Published:Updated:

மென்பொருள் துறையில் வெள்ளிவிழா... Zoho சாதித்த கதை!

Zoho
Zoho

உலகம் முழுவதும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது இந்நிறுவனம், இன்று 25-வது ஆண்டை நிறைவு செய்கிறது.

Zoho... தமிழகத்தில் இருந்துகொண்டு இந்தப் பெயரைத் தெரியாமல் இருக்க முடியாது. சென்னையில் ஒரு குட்டி அபார்ட்மென்டில் சிறிய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்டு இன்று உலகளவில் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ஓர் இந்திய நிறுவனம். 1996-ல் தொடங்கப்பட்ட Zoho இன்றுடன் தனது 25-வது வருடத்தை நிறைவு செய்கிறது. இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கப்பட்டாலும், அதன் உலகளாவிய தலைமையகமாகச் சென்னையும், கார்ப்பரேட் தலைமையகமாக கலிஃபோர்னியாவின் பிளசன்டனும் (Pleasanton) இருக்கின்றன.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

இந்நிறுவனத்தை நிறுவியவர் தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு. கடந்த குடியரசு தின விழாவில்தான் இவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பத்மஸ்ரீ விருது பெற்றார். ஸ்ரீதரின் தந்தை உயர்நீதிமன்ற ஸ்டெனோகிராபர். அரசு உதவிபெறும் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த ஸ்ரீதர், சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பைத் முடித்தவர். பின்னர் 1989-ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர் குவால்கம் நிறுவனத்தில் இரண்டாண்டுகள் பணியாற்றிய அவர், 1996-ல் AdventNet.Inc என்ற பெயரில் டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் ஒரு சிறிய வீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

நெட்வொர்க் உலகில் நிறைய இடைவெளிகள் இருந்த காலம். Protocol Adapter, Software Agent, Stimulation Toolkits போன்ற நுண் இணையத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகம் இருந்த காலம். இவற்றை அலுவலக நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கணினிகளிலும் புகுத்திவிட்டால் ஓர் அட்மின் கணினியில் இருந்து எல்லாவற்றையும் கண்காணிக்க, வேண்டிய செயல்களையும் செய்ய முடியும். Original Equipment Manufacture என்று குறிப்பிடப்படும் பெரிய வகை தொழில்சாலைகளுக்கு இது இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய உதவி செய்தது. பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த மனிதசக்தியை இது வெகுவாக குறைத்தது.

Zoho Chennai Headquarters
Zoho Chennai Headquarters

இதைச் செய்துகாட்டிய இவர்களின் முதல் தயாரிப்பு WebNMS ஒரு வருடத்திலேயே ஹிட். இந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய நெட்வொர்க் சாதன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் ஜோஹோவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாங்கினார்கள். அதுதான் இவர்களின் முதல் வெற்றி. அந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் எளிமையாக்கி சிறிய, நடுத்தர கம்பெனிகள் முதல் பெரிய கம்பெனிகள் வரை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கினார்கள். வெகு விரைவிலேயே இவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாத நெட்வொர்க் நிறுவனங்களே இல்லை எனும் அளவிற்கு வளர்ந்தது Zoho.

ஆனால், வாழ்க்கை என்றால் வளர்ச்சி மட்டும் அல்லவே, வீழ்ச்சியும் சேர்ந்ததுதானே. 2001-ல் நெட்வொர்க்கிங் சார்ந்த நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் துவங்கின. அவற்றில் Zoho-வும் ஒன்று. 2002-ல் 150 வாடிக்கையாளர்கள் கொண்டிருந்த Zoho, அனைத்து வாடிக்கையாளர்களையும் இழந்து 3 வாடிக்கையாளர்களுடன் வீழ்ச்சி கண்டது. அந்த நேரத்தில்தான் ஸ்ரீதர் வேம்புவும் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்றிருந்தார். இந்த வீழ்ச்சி அந்நிறுவனத்தைச் சரியான பாதையில் திருப்பியது என்றுதான் சொல்ல வேண்டும். நெட்வொர்க்கிங்கை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என Manage Engine-ஐ உருவாக்கினார். இப்படித்தான் மீண்டும் Zoho வளரத் தொடங்கியது. ஒரு கதவு மூடப்பட்டால், மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது, புதிய கதவுகளை நாமே உருவாக்க வேண்டும். அதற்குச் சிறந்த உதாரணமாக Zoho-வைச் சொல்லலாம்.

2003-ல் Zoho-உடன் தொடங்கப்பட்ட பல ஸ்டார்ட்அப்கள் காணாமல் போயிருந்தன. ஆனால், Zoho பல பக்கங்களிலும் கிளைகள் விட்டு வளரத் தொடங்கியிருந்தது. 2005-ல் Zoho University-யையும் உருவாக்கினார்கள். படிப்பதற்கு வசதியின்றி கல்லூரிப் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் Zoho பட்டறையில் பயிற்சி பெற்று Zoho-விலேயே பணியிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 2009-ல் AdventNet என்ற பெயர் Zoho Corp ஆக மாறியது.
ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

இதன் போட்டியாளரான Salesforce நிறுவனமே Zoho-வை வாங்குவதற்காக அதீத ஆர்வம் காட்டிய போதிலும், ஸ்ரீதர் அதனை மறுத்துவிட்டார். Zoho நிறுவனம் தொடங்கியதிலிருந்தே எந்த விதமான வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவி பெறவில்லை. எல்லா நிதியும் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்டவையே. Zoho-வின் 88 சதவிகித பங்குகள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களிடமே உள்ளது.

இன்று Zoho.com, WebNMS மற்றும் Manage Engine என்று மூன்று குடைகளின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் தயாரிப்புகளுடன் 4000 ஊழியர்களுக்கும் மேல் உலகமெங்கும் பறந்து விரிந்திருக்கிறது Zoho. உலகம் முழுவதும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது இந்நிறுவனம், இன்று 25-வது ஆண்டை நிறைவு செய்யும் Zoho-விற்கு நாமும் நம் வாழ்த்துக்களைச் சொல்லலாமே!

அடுத்த கட்டுரைக்கு