Published:Updated:

விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் நிறுவனர், ஜெஃப் பெஸோஸின் போட்டியாளர்! யார் இந்த ரிச்சர்ட் பிரான்சன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிச் சுற்றுலா
ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிச் சுற்றுலா

பிரான்சன் சிறுவயதில் இருந்தே ஒரு தொழில்முனைவர் என்பதால், விண்ணுக்குச் செல்வதை 'பெருங்கனவு', 'வாழ்வில் ஒரு நாள்' என்ற ஆசை வார்த்தைகளைக் கடந்து அதனையும் ஒரு வியாபார நோக்கத்தோடே அணுகியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரிச்சர்ட் பிரான்சன்... இந்தப் பெயரை சமீபத்தில் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா? சில நாள்களுக்கு முன்பு முதல் மனிதராக தனியார் விண்வெளி சுற்றுலா சென்றாரே, அவர்தான். அவ்வப்போது ஏதாவது புதுமையாகச் செய்து தலைப்புச் செய்திகளில் தவறாமல் இடம்பிடிப்பவர் பிரான்சன். இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஹைப்பர்லூப் திட்டங்களுக்கும் இவரது நிறுவனமான விர்ஜின் ஹைப்பர்லூப்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. சரி யார் இந்த பிரான்சன், கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமா?
Richard Branson
Richard Branson
590 கோடி அமெரிக்க டாலர்கள்
ரிச்சர்ட் பிரான்சனின் தற்போதைய சொத்து மதிப்பு.

இவ்வளவு சொத்து மதிப்புள்ள இவர் பள்ளிக்கல்வியைக் கூட முழுமையாக முடிக்காதவர். 15 வயதிலேயே பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர். டிஸ்லெக்ஸியா என்னும் அரிய வகைக் கற்றல் குறைபாட்டை உடையவர். (டிஸ்லெக்ஸியா குறைபாடு உடைய குழந்தைகளால், தகவல்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு 'குழந்தை' என்ற சொல்லை 'குழந்தை' என முழுமையாக அவர்களால் வாசிக்க முடியாது, 'ழகுதைந்', 'ந்ழதைகு' என்று வேறு விதமாகத்தான் அந்தத் தகவலை அவர்கள் மூளை ஏற்றுக் கொள்ளும். டிஸ்லெக்ஸியா குறித்து முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்). சிறு வயதில் இருந்தே தொழில்முனைவர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறையவே அவருக்கு இருந்திருக்கிறது. பள்ளிப்படிப்பை விட்டு, 16 வயதிலேயே 'Student' என்ற பத்திரிகையைத் துவக்கியிருந்தார். துவக்கத்தில் எந்தச் செயலும் நமக்கு எளிதில் கைகூடாதுதானே, அதுதான் பிரான்சனுக்கும் நடந்திருக்கிறது. 'Student' பத்திரிகை பிரான்சன் நினைத்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.

1968-ல் தான் Student பத்திரிகையின் முதல் இதழ் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தபால் மூலம் இசைத்தட்டு விற்கத் தொடங்கியிருக்கிறார் பிரான்சன். அந்த இசைத்தட்டுக்கான விளம்பரங்களைத் தனது பத்திரிகையின் மூலமே செய்திருக்கிறார். இசைத்தட்டு விற்பது நல்ல வருமானத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து 1971-ல் லண்டனின் ஆக்ஸ்போர்டு வீதியில் இசைத்தட்டு விற்கும் கடையையும் திறந்திருக்கிறார். அந்தக் கடையின் மூலம் கிடைத்த வருமானத்தில் 1972-ல் 'விர்ஜின் ரெக்கார்ட்ஸ்' (Virgin Records) என்ற ஆடியோ நிறுவனத்தை நிக் பவல் என்பவருடன் சேர்ந்து தொடங்கியிருக்கிறார் பிரான்சன். அந்தத் துறைக்கு அவரும் நிக் பவலும் புதியவர்கள் என்பதால் 'விர்ஜின்' என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் பிரான்சன் மற்றும் அவரது நிறுவனமான விர்ஜினின் வளர்ச்சி ஜெட் வேகம் எடுக்கிறது.

'கலக்குங்கனு சொன்ன ஒரு காரணத்துக்காக மனுஷன் இந்தக் கலக்காயா கலக்குவான்' என சந்தானத்தின் டயலாக் நினைவிருக்கும். அது போலத்தான் பிரான்சனின் தொழில்முனையும் பயணமும். அவர் கால்பதிக்காத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் கால் பதித்திருக்கிறார் பிரான்சன். தான் கால் பதித்த துறைகளில் எல்லாம் வெற்றி பெற்றார் எனச் சொல்ல முடியாது, ஆனால் எல்லாத் துறைகளிலும் புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார் எனச் சொல்ல முடியும். 1979-ல் விர்ஜின் ரெக்கார்ட்ஸ் மெகா ஸ்டோராக விரிவடைகிறது, விர்ஜினின் சாம்ராஜ்யமும்தான்!

விர்ஜின் நிறுவனங்கள்
விர்ஜின் நிறுவனங்கள்

1981-ல் விர்ஜின் கேம்ஸ், 1984-ல் விர்ஜின் அட்லான்டிக், 1985-ல் விர்ஜின் ஹாலிடேஸ், 1987-ல் விர்ஜின் ஏர்ஷிப் அன்ட் பலூன் கம்பெனி எனத் தொடர்ந்து பல நிறுவனங்களை விர்ஜின் குடையின் கீழ் துவக்குகிறார். புத்தகங்கள் தொடங்கி, உள்ளாடை வரை அவர் தயாரிக்காத பொருள்களே குறைவு என்னும் அளவிற்கு விர்ஜினின் குடை விரிகிறது. 1994-ல் விர்ஜின் கோலா, 1995-ல் விர்ஜின் சினிமாஸ், 1996-ல் விர்ஜின் எக்ஸ்பிரஸ், விர்ஜின் ட்ரெய்ன்ஸ், விர்ஜின்.நெட், வி2 மியூசிக், 1997-ல் விர்ஜின் காஸ்மெடிக்ஸ், 1999-ல் விர்ஜின் மொபைல்ஸ், 2000-ம் ஆண்டு, விர்ஜின்மணி.காம், விர்ஜின் கார்ஸ், விர்ஜின் எனர்ஜி, விர்ஜின் ஸ்டூடன்ஸ், விர்ஜின் ஒயின்ஸ், 2004-ல் விர்ஜின் கேலக்டிக், 2006-ல் விர்ஜின் மீடியா, விர்ஜின் ப்யூல்ஸ், 2007-ல் விர்ஜின் ஹெல்த் மைல்ஸ், 2008-ல் விர்ஜின் ஹெல்த்கேர், 2012-ல் விர்ஜின் ப்யூர், 2017-ல் விர்ஜின் ஆர்பிட், விர்ஜின் ஹைப்பர்லூப், 2019-ல் விர்ஜின் ரெட் என நீள்கிறது பிரான்சனின் விர்ஜின் போர்ட்ஃபோலியோ.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Space Tourism: விண்வெளியில் விர்ஜின் கேலக்டிக்... சாதனை செய்த 71 வயது ரிச்சர்ட் பிரான்சன்!

விர்ஜின் குடையின் கீழ் மட்டும் தற்போது 100-க்கும் மேல் புதிய நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார் பிரான்சன். அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது பிரான்சனின் வயது 11. அப்போதே தானும் ஒரு நாள் விண்வெளிக்குச் செல்வேன் எனத் தனக்குத்தானே கூறிக் கொண்டுள்ளார். அன்று அவர் போட்ட விதைதான் இன்று மரமாகி அவர் இன்று விண்ணுக்குச் சென்று வந்துள்ளார். பிரான்சன் சிறுவயதில் இருந்தே தொழில் முனைவதில் ஆர்வமாக இருந்தார் என்பதால், விண்ணுக்குச் செல்வதை 'பெருங்கனவு', 'வாழ்வில் ஒரு நாள்' என்ற ஆசை வார்த்தைகளைக் கடந்து அதனையும் ஒரு வியாபார நோக்கத்தோடே அணுகியிருக்கிறார். சாதாரணமாக எல்லோராலும் விண்வெளிக்குச் சென்று வர முடியாது. எனவே, சராசரி மனிதர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுத்து அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க நினைத்து அதன் சில படிகளை இன்று கடந்தும் விட்டார். 2022-ல் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் வணிகரீதியிலான முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது. ஒரு நபருக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் என்ற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரிச்சர்ட் பிரான்சனின்  விண்வெளிச் சுற்றுலா
ரிச்சர்ட் பிரான்சனின் விண்வெளிச் சுற்றுலா
71
ஜூலை 11 அன்று விண்ணுக்குச் சென்ற போது பிரான்சனின் வயது!

ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும், சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த 71 வயது இளைஞர். பிரான்சன் அவ்வப்போது சொல்வது இதுதான், "ஒரு செயலை செய்யும் போது நாம் தவறு செய்வதும் தோற்பதும் இயல்பு. ஆனால், ஒரு முறை செய்த தவறிலிருந்து பாடம் கற்காமல் அதனை மீண்டும் செய்வது தான் பெருந்தவறு" என்பதுதான். பிரான்சனிடம் இருந்து கண்டிப்பாக நாம் ஒரு பாடத்தைக் கற்க வேண்டும். மேற்கூறிய நிறுவனங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இயங்கியதா என்றால், கண்டிப்பாக இல்லை. 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விர்ஜின் கார்ஸ் நிறுவனம் 2005-ல் மூடப்படுவதற்கு முன்பாக மொத்தமாகவே 12,000 கார்களை மட்டுமே விற்றிருக்கிறது. விர்ஜின் கோலா நிறுவனமோ மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பிரான்சனுக்கு ஒரு பொருட்டில்லை. "ஒரு முறை தோல்வியைக் கண்டவுடன் சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது, மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்" என்பதே அவர் சிந்தாந்தம். இது நமக்குமே பொருந்தும்!

சரி இன்னொரு சுவாரஸ்ய தகவல் ஒன்று இருக்கிறது. ரிச்சர்ட் பிரான்சனுடன் விண்வெளிக்குச் சென்றுவந்த சிரிஷா பண்ட்லா, ஆந்திராவின் குண்டூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர். அவர் இந்திய வம்சாவளி என நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸிற்கு அடுத்தாக விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் இவர்.

ஆனால், பிரான்சனுக்கும் தமிழ்நாட்டுக்குமே ஒரு தொடர்பு உண்டு. "நான் ஒவ்வொரு முறையும் இந்தியர்களைச் சந்திக்கும் போது, எனக்குள்ளாகவே பெருமைப்பட்டுக்கொள்வேன். காரணம், ஒரு வகையில் அவர்கள் எனது உறவினர்களே. ஆம், 1793-ம் ஆண்டு முதல் எங்கள் குடும்பத்தின் நான்கு தலைமுறைகள், இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். என் கொள்ளுப்பாட்டியான ஆரியா ஒரு இந்திய பெண். டீ.என்.ஏ. சோதனையின் மூலம் இந்த உண்மையை நான் தெரிந்து கொண்டேன்." என ரிச்சர்ட் பிரான்சன் ஒருமுறை பேசியிருக்கிறார்.

இந்தியப் பரம்பரையில் ஒரு விண்வெளி டூரிஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு