Published:Updated:

WhatsApp: பிரேசில் வைத்த செக்; இந்தியா பக்கம் திரும்பும் வாட்ஸ்அப் பேமன்ட்!

இந்தியாவில் தற்போது Google Pay, PhonePe, Paytm, Amazon Pay ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியாவில் வாடஸ்அப் செயலியை 400 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவி விரிந்துள்ளது. சாட் செய்யும் வசதியுடன் படங்களையும், வீடியோக்களையும் எளிதில் அனுப்ப முடியும் என்பதால் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்தது. நண்பர்களுக்குள் முதலில் தொடங்கிய `க்ரூப்’-ன் பயன்பாடுகள் பின்னர் அலுவலகங்களில் அதிகாரபூர்வ தகவல்கள் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு அதிகரித்தது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

பல்வேறு புதிய வசதிகளை தினம் தினம் அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப், கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக வாட்ஸ்அப் செயலி மூலமாக பணம் அனுப்பும் பேமன்ட் வசதியையும் அறிமுகப்படுத்தியது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகவே இது பீட்டா வெர்ஷனிலே பரிசோதனை கட்டத்தில் இருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம் பிரேசில் நாட்டில் இந்தப் பணம் அனுப்பும் வசதியைத் தொடங்கியது. இந்தியாவுக்கு அடுத்தபடி வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் பிரேசில் இருக்கிறது. அங்கு சுமார் 12 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பேமன்ட்
டிஜிட்டல் பேமன்ட்

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வரும் நிலையில் இந்த டிஜிட்டல் பேமன்ட் அம்சம் உதவியாக இருக்கும் என பிரேசில் நாட்டுக்கான வாட்ஸ்அப் நிர்வாக அலுவலர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒரே வாரத்தில், நாட்டில் போட்டி சூழலை பாதுகாக்கும் பொருட்டு வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்குத் தடை விதித்தது பிரேசிலின் மத்திய வங்கி. பேமன்ட் வசதியை அறிமுகம் செய்வதில் அதிக காலம் எடுத்துக்கொண்ட வாட்ஸ்அப்புக்கு, அது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் தடை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை அளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் வைத்திருக்கும் அனைவரும் அதன் மூலம் பணத்தை அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளது. ``பிரேசிலில் இருக்கும் எங்கள் நிறுவன அதிகாரிகள் அந்நாட்டின் மத்திய வங்கியுடன் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் பேமன்ட் வசதியை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டுள்ளோம். யு.பி.ஐ மூலம் பணம் செலுத்துவது என்பது ஒரு முன்மாதிரியானது. இது அனைவருக்கும் நிதி சேவைகளை வழங்க வல்லதாக இருக்கிறது” என வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இதனிடையே, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், வாட்ஸ்அப் நிறுவனம், `வங்கிகளை ஒழுங்குபடுத்தும் ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாட்டின் தரவு உள்ளூர்மயமாக்கல் தேவைகளுக்கு முழுமையாக இணங்குகிறோம்’ எனத் தெரிவித்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அனைத்து பயனாளர்களுக்கும் பேமன்ட் சேவையை வழங்கும்பட்சத்தில், இந்தியாவில் நிதி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அது பெரும் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தவிர வாட்ஸ்அப் நிறுவனத்தில் பேரன்ட் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் ஜியோ நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது.

இந்தியாவில் தற்போது Google Pay, PhonePe, Paytm, Amazon Pay ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 400 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்தச் சேவை அறிமுகமாலும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு