Published:Updated:

ஏர்டெல்: மீண்டும் `1 GB - 100 ரூபாய்'... சுனில் மிட்டல் சொல்லும் கணக்கு என்ன?

ஏர்டெல்: மீண்டும் '1 GB- 100 ரூபாய்'
ஏர்டெல்: மீண்டும் '1 GB- 100 ரூபாய்'

இந்த அளவுக்கு உடனடியாக விலை உயருமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை நோக்கியே இனி ஏர்டெல் பயணிக்கும் எனத் தெரிகிறது.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்குகொண்ட பாரதி ஏர்டெலின் நிறுவனரும், தற்போதைய தலைவருமான சுனில் பாரதி மிட்டல், "விரைவில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் டேட்டாவுக்கு அதிக தொகை கட்டவேண்டியதாக இருக்கும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

6, 7 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் டேட்டா விலை ஒரு GB-க்கு 90-100 ரூபாய் இருந்தது. இதை மொத்தமாக மாற்றியது ஜியோவின் வருகை. இலவச அழைப்புகள், மிகவும் மலிவான விலையில் டேட்டா என அதிரடியாகக் களமிறங்கியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. ஜியோ என்ற அடைமொழியுடன் புதிய கான்டக்ட்கள் நம் போனில் உருவாகின. வேறு வழியில்லாமல் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் மொபைல் டேட்டா விலைகளைக் குறைத்தன. இந்தப் போட்டியில் ஏர்செல் போன்ற பல நிறுவனங்களும் காணாமலேயே போயின. பல நிறுவனங்கள் இருந்த இந்திய டெலிகாம் சந்தையில் இன்று வெறும் நான்கு நிறுவனங்கள் (ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல்) மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

டெலிகாம்
டெலிகாம்
HASIF KHAN

இதில் ஜியோவுடன் ஓரளவு போட்டி போட்டுவருவது ஏர்டெல் மட்டும்தான். நடுவில் வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்றெல்லாம் யோசித்தது. சமீபத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட அறிக்கையில் கூட ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்துவருவது தெளிவாகத் தெரிந்தது.

அந்த அறிக்கையின்படி மே மாதம் ஜியோ 36 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது. ஏர்டெல், வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களுமே 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கின்றன. இப்படியான சூழலில்தான் பாரதி மிட்டல் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சுனில் மிட்டல்
சுனில் மிட்டல்

"இப்போது 160 ரூபாய்க்கு மாதம் 16 GB டேட்டா பயன்படுத்துகின்றனர் வாடிக்கையாளர்கள். அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் இருப்பது போல ஒரு மாத டேட்டாவுக்கு 50, 60 டாலர் எல்லாம் நாங்கள் கேட்கப்போவதில்லை. ஆனால் ஒரு மாதத்திற்கு 16 GB டேட்டாவை 2 டாலருக்கும் குறைவான தொகையில் கொடுத்துக்கொண்டு ஏர்டெல்லால் நீண்டகாலம் நிலையாக இயங்க முடியாது" என்ற அவர், 160 ரூபாய்க்கு 16 GB கொடுப்பது துயரம் என்று தெரிவித்தார்.

"இந்த விலைக்கு பயனாளர்கள் 1.6 GB டேட்டாதான் பெற வேண்டும். அதுதான் சரி!"
பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்
மிட்டல் அறிவிப்பின்படி விரைவில் ஏர்டெல் விலைகள் உயரும் என்பது கணிக்கப்படுகிறது. 160 ரூபாய்க்கு 1.6 GB என்பது 5, 6 வருடங்களுக்கு முன்னிருந்த 1 GB-க்கு 100 ரூபாய் என்ற பழைய விலை. அந்த அளவுக்கு உடனடியாக விலை உயருமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை நோக்கியே இனி ஏர்டெல் பயணிக்கும் எனத் தெரிகிறது.
ஜியோ Vs ஏர்டெல்: டெலிகாம் யுத்தத்தில் முதலிடம் யாருக்கு?

ARPU (Average Revenue Per User)

ஒரு வாடிக்கையாளரிடம் நிறுவனம் பெரும் சராசரி வருமானத்தை Average Revenue Per User அழைப்பார்கள். இது ஏர்டெலுக்கு மிகவும் குறைவாக இருப்பதாகவும், டெலிகாம் சந்தை ஆரோக்கியமாக இருக்க ARPU இப்போது இருப்பதிலிருந்து குறைந்தபட்சம் 27 சதவிகிதமாவது உயர வேண்டும், அதாவது 300 ரூபாயாவது இருக்கவேண்டும் என்கிறார் சுனில் மிட்டல்.

ஏர்டெல்லில் தற்போது குறைந்தபட்சமாக 45 ரூபாய் கட்டினால் ஒரு மாதத்திற்கு இன்கம்மிங் அழைப்புகளை மட்டும் பெறமுடியும்.

சுனில் மிட்டலின் இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு