில் குறிப்பிட்டிருந்தது வாட்ஸ்அப். அதற்கு ஓகே சொல்லா விட்டால், பிப்ரவரி 8-ம் தேதிக்குப் பிறகு, வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என மிரட்டியது வாட்ஸ்அப். இதனால் தான் அனைவரின் ஃபோகஸும் வாட்ஸ்அப் பக்கம் திரும்பியது.
வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கைத் தடை செய்ய வேண்டும் என்று வணிகர் கூட்டமைப்பான CAIT மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதானது. இவ்வளவு பூதாகரமாக இந்த பிரச்னை வெடிக்கும் என வாட்ஸ்அப் எதிர்பார்த்திருக்காது. இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் இதே நிலைதான். பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்றுச் சேவைகளுக்கு மாறத் தொடங்கி யிருக்கின்றனர். வாட்ஸ்அப்பும் முடிந்தளவு புதிய பிரைவசி கொள்கைகளில் சிக்கல் எதுவும் இல்லை என விளக்கப் பார்க்கிறது. செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கிறது. வாட்ஸ்அப்பில் வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் வைக்கும் காமெடி எல்லாம் நடந்தேறியிருக்கிறது.
ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், புதிதாக இதில் பயப்பட ஒன்றுமே இல்லை. ஏற்கெனவே சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்த விஷயங்களை இன்னும் விரிவாகவும் வெளிப் படையாகவும் சொல்லியிருக்கிறது வாட்ஸ்அப். இதற்குத் தங்களைப் பாராட்டுவார்கள் என்றுதான் நினைத்திருக்கும் வாட்ஸ்அப். புதிதாகக் கொண்டுவரப் பட்டிருக்கும் பணப்பரிவர்த்தனை சேவையான ‘வாட்ஸ்அப் பே’-வுக்குத் தேவையான சில கொள்கைகளைச் சேர்த்திருக் கிறார்கள். ‘தேவைப்பட்டால் ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்பு களுடனும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடனும் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்’ என்றிருக்கிறார்கள். ஃபேஸ்புக் அதன் சேவைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறது. அதுதான் மக்கள் அச்சம் கொள்ளக் காரணம்.

வாட்ஸ்அப் சேகரிக்கும் தகவல்கள்...
மொபைல் மாடல், ஓஎஸ், பேட்டரி ஸ்டேட்டஸ், சிக்னல் ஸ்ட்ரென்த், டைம் ஸோன், IP அட்ரஸ், பணப் பரிவர்த்தனைத் தகவல்கள், ஸ்டேட்டஸ் அப்டேட்கள், குரூப் தகவல்கள், புரொபைல் போட்டோ, பயனர் கொடுத்திருக்கும் ‘About Info.’
இந்த சர்ச்சை குறித்து பரப்பப்படும் முக்கிய வதந்தி இதுதான். பல தகவல்களைப் பெற்றாலும் மெசேஜ்கள், வீடியோ அழைப்புகள், ஆடியோ அழைப்புகள் என அனைத்துமே எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட்(E2E) செய்யப்பட்டவை. அதாவது, நீங்கள் ஒரு மெசேஜ் அனுப்பு கிறீர்கள் என்றால், இங்கிருந்து என்க்ரிப்ட் செய்யப்பட்டே அது அனுப்பப்படும். பெறுநர் சாதனத்தில்தான் அது டீகிரிப்ட் செய்யப்படும். நடுவில் வாட்ஸ் அப்பாலும்கூட அதைப் படிக்க முடியாது. வாட்ஸ்அப் பயன் படுத்தும் E2E முறை ஓப்பன் விஸ்பர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது. இதைதான் ‘சிக்னல்’ பயன்படுத்துகிறது, ஆனால், அது மிகவும் பாதுகாப்பானது என கூறக் காரணம் அது ‘Metadata’-வை எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யும். அதனால் நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்புகிறீர்கள் என்றுகூட யாராலும் பார்க்க முடியாது. அந்த அளவு பிரைவசி வேண்டும் என்றால் சிக்னல் ஓகே. சாதாரண பயன்பாட்டுக்கு இந்த அளவு டேட்டா பாதுகாப்பு எதிர் பார்த்தால், எந்தச் சேவை யையுமே பயன்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம். சிக்னல் லாபநோக்கற்ற ஒரு அமைப்பு எடுத்து நடத்துகிறது. ஆனால், வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதனால், ஏதேனும் ஒரு வழியில் அந்தப் பணத்தைத் திருப்பி யெடுக்கதான் பார்ப்பார்கள். எந்த அளவுக்கு அது நம் பர்சனல் விஷயங்களில் தலையிடாமல் இருக்கிறது என்பதில்தான் விஷயம் இருக்கிறது. இதில் அனைவருக்குமே குழப்பம்.
நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும் மெசேஜ்களின் பிரைவசி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். மாறாக, பிசினஸ் கணக்குகளுடன் நடக்கும் உரையாடல் குறித்தே புதிய கொள்கைகள் பேசுகின்றன என வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. புதிய பிரைவசி கொள்கை பற்றி அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்க பிரத்யேக பக்கம் ஒன்றையும் தயார் செய்திருக்கிறது வாட்ஸ்அப். இதை முதலிலேயே விளக்கமாகச் சொல்லி யிருந்தால் பிரச்னை இவ்வளவு பெரிதாக உருவெடுத்திருக்காது.
இந்தப் பிரச்னைகள் உலகமெங்கும் வெடித்துகொண்டிருக்க ஐரோப்பாவுக்கு மட்டும் சைலன்ட்டாக வேறு பிரைவசி கொள்கைகளை வெளியிட்டது வாட்ஸ் அப். அங்கு ஃபேஸ்புக்கிடம் தகவல்களைப் பகிர மாட்டோம் என்கிறது வாட்ஸ்அப். காரணம், அங்கிருக்கும் கடுமையான டேட்டா பாதுகாப்புச் சட்டங்கள். General Data Protection Regulation என்னும் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, டெக் நிறுவனங்கள் மக்கள் தகவல்களைக் கையாள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
அது போன்றொரு சட்டமாகத்தான் Personal Data Protection Bill இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் சட்டமாகவில்லை. அதனால் தான் பிரைவசி கொள்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பெயரளவில் வாட்ஸ்அப்புக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.
தற்போதைய நெருக்கடியால் மே மாதம் வரை புதிய கொள்கைகளைத் தள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். ஆனால், இது மே மாதமே முடியும் பிரச்னை அல்ல. இந்தியா உலகின் முன்னணி டேட்டா பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று பலரும் கணிக்கின்றனர். அதனால் டேட்டா பற்றிய புரிந்துகொள்ளல் நமக்கு அவசியம். அரசுக்கும் அது இன்றியமையாதது!
பிட்ஸ்
ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.7,500 கோடியை ஐ.பி.ஓ மூலம் திரட்ட முடிவு செய்து, செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக் கிறது. கூடிய விரைவில் இந்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!